• Home
  • அரசியல்
  • தேர்தல் புறக்கணிப்பு ராஜதந்திரமா.. டெபாசிட் பயமா..?

தேர்தல் புறக்கணிப்பு ராஜதந்திரமா.. டெபாசிட் பயமா..?

Image

எடப்பாடி பழனிசாமிக்குக் கேள்விகள்

தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையில் ஈரோடு கிழக்கு தேர்தலை எடப்பாடி பழனிசாமி புறக்கணிப்பு செய்திருப்பது அ.தி.மு.க.வினரை சோர்வடையச் செய்திக்கிறது. வெற்றியோ, தோல்வியோ போராட வேண்டும், அ.தி.மு.க. வலுவாக உள்ள கொங்குபெல்ட் என்பதை எல்லாம் எடப்பாடி பழனிசாமி மறந்துவிட்டார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதேநேரம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள், ‘’இடைத்தேர்தலில் கட்சி போட்டியிட வேண்டுமா என்பது அன்றைய அரசியல் சூழ்நிலையை பொறுத்து முடிவு எடுக்க வேண்டுமே தவிர உணர்ச்சி பூர்வமாக,தன்னை நிரூபிக்க முடிவுகள் எடுக்க தேவையில்லை.இதை ஒரு கௌரவமாக கருதி எல்லாம் நிற்க வேண்டியதில்லை‌. முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா ,கலைஞர் எதிர்கட்சி தலைவர்களாக இருந்தபோதும் திமுக அதிமுக இரு கட்சிகளும் தேர்தல்களை புற்க்கணித்தவை தான்

.2011 முதல் 2019 வரை தொடர்ந்து 13 தேர்தல்கள் தோற்ற திமுக பல இடத்தேர்தல்களை புறக்கணித்தது தான். போன ஈரோடு இடைத்தேர்தலில் பொது மக்களை, எதிர்க் கட்சி பிரச்சாரத்திற்கு கூட போக விடாமல் மக்களை பட்டியில் அடைத்து அவர்களை காலை முதல் இரவு வரை ஒரு மாதம் பணம் கொடுத்து தங்க வைத்து நடந்த கூத்துகளை தமிழகமே கண்டபோதும் தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளாமல் கைவிரித்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியது அனைவரும் அறிந்தது தான். தமிழ்நாடே கண்டது.

திமுக தேர்தலில் எப்படியாவது ஜெயிக்க மொத்த அமைச்சரவையும்,பணமும் வீதி வீதியாக களம் இறக்கியது. இந்த சூழ்நிலையில் அதிமுக கட்சி இடைத்தேர்தலை சந்தித்து திமுகவுக்கு கடுமையான போட்டியை கொடுக்க வேண்டுமானால் வெறும் தீவிரமான பிரச்சாரம் மட்டும் செய்தால் போதாது 200 முதல் 300 கோடி வரை செலவு செய்ய வேண்டும். அப்படி ஒரு தொகுதிக்கு வெறும் கௌரவத்திற்காக ஒரு வருடத்திற்காக செலவு செய்வது தேவையுமில்லை, அவசியமில்லை. இரண்டாவது அதிமுக நின்றால் திமுக அதை தனது கௌரவமாக கருதி கடுமையான அதிகார பலம் கொண்டு தேர்தலில் எல்லா குறுக்கு வழிகளை கையாளும் என்பதை போன ஈரோடு இடைத்தேர்தலே உணர்த்தியது தான்.

மூன்றாவது விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகம் நின்றிருந்தால் கண்டிப்பாக அதிமுக நின்றிருக்க வேண்டும் ஆனால் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை புறக்கணிப்பதால் அதிமுக,தேதிமுக தேர்தலை புறக்கணிப்பது தவறில்லை. ஒருவன் இறுதி போட்டிக்காக பயிற்சிக்கு தயாராகும் போது அவன் இறுதி போட்டியில் வெற்றி பெறுவதறாகாக தனது பயிற்சியை,கவனத்துடன் மேற்கொள்ள வேண்டுமே தவிர பயிற்சிக்கு நடுவில் கவனத்தை திசைதிருப்பி இடையிலேயே போட்டிக்கு சென்று தன்னை தேவையில்லாமல் வெளிப்படுத்தினால் அதுவும் கூட பலவீனத்தை வெளிப்படுத்துவது போலாகும். எனவே அ.தி.மு.க. மொத்த சக்தியையும் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பயன்படுத்தி அடுத்து ஆட்சியை பிடிப்பது தான் ஓரே குறிக்கோளாக இருக்க வேண்டும். இது சரியான நிலைப்பாடு என்கிறார்கள்.

ஆனால் அ.தி.மு.க.வில் சிலர், ‘’ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ்தான் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேரடியாக திமுகவே களமிறங்கியதும், அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச்செயலாளரான வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் மற்ற கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்தே, நேற்று நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்துக்கு பின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக அறிவித்துள்ளது.

கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 44.27 சதவீத வாக்குகளையும், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர் யுவராஜா 38.41 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். கடந்த 2023ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 64.58 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு 23 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். கடந்த 2021ல் நடைபெற்ற தேர்தலை விட 2023 இடைத்தேர்தலில் திமுக கூட்டணி 20 சதவீதத்திற்கும் மேல் கூடுதலாக வாக்குகளை பெற்றிருந்தது.

மேலும், திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் ஏற்கனவே இந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றவர் என்பதோடு தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். இது தவிர, தமிழக அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயனடைந்தவர்கள், சிறுபான்மையினர் வாக்குகள் என அனைத்தும் திமுகவிற்கு சாதகமாக உள்ளதால் இந்த முறை அதிமுக போட்டியிட்டால் டெபாசிட் கிடைப்பதே கஷ்டம் என்று சிலர் சொன்னதைக் கேட்டு எடப்பாடி பழனிசாமி தேர்தலில் இருந்து விலகியிருக்கிறார்.

இதன் மூலம் தி.மு.க.வுக்கு சரியான போட்டி பா.ஜ.க. என்று மக்கள் நினைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி வழி செய்துவிட்டார். எம்.ஜிஆர். ஆட்சி காலத்தில் தி.முக. மீண்டும் மீண்டும் தோல்வி அடைந்தது என்றாலும் எதிர்த்து நிற்கத் தயங்கியதில்லை. இப்போது பா.ஜ.க.வுக்கு இதன் மூலம் செல்வாக்கு அதிகரிப்பது எதிர்காலத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும் சிக்கலாக மாறிவிடும். இதை எடப்பாடி பழனிசாமி உணரவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது’’ என்கிறார்கள்.

Leave a Comment