மருத்துவ ஆய்வுகள் உண்மையா..?
மது மீது வெறுப்பு இருப்பவர்களும் பீர் குடிப்பதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ஏனென்றால் சில மருத்துவ ஆய்வு முடிவுகள் பீருக்கு ஆதரவாக இருக்கின்றன. பீரில் சிலிக்கான் இருப்பதால் எலும்புக்கு வலுவை உண்டாக்குவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. அதேபோல், பீர் குடிப்பவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்றவை வரும் வாய்ப்பு 30 சதவீதம் குறைவு என்றும் கூறுகிறது. பீரில் உள்ள நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
அதோடு பீர் குடிப்பதால் மன அழுத்தம் குறைக்கிறது, இதய நோய் வரும் வாய்ப்பு குறைவு. பீரில் மக்னீசியம், செலினியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், பயோட்டின், போலேட், வைட்டமின் B6 , வைட்டமின் B12 போன்றவை இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது. குறிப்பாக சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதைக் குறைக்கிறது. பீர் உடலுக்கு தேவையான நல்ல ஹெச்.டி.எல். கொழுப்பை தருவதால் ரத்தம் கெட்டியாவது தவிர்க்கப்படுகிறது.
பீரில் நிறைய நார் சத்து உள்ளது. இந்த நார் சத்தானது மால்டட் பார்லியில் இருந்து கிடைகிறது. ஒரு நாளைக்கு சராசரியாக நம் உடலுக்கு தேவையான நார் சத்தில் சுமார் 60% ஒரு லிட்டர் பீரில் இருந்து கிடைத்து விடும். இப்படி எக்ஸ்ட்ராவாக நமக்கு கிடைக்கும் நார் சத்து இருதய நோயிலிருந்து காக்கும்.
கல்லீரலில் உள்ள மிகசிறிய ரத்தக்குழாய்களை பீரில் உள்ள கெமிக்கல்கள் அகலப்படுத்துவதால் வளர் சிதை மாற்றம் காரணமாக உண்டாகும் கழிவுகள் நீக்கப்படுகின்றன. தூக்கமின்மையை அகற்றும். லாக்டோப்லாவின் மற்றும் நிக்கோடினிக் அமிலங்கள் பீரில் இருப்பதால் நல்ல உறக்கம் கிடைகிறது. சிறுநீரகக் கற்கள் உண்டாவதை பீர் தடுக்கிறது என்றெல்லாம் அவ்வப்போது சில ஆய்வுகள் வெளியாகின்றன.
இவை எல்லாம் உண்மையா..?
ஆல்கஹால் என்றாலே ஆபத்து. ஆல்கஹால் எந்த அளவில் குடித்தாலும் ஆபத்துதான். பீரில் குறைவாக இருந்தாலும் அதுவும் ஆல்கஹால் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. மேலும் அனைத்து ஆய்வுகளும் குறைவான அளவு பீர் எடுத்துக்கொள்பவர்கள் என்பதை முன்வைத்தே சொல்லப்படுகின்றன. குறைவான அளவு பீர் என்பதை எப்படி அளவிட முடியும்..? மேலும், உடலில் எந்த நோயும் இல்லாத நபர்களே இந்த ஆய்வுகளுக்கு எடுத்துக்கொள்ளப் படுகிறார்கள். இன்றைய சூழலில் இளம் வயதிலேயே பலருக்கும் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவை இருப்பதால் மது அதிக அளவுக்கு சிக்கலை உருவாக்கிவிடும்.
அதனாலே, எந்த அளவில் குடித்தாலும் மது ஆபத்துதான் என்று உலக சுகாதார நிறுவனமே கூறுகிறது. மேலும், ஒருவர் மிதமான அளவில் மது அருந்துகிறார் என்பதை வரையறுக்க இயலாது. மற்ற மது வகைகளை அருந்துபவர்களுக்கு 5 ஆண்டுகளில் கல்லீரல் பாதிப்பு வருகிறது என்றால் பீர் குடித்தால் பத்து ஆண்டுகளில் அந்த பாதிப்பு ஏற்படலாம்.
மிதமான அல்லது சரியான அளவு பீர் என்பது வாரம் ஒரு நாள் 250 மில்லி பீர் குடிப்பது என்று கணக்கிடுகிறார்கள். இந்த அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்வது சாத்தியமா என்பதே முக்கியம். இந்த அளவுக்கு மட்டும் எடுத்துக்கொள்ளும் கட்டுப்பாடு இருப்பவர்கள் பீர் குடிக்கலாம். ஆனால், நம் நாட்டில் மது அருந்துவது என்பது ஒரு குழுப் பழக்கமாக இருக்கிறது. எனவே, ஒரு பாட்டிலுடன் யாரும் நிறுத்துவதில்லை. அளவுக்கு அதிகமானால் நிச்சயம் ஆபத்து தான். வெயில் காலத்தில் பீர் குடிப்பதால் உடல் சூட்டை தணித்துக்கொள்ளலாம் என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் பீர் குடிப்பதால் சூடு தணியும் என்று அறிவியல்பூர்வமாக எந்த ஆதாரமும் இல்லை. அதேபோல் ஒல்லியாக இருப்பவர்கள் பீர் குடித்தால் உடல் எடை அதிகரிக்கும் என்றும் குண்டாக இருப்பவர்கள் பீர் குடித்தால் உடல் குறையும் என்றும் நம்புகின்றனர். இதற்கு மருத்துவ ஆதாரங்கள் இல்லை