காது, இனி கேட்காது

Image

இயர்போன் வேண்டாம்.. ஹெட்போன் மாட்டுங்க..!

எந்த நேரமும் செல்போனில் இருப்பதை இளம் சமுதாயத்தினர் ரொம்பவே விரும்புகிறார்கள். இது ஒரு வகையில் அக்கம்பக்கத்து நபர்களிடம் தேவையில்லாத விஷயங்கள் பேசுவதையும், வம்பு வளர்ப்பதையும் குறைக்கிறது. அதேநேரம் எல்லை மீறுகிறார்கள். அமிர்தமே என்றாலும் அளவுக்கு அதிகம் எடுத்துக்கொள்வது ஆபத்து எனும்போது இயர்போனுக்கும் விதிவிலக்கு இல்லையே. அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துபவர்களுக்கு காது கேளாமை மட்டுமின்றி இதயம் மற்றும் மூளை பாதிப்பு என பல்வேறு நோய்கள் வரிசை கட்டுகின்றன.

கவனச்சிதறல்

தண்டவாளங்களை கடக்கும் சிலர் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அவ்வப்போது நடக்கிறது. இவர்களில் பெரும்பாலோர் காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு அதில் மூழ்கியிருப்பதால் ரயில் வரும் சத்தம் கேட்காமல் விபத்தில் சிக்குகிறார்கள். அந்த அளவுக்கு கவனச்சிதறல் ஏற்படுகிறது.

தொடர்ந்து அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துபவர்களுக்கு அன்றாட நடவடிக்கைகளிலும் கவனக்குறைபாடு ஏற்படுகிறது. படிப்பு, வேலையில் முழு கவனம் கொடுத்து செயல்பட முடியாமல் போகிறது. கண்ணுக்கு முன் நிகழும் காட்சிகளை கவனிப்பதிலும், கிரகிப்பதிலும் அக்கறை குறைகிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை கூற வேண்டிய அவசியம் உண்டாகிறது.  இதன் மூலம் சமூக வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. தேவையில்லாமல் பதட்டம் உண்டாவதும், மன அழுத்தம் ஏற்படவும் செய்கிறது. செய்யும் வேலையில் அதிக தவறுகள் ஏற்படுவதற்கும் காரணமாகிறது. ஒரு கட்டத்தில் பாடல்கள் கேட்காமல் வேலை செய்ய முடியாத அளவுக்கு அடிமையாகிறார்கள்.

இதயத்துக்குச் சிக்கல்

இயர்போன்களை அதிகநேரம் காதில் மாட்டிக்கொண்டு இசை கேட்பதால் காதுகளுக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் சிக்கல் ஏற்படுகிறது. நல்ல இசை அமைதியைக் கொடுப்பது போன்று துள்ளல் இசை ரத்தத்தை துடிக்க வைக்கிறது. அதிக நேரம் துள்ளல் இசையைக் கேட்பதன் காரணமாக ரத்த அழுத்தம் மாறுதலடைந்து இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இது நாட்பட்ட இதய நோய்க்குக் காரணமாகலாம்.

நிரந்தர செவிட்டுத்தன்மை

சத்தங்கள் டெசிபல் என்ற அளவீடுகளில் அளக்கப்படுகின்றன. அதாவது 60 டெசிபல்களுக்கு குறைவாக இருப்பது நல்லது. 85 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடிய சத்தத்தை தொடர்ந்து கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். பொதுவாக மெலோடு பாடல்கள் 60 டெசிபல் அளவிலும் உற்சாகமூட்டும் குத்துப் பாடல்கள் 100 டெசிபில் அளவுக்கும் இருக்கின்றன. இந்த பாடல்களை அதிக நேரம் கேட்பது காதுகளின் உயிரணுக்களை பாதிக்கிறது. இந்த உயிரணுக்கள் முழுமையாக சேதம் அடைந்துவிட்டால், அதன்பிறகு அதனை சரி செய்யவே முடியாது. இதன் காரணமாக நிரந்தர காது கேளாமை ஏற்படலாம்.

எனவே, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக இயர்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இயர்போன்களுக்கு பதில் ஹெட்போன்களை பயன்படுத்தலாம். ஹெட்போனை காதுகளுக்குமேல் வைத்துக் கேட்பதால் அதில் இருந்து வெளியாகும் சத்தம் செவிப்பறையில் நேரடியாகப் பாதிப்பை உண்டாக்குவதில்லை.

ஹெட்போன் என்றாலும் அரை மணி நேரத்திற்குப் பிறகு 5 நிமிடங்களாவது ஓய்வு அவசியம். எந்த காரணம் கொண்டும் காதில் இயர்போன் மாட்டிக்கொண்டு மூன்று மணி நேரத்திற்கு மேல் செலவிடாதீர்கள். அது, செவிட்டுத்தன்மைக்கு கொடுக்கும் வரவேற்பு.

Leave a Comment