அரசியல் ஆருடம்
விஜய் கட்சி தொடங்கியிருக்கும் நிலையில், சீமான் கட்சியின் கணிசமான வாக்குகள் திசை மாறும் என்று சொல்லப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது கட்சிக்கும் பேராபத்து என்று எச்சரிக்க வந்திருக்கிறது.
விஜய் மாநாடு நடக்கயிருக்கும் சூழலில் முன்னாள் அ.தி.மு.க. எம்.பியான கே.சி.பழனிசாமி, ‘’2005-ல் தி.மு.க., அ.தி.மு.க. என்கிற இரு துருவ அரசியலுக்கு மாற்று நான் தான் என்பதை முன்வைத்து விஜயகாந்த் களத்திற்கு வந்தார். 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 8.33 சதவீத வாக்குகளோடு ஒரே ஒரு தொகுதியாக விருத்தாசலத்தில் தனது சட்டமன்ற தேர்தல் வெற்றியையும் அவர் பதிவு செய்தார்.
ஆனால் அந்த ஒரு தேர்தலோடு தனித்து போட்டி என்பதை தாக்குப்பிடிக்க முடியாமல் 2011-ல் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி எதிர்க்கட்சி இருக்கையை பெற்றதோடு தான் முன் வைத்த மாற்றத்திற்கான அரசியலை அவரே முடிவுக்கு கொண்டு வந்தார். இப்போது 2024-ல் நடிகர் விஜய் அதே தி.மு.க.- அ.தி.மு.க. என்கிற இருதுருவ அரசியலுக்கு மாற்றாக தன்னை முன்னிறுத்த அரசியல் கட்சி தொடங்கி தனது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்துகிறார்.
அன்றைக்கு விஜயகாந்தின் வளர்ச்சிக்கு தடை போட்ட புரட்சித்தலைவி அம்மா, கலைஞர் என்கிற ஆளுமைகள் இன்றைக்கு இல்லை. ஆனாலும் அன்று விஜயகாந்தின் கட்சிக்கு தி.மு.க.வில் இருந்து பெரிய அளவில் யாரும் போகாத நிலையில் புரட்சித்தலைவி அம்மாவிடம் 1991 முதல் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த கு.ப.கிருஷ்ணன், கல்வி அமைச்சராக இருந்த மருங்காபுரி பொன்னுச்சாமி ஆஸ்டின் மட்டுமல்லாது அண்ணாவின் அரசியல் பாசறையில் பயின்ற பண்ருட்டி ராமச்சந்திரனே விஜயகாந்துடன் இணைந்து அக்கட்சிக்கு அவைத்தலைவர் ஆனார்.
அதேபோல் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒருங்கிணைக்க தவறினால் அவரால் நீக்கப்பட்டவர்கள், அதிருப்தியில் உள்ளவர்கள் மற்றும் ஓரம்கட்டப்பட்டவர்கள் அணி திரண்டு நேரடியாகவோ, கூட்டணியாகவோ விஜயோடு கைகோர்க்கிற சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே இதை உணர்ந்து ஒன்றுபட்ட அதிமுகவை உருவாக்குவது எதிர்காலத்திற்கு நல்லது’’ என்று கூறியிருக்க்றார்.
இவரது ஆருடம் பலிக்குமா என்று பார்க்கலாம்.