தேர்தல் விதிமுறை எவ்வளவு பணம் கொண்டுபோகலாம்..?

விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா

இன்று மாலை தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான தேதி அட்டவணை வெளியிடப்படும் என்று தெரிகிறது. தேர்தல் நாள் அறிவித்ததும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். இந்த மாடல் கோடு ஆஃப் காண்டக்ட் எனப்படும் தேர்தல்நடத்தை விதிகளில் என்னவெல்லாம் நடைமுறைக்கு வரும் என்பதை விளக்குகிறார் வழக்கறிஞர் நிலா.

இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்தவுடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இனி கிடையாது.

ஆளும் கட்சிக்கு அதிகாரம் இல்லை.

எந்த ஒரு புதிய திட்டம் அல்லது அறிவிப்பு அல்லது புதிய சலுகை வழங்கக் கூடாது. முதல்வர், அமைச்சர்கள் அரசின் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, திறப்பு விழாக்கள் தடை விதிக்கப்படும். அரசு நிதியைப் பயன்படுத்தி பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்தக் கூடாது. அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசு வாகனங்கள், அரசு விருந்தினர் மாளிகைகள் மற்றும் அரசுப் பணத்தைப் பயன்படுத்தக் கூடாது.

அதிகாரிகளுக்கு அதிக அதிகாரம்.

மாநிலத்தின் காவல்துறை மட்டுமின்றி தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அரசு அதிகாரிகளும் நேரடியாகத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துவிடுவார்கள். தேர்தல் ஆணையத்தின் முன் அனுமதியின்றி எந்த ஒரு அதிகாரியையும் டிரான்ஸ்பர் செய்ய, பதவி உயர்வு வழங்க முடியாது.

பறக்கும் படை

வாக்காளர்களுக்குப் பணம், மது மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெறும். பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி 50,000-க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்படும்.

விளம்பரத்துக்குத் தடை

பொது இடங்கள், அரசு பேருந்துகள், அரசு கட்டிடங்கள் மற்றும் சுவர்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், பேனர்கள் உடனடியாக அகற்றப்படும். அரசு அலுவலகங்களில் உள்ள முதலமைச்சர், பிரதமரின் புகைப்படங்கள் மற்றும் சிலைகள் (அரசியல் தலைவர்கள்) துணியால் மறைக்கப்படும். பொதுக்கூட்டங்கள் நடத்தவும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தவும் காவல் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தவோ, பிரச்சாரம் செய்யவோ தடை இருக்கும்.

Leave a Comment