கவுன்சிலிங் கதை – எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
லீடு : தொட்டாற்சிணுங்கி போன்று ஒரு சில பிள்ளைகள் சட்டென சுருங்கிவிடுகிறார்கள். அவர்களுக்கு கவுன்சிலிங் கை கொடுக்கிறது.
அமுதா வீட்டுக்கு ஒரு துள்ளலோடு வந்தாள். முகமெல்லாம் மலர்ச்சி.
அதை பார்த்த அம்மா ராஜேஸ்வரி, ‘’என்னாச்சு, இன்னைக்கு எங்க தங்கம் ரொம்பவும் ஜொலிக்குது’’ என்றபடி வரவேற்றாள்.
அமுதா குஷியுடன், ‘’இன்னைக்கு எங்க மிஸ் என்னை டீச்சர்ஸ் ரூமுக்குக் கூப்பிட்டாங்க. நாளைக்கு நான் பிரேயர்ல பேசவேண்டிய ஜான்சி ராணி கதையை சொல்லச்சொன்னாங்க. கடகடன்னு சொன்னேன். அதனால டீச்சர், ‘சூப்பரா சொல்றே… எல்லோரும் நாளைக்கு கை தட்டுவாங்க’ன்னு பாராட்டுனாங்க. எனக்கு ரொம்பவும் ஜாலியா இருக்கு…’’
‘’நீ பேசுறதை நான் பார்க்க முடியாதா..?’’
‘’அதெல்லாம் யாரையும் பிரேயர் ஹால்ல விட மாட்டாங்க…’’ என்ற நேரத்தில் அப்பாவும் வந்து சேர்ந்தார். அம்மாவிடம் சொன்னதையே அப்பாவிடமும் சொன்னாள் அமுதா.
‘’ஸ்கூலுக்கு வரக்கூடாதுன்னு சொல்றே, எங்களுக்காகக் கொஞ்சம் பேசிக் காட்டு’’ என்றாள் அம்மா. அப்பாவும் அப்படியே கேட்டதும், ‘’சிரிக்கக்கூடாது, சரியா?’’ என்றபடி ஜான்சிராணி வரலாற்றுக் கதையை சுவாரஸ்யமாகச் சொல்லத் தொடங்கினாள்.
பிரேயர் ஹாலில் பேசுவதற்கு என ஆசிரியை ஒருவர் தயாரித்துக் கொடுத்த ஐந்து நிமிட உரை. அதை நன்றாக மனப்பாடம் செய்து ஏற்றம் இறக்கத்துடன் பேசினாள் அமுதா. அதைக் கேட்டதும் அம்மாவும், அப்பாவும் கைதட்டி பாராட்டினார்கள். அடுத்த நாள் பள்ளியில் தனக்குக் கிடைக்க இருக்கும் பாராட்டுகளை நினைத்தபடியே தூங்கினாள்.
அடுத்த நாள் மாலை. குஷியுடன் மகள் வருவாள் என்று எதிர்பார்த்து ராஜேஸ்வரி காத்திருக்க, அவளோ அழுது வீங்கிய முகத்துடன் வந்தாள்.
‘’என்னாச்சு…’’ என்று பதட்டத்துடன் கேட்டதும் மீண்டும் அழத் தொடங்கினாள். அமுதாவுக்கு வேறு ஏதோ ஒன்று நடந்துவிட்டது என்று பயந்தே போய்விட்டார். அமுதா பேச முடியாமல் அழுதுகொண்டிருக்கவே, அவளுடைய தோழி அருணாவுக்கு போன் செய்து, ‘என்ன நடந்தது?’ என்று விசாரித்தார்.
‘’பிரேயர் ஹாலில் அமுதாவைக் கூப்பிட்டு எல்லோருக்கும் முன்னாடி நின்னு பேசச் சொன்னாங்க. வேகமா வந்த அமுதாவுக்கு திடீர்னு என்னாச்சுன்னு தெரியலை, எதுவும் பேசாம திருதிருன்னு முழிச்சிட்டே இருந்தா. பேசுன்னு மிஸ் சொன்னதும், ’நான் ஜான்சி ராணியின் வீரத்தைப் பற்றி…’’ன்னு பேச ஆரம்பிச்சவ… அதுக்குப் பிறகு பேசாம அழ ஆரம்பிச்சிட்டா. அதனால மிஸ் அவளை கிளாஸ் ரூமுக்குப் போகச் சொல்லிட்டாங்க.
