புலம்பும் அ.தி.மு.க. பெருசுகள்
கள்ளக்குறிச்சிட் கள்ளச்சாராய விவகாரத்திற்கு கருப்புச்சட்டை அணிந்து தினம் ஒரு போராட்டம் நடத்திவருகிறார் எடப்பாடி பழனிசாமி. இன்றைய தினம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஸ்டாலினை பதவி விலகக் கோரி வருகிறார்.
இன்று அவர், ’’கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் குறித்து எனது தலைமையிலான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நேர்மையான விவாதம் நடத்த பல முறை சட்டமன்றத்தில் முயன்றும் திமுக முதல்வர் தயங்குவது ஏன்? கள்ளச்சாராய மரணங்கள் 60-ஐ தாண்டியுள்ள நிலையில், இன்றுவரை கள்ளக்குறிச்சி சென்று மக்களை சந்திக்காதது ஏன்? பயமா ஸ்டாலின்?. கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரிப்பதோடு, இதற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் சிலர் ஆதங்கக் கடிதம் ஒன்று அனுப்பியிருக்கிறார்கள்.
அந்த கடிதத்தில், ‘’நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபிறகு அ.தி.மு.க.வில் ஆலோசனை நடத்தப்பட்டு மந்தமான ஆட்கள் மாற்றப்பட்டு, உழைப்பாளிகளுக்கு இடம் கிடைக்கும் என்று நம்பியிருந்தோம், ஆனால், இது வரை எதுவுமே நடக்கவில்லை.
நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 வென்ற திமுகவே ஆலோசனை கூட்டம் நடத்தி தேர்தல் பணிகளில் சுணக்கம் காண்பித்த மாவட்ட செயலாளரின் பதவியை பறித்து சில முக்கிய நிர்வாகிகளை மற்றும் முடிவில் உள்ளது. தமிழக பா.ஜ.க.வினர் கூட சில ஒன்றிய குழுக்களைக் கலைத்து மாவட்ட தலைவர்களை நீக்கியுள்ளது.
ஆனால் அதிமுகவில் மட்டும் அப்படி எதுவுமே நடக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் தொகுதியில் மட்டுமே ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது. அதுவும், தேர்தல் செலவு குறித்து கணக்கு காட்டுவதற்க்ஃபு என்று சொல்லப்படுகிறது.
இதுவரை தமிழ்நாட்டு அரசியல் திமுகவுக்கும் அதிமுகவுக்குமான போட்டியாகவே இருந்தது ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சரிந்த திமுக வாக்குகள் அதிமுகவிற்கு வரவில்லை. அதிமுக சிட்டிங் எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் 56 தொகுதிகளில் கட்சி இரண்டாமிடம், மூன்றாமிடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
குறிப்பாக தென் சென்னை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய எட்டு மக்களவைத் தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துவிட்டது.
ஒன்பது தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கும் இரண்டு தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. அம்மா காலத்தில் தேர்தலில் வெற்றிபெற்றாலும், பெறாவிட்டாலும்மூத்த தலைவர்களை வைத்து ஆலோசனை குழு ஒன்றை அமைப்பார் அந்த குழு அறிக்கை படி அதிமுகவில் பதவி உயர்வும் நீக்கமும் இருக்கும். ஆனால் நீங்கள் பொறுப்பிற்கு வந்ததில் இருந்து இதுபோன்ற நடைமுறையே இல்லாமல் போய்விட்டது.
இனியாவது பொறுப்புள்ள கட்சித் தலைவராக நடந்துகொள்ளுங்கள். இப்போதே சீர்திருத்தம் செய்தால் மட்டுமே 2026 தேர்தலில் வலிமையுடன் போராட முடியும்’’ என்று கேட்டுக்கொண்டுள்ளனர். என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி?