அதிர்ச்சியில் ஹெச்.ராஜா
இந்த வாரம் டெல்லி செல்ல இருக்கும் பா.ஜ.க. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா மீண்டும் அ.தி.மு.க. கூட்டணிக்கு மேலிடத்தில் அனுமதி பெற்றுவருவார் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு போதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி அறிவிப்பு செய்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘’தீயசக்தி என அதிமுக தலைவர்களால் தொடர்ந்து கூறப்படும் கருணாநிதிக்கு நாணயம் வெளியிட்டவர்கள் உடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது. அது அரசு நிகழ்வு தான். ஆனால் கருணாநிதிக்கு புகழ் சேர்ப்பவர்களுடன் இணைவதை விட, அதிமுக தனித்து கூட்டணி அமைப்பதே மேல்.’’ என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
அண்ணாமலை தலைமைப் பொறுப்பில் இருந்து அகற்றிவிட்டால் கூட்டணிக்குத் தடை இருக்காது என்று தமிழக பா.ஜ.க.வினர் எதிர்பார்க்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இதையடுத்து எடப்பாடி அணியை உடைக்கும் வேலைகள் ஆரம்பமாகும் என்கிறார்கள்.
தங்கமணி, வேலுமணியை இணைத்து ஓர் அணி உருவாக்கவும், அவர்கள் மூலம் இரட்டை இலை முடக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது தே.மு.தி.க.வும் பா.ஜ.க. மீது பாசமாக இருப்பதும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. ஆகவே, அ.தி.மு.க. ஒருங்கிணைப்புக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதோடு எடப்பாடி பழனிசாமி, ‘’தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கிறது. தினமும் தலைப்புச் செய்திகளை அலங்கரிக்கும் அளவிற்கு கொலைகளை மிக இயல்பாக்கியதே இந்த விடியா திமுக அரசின் மூன்றாண்டு சாதனை. வெளிநாட்டில் அமர்ந்தவாரே கோப்புகளில் கையெழுத்து இடுவது போல் போட்டோஷூட் நடத்திய விடியா திமுக முதல்வர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று ஒருமுறையாவது கேட்டறிந்தாரா?’’ என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.