பிரேயர் முடிஞ்ச பிறகு, ‘பரவாயில்லை அமுதா’ன்னு மிஸ் வந்து சமாதானப்படுத்துனாங்க. ஆனாலும், அமுதா கேட்கவே இல்லை. இன்னைக்கு முழுசும் அழுதுட்டே இருந்தா’’ என்று நடந்ததைச் சொன்னாள் தோழி.
‘’இவ்வளவுதானா… நான் வேற என்னமோன்னு நினைச்சுட்டேன்’’ என்ற ராஜேஸ்வரி, ‘’இதெல்லாம் ஒரு விஷயமா… நடந்ததை விடு அடுத்த பிரேயர்ல நல்லா பேசலாம்…’’ என்று சமாதானப்படுத்தினார். அதைக் கேட்டதும் அமுதா, ‘’இனிமே நான் அந்த ஸ்கூலுக்கே போக மாட்டேன். எல்லோரும் என்னை கேவலமா பார்ப்பாங்க… எனக்கு ரொம்பவும் அவமானமா இருக்கு’’ என்று அழுதாள்.
அன்று முழுவதும் அப்பாவும் அம்மாவும் அமுதாவை சமாதானப்படுத்தினார்கள். காலையில் அமுதா சமாதானமாகிவிடுவாள் என்றே நினைத்தாகள். ஆனால், உண்மையிலே பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அமுதா அடம் பிடிக்கத் தொடங்கியிருக்கிறாள். அதனாலே அமுதாவை அழைத்து வந்தார்கள்.
சமூக அச்சம் எனப்படும் சோஷியல் ஆன்ஸைட்டி டிஸ்சார்டர் பிரச்னையில் அமுதா மாட்டிக்கொண்டு தவிப்பது தெரியவந்தது. இதனை ஒரே நாளில் குணப்படுத்திவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக பேசியும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்துமே சரி செய்ய முடியும்.
படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தாலும் ஒரு சிலருக்கு மற்றவர்கள் முன்பு பேசுவதற்கும் செயல்படுவதற்கும் அச்சமும் தயக்கமும் இருக்கும். ஏதேனும் தவறாகப் பேசிவிடலாம் என்ற எண்ணத்தினாலே பேசுவதைக் குறைத்துவிடுவார்கள். பொது நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டார்கள். தன்னம்பிக்கை குறைந்து தனிமையைத் தேடுவார்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் அமுதா இருப்பது புரிந்தது.
அமுதாவை அழைத்துப் பேசினேன். பொதுவான சில விஷயங்களைப் பேசிவிட்டு, ‘டாக் க்ரூஸ்’ நடித்திருக்கும் ஆங்கிலப் படங்கள் ஏதேனும் பார்த்திருக்கிறாயா என்று கேட்டதும், ஒரு கணம் நெற்றியை சுருக்கி யோசித்தாள்.
டாம் க்ரூஸ் போட்டோவையும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் ஸ்டில்லைக் காட்டியதும் அடையாளம் கண்டுகொண்டாள்.
‘’ம்… மிஷன் இம்பாசிபிள் பார்த்திருக்கிறேன், சூப்பரா இருக்கும்’’ என்றாள்.
‘’ஐன்ஸ்டீன் யாருன்னு தெரியுமா?’’
’’ம்… சயின்டிஸ்ட்…’’
‘’லியோனார் டோ டாவின்ஸி..?’’
‘’ம்… ஓவியர்… மோனோலிசா ஓவியம் அவரோடது தான்…’’
‘’வெரி குட்… நிறைய விஷயம் தெரிஞ்சு வைச்சிருக்கே’’ என்றதும் கொஞ்சம் இயல்புக்கு வந்தாள். அவளுடைய அம்மா ராஜேஸ்வரி, ‘’புத்திசாலிப் பொண்ணு சார். ஆனா, இப்போ ஸ்கூலுக்குப் போக மாட்டேன்னு சொல்றா…’’ என்றார்.
’எல்லோரும் என்னை அழுகுனி அமுதான்னு கூப்பிடுவாங்க…’’ என்றதுமே அழுவது போல் முகம் மாறியது.
’’நீயாவது தனியா இருக்கும்போது நல்லா பேசுற… டாக் க்ரூஸ், ஐன்ஸ்டீன், லியோனார்டோ டாவின்ஸிக்கு எல்லாம் ஸ்கூல்ல என்ன நடந்திச்சு தெரியுமா?…’’
‘’என்னாச்சு?’’ ஆர்வமாகக் கேட்டாள் அமுதா.
