சரியான நேரத்துக்கு சாப்பிடுவதும் நோய்

ஆசிரியர் பார்வை

வயிறு என்பது இரண்டாவது மூளை. அதனாலே அச்சம், ஆபத்து வரும்போது வயிற்றை முதலில் கலக்குகிறது. எனவே, மூளை போன்று வயிறுக்கும் போதிய கவனம் கொடுக்க வேண்டும்.  

வயிறு ஆரோக்கியத்தைப் பாதுகாக்க நினைப்பவர்கள், சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக்கொள்கிறார்கள். அதாவது, சரியான நேரத்துக்கு சாப்பிடுவது மட்டுமே வயிறுக்கு நல்லது நம்புகிறார்கள்.

உடலுக்கு உணவு எப்போது தேவை என்பது வயிற்றுக்குத்தான் நன்றாகத் தெரியும். ஆனால், கடிகாரத்தைப் பார்த்தே நிறைய பேர் சாப்பிடுகிறார்கள். சரியான நேரத்திற்கு சாப்பிடுவது மட்டுமே ஆரோக்கியம் என்ற நம்பிக்கை முழு உண்மை இல்லை. சரியான நேரத்துக்கு சாப்பிட்டே ஆகவேண்டும் என்று படபடப்பதும் ஒரு நோய்.

பொதுவாக சரியான நேரத்தில் சாப்பிடுபவர்களுக்கு உணவு எளிதாக செரிமானம் ஆகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருப்பதால் நீரிழிவு நோய் அபாயம் குறைகிறது. இன்சுலின், கோர்டிசோல் போன்ற ஹார்மோன்கள் சரியான நேரத்தில் செயல்படுவதற்கும் சரியான நேரத்தில் சாப்பிடுவதற்கும் தொடர்பு இருக்கிறது. இவர்களின் மெட்டபாலிசம் சீராக இருப்பதால் கொழுப்பு சேர்வது குறைகிறது. நல்ல உறக்கம் வருகிறது, மனஅழுத்தம் குறைகிறது.

சரியான நேரத்தில் சாப்பிடுவதால் நன்மைகள் இருக்கின்றன என்றாலும் சில தீமைகளும் உண்டு.

அதாவது ஒருவரது வயது, வேலை, காலநிலை, மனநிலை போன்றவையே சாப்பாட்டு நேரத்தைத் தீர்மானிக்கிறது. இது, ஒவ்வொரு நபருக்கும் ஒரு வகையில் அமையும். எனவே, நேரம் பார்த்து சாப்பிடுவதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.

ஏனென்றால் பசி இல்லாமல் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு பசி உணர்வு மரத்துப் போகிறது, ருசியுணர்வு குறைகிறது. மேலும், உணவை ஜீரணம் செய்வதற்கு உடல் அதிக அமிலம் சுரக்க வேண்டியதாகிறது. இதனால் வயிற்றுப்புண், நெஞ்செரிச்சல், எதுக்களித்தல் உருவாகலாம்.

பசி எடுக்கும் நேரமே சாப்பிடுவதற்கு சரியான நேரம். கடிகாரத்தைவிட வயிறு சொல்வதைக் கேளுங்கள், நோயின்றி வாழுங்கள். 

எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment