• Home
  • தமிழ் லீடர்
  • மாநாட்டில் இறந்தவர்களுக்கு மேடையில் அனுதாபம் கூட இல்லையா விஜய்..?

மாநாட்டில் இறந்தவர்களுக்கு மேடையில் அனுதாபம் கூட இல்லையா விஜய்..?

Image

வருத்தத்தில் தொண்டர்கள்

மாநாடு தேதி அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து அடிக்கடி கடிதம் எழுதி அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார் நடிகர் விஜய். அதேநேரம், பாதுகாப்புடன் வாருங்கள், இருசக்கர வாகனத்தில் வராதீர்கள் என்று அக்கறையும் காட்டிருந்தார். பாதுகாப்பு எச்சரிக்கையை மீறி சில தொண்டர்கள் வரும் வழியில் உயிர் இழந்திருக்கிறார்கள். அதோடு பலர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். இவர்களுக்கு விஜய் மேடையில் அனுதாபம் தெரிவிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு வேதனை கொடுத்துள்ளது.

நமது கட்சியில் அவர்களே, இவர்களே என்று அழைக்கும் சம்பிரதாயம் இல்லை என்று கூறிவிட்டார் விஜய். அதனாலோ என்னவோ, மேடையில் இருந்த மூன்று பேர் தவிர வேறு யாருடைய பெயரையும் உச்சரிக்கவில்லை. தானே தொண்டன் தானே தலைவன் என்ற ரீதியில் புதிய கலாச்சாரத்தைப் புகுத்தியிருக்கிறார்.

ஆனால், பெரியார், அம்பேத்கர், காமராஜாரின் மாடல் இதுவல்ல. எந்த ஒரு விழா மேடை என்றாலும் அதில் பங்களிப்பு செய்த ஒவ்வொரு நபரையும் பெயர் சொல்லி அழைத்து பெருமைப்படுத்துவார்கள். அதனாலே, அத்தனை நேரமும் அவர் செய்த வேலைக்கு கூலி கிடைத்தது போன்று உணர்வார். அந்த பகுதி மக்களிடமும் சம்பந்தப்பட்ட நபருக்கு மதிப்பு ஏற்படும். அதன் மூலம் கட்சியை அவர் வளர்ப்பார். அவரைப் போன்று தனக்கும் பெயர் கிடைக்க வேண்டும் என்று மற்றவர்களும் உழைப்பார்கள்.

ஆனால், இந்த மேடையில் யாருக்கும் எந்த மதிப்பும் அளிக்கவில்லை. அதுகூட பரவாயில்லை. மாநாட்டுக்கு வந்து உயிரிழந்த தொண்டர்களுக்கு ஒரு ஆறுதல் கூட இல்லை. இனி, தனியே சென்று சந்திக்கலாம், பணம் கொடுக்கலாம். ஆனால், இந்த மாநாட்டுக்கு வந்து உயிர் விட்டவர்களுக்கு ஒரே ஒரு வார்த்தை அனுதாபம் தெரிவித்தால் மட்டுமே அவரது குடும்பத்தினரும் அவர் ஊரைச் சேர்ந்த மக்களும் மதிப்பார்கள்.?

யாரையும் மதிக்க மாட்டேன் என்ற ரீதியில் சினிமா நடிகர் போன்று அரசியலில் நடந்துகொள்ள முடியாது என்பதை விஜய் உணர வேண்டும். என் நெஞ்சுக்குள்ளே குடியிருக்கும் என்று பாடினால் தீராது விஜய்.

Leave a Comment