‘’இவங்க எல்லோருக்குமே திக்குவாய் பிரச்னை இருந்தது. திக்கித் திக்கிப் பேசுவாங்க. அதுக்காக எல்லோரும் கிண்டல் செய்வாங்க… ஆனாலும், அவங்க அதை பெருசா எடுத்துக்காம படிச்சாங்க, அதனால ஜெயிச்சாங்க. நீயும் அப்படித்தான் முன்னேறிப் போய்க்கிட்டே இருக்கணும்…. ஒரு நாள் பேச முடியலைன்னா என்ன…? அது ஒரு விஷயமே இல்லை’’
‘’ஸ்கூல்ல மிஸ் கேள்வி கேட்பாங்க. பதில் தெரியும். ஆனாலும் சொல்லாம அமைதியா இருப்பேன்… எல்லோர் முன்னாடியும் பேசி தப்பா போயிடுச்சின்னா அசிங்கமா போயிடும்…’’
‘’அசிங்கம்னா என்ன..?’’
‘’இது கூட தெரியலையான்னு கிண்டல் செய்வாங்க…’’
‘’அப்படி யாராவது உன்னை கிண்டல் செஞ்சிருக்காங்களா..?’’
‘’இல்லை, அப்படி செஞ்சிடுவாங்கன்னு பயமா இருக்கும். அதான் நான் பேசுறதே இல்லை..’’ என்றாள்.
‘’பிறகு எப்படி பிரேயர்ல பேசுறதுக்கு சேர்ந்தே..?’’
‘’கட்டுரைப் போட்டியில நான் ஜான்சி ராணி பத்தி எழுதியிருந்தேன். அதை பார்த்துட்டு எங்க மிஸ் என்னை கம்பல் பண்ணி சேர்த்துட்டாங்க. வேண்டாம் மிஸ்ன்னு கெஞ்சுனேன். ஆனா, அவங்க கேட்கவே இல்லை. நல்லா மனப்பாடம் செஞ்சி பேசினேன். ஆனா, பிரேயர் ஹால்ல மொத்தமா நிறைய பேரைப் பார்த்ததும் பயம் வந்திடுச்சு. எதுவுமே எனக்கு ஞாபகத்துக்கு வரவே இல்லை… திடீர்னு மூளை பிளாங்க் ஆயிடுச்சு’’ என்று கண்ணீர் சிந்தினார்.
‘’இது ஒரு பிரச்னையே இல்லை…. நிறைய பிரபலங்கள் இது போல இருந்து வாழ்க்கையில ஜெயிச்சுருக்காங்க. நீயும் அப்படி ஜெயிக்க முடியும். அதுக்கு நீ முதல்ல ஆசைப்படணும்…’’
‘’ஆனா, எனக்கு நிஜமாவே பயமா இருக்கு’’ என்றாள்.
‘’தப்பு செய்யாத மனுஷங்க யாருமே கிடையாது. உங்க மிஸ் என்னைக்காவது போர்டுல எழுதும்போது தப்பா எழுதியிருக்காங்களா..?’’
‘’ம்… பிள்ளைங்க சிரிச்சதும் அழிச்சிடுவாங்க…’’
‘’அதுக்கு அழுதிருக்காங்களா… அது அசிங்கமா..?’’
பதில் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள் அமுதா.
‘’அசிங்கம், அவமானம் என்று எதுவும் கிடையாது. விராட் கோலி, டோனி, சச்சின் டெண்டுல்கர் எல்லோரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள். அவங்களும் டக் அவுட் ஆகியிருக்காங்க. அதுக்காக அழுதுட்டு இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டேன்னு போயிடுவாங்களா..?’’
இப்போது அமுதாவின் முகத்தில் கொஞ்சம் வெளிச்சம் வந்தது.
’’கேலி, கிண்டல் செய்வாங்கன்னு அடுத்தவங்களுக்காக நாம பயப்படவும் கூடாது, ஒதுங்கவும் கூடாது. நீ கொஞ்சம் கொஞ்சமா எல்லோருடனும் சேர்ந்து பழகணும். முதலில் உங்கள் வகுப்புத் தோழிகள் முன்பு தைரியமாகவும் பேசுவதற்கு பழகு. அதன் பிறகு மேடைப் பேச்சிலும் நீ வெளுத்துக் கட்டலாம். நீ அழுதுகொண்டு இருந்தால் உன் பெற்றோரும் வேதனைப்படுவார்கள்…’’ என்று சமாதானம் செய்தேன்.
அதன் பிறகு அமுதாவுக்கு சில வீட்டுப் பயிற்சிகள் கொடுத்தது மட்டுமின்றி, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு பிள்ளைகளுக்கு கதை சொல்வதற்கும், கலந்துரையாடல் செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தோம். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சமூக அச்சத்தில் இருந்து வெளியே வருகிறார் அமுதா. விரைவில் பிரேயரில் பேசவும் செய்வாள்.
