எட்டு போட்டு நடக்காதீங்க…

Image

நடைபயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டாத சிலர் கூட, எட்டு வடிவ நடைபயிற்சியை விரும்பிச் செய்கிறார்கள். தினமும் 17 (கூட்டு எண் 8) நிமிடங்கள் நடந்தால் போதும், வெறும் காலுடன் நடக்க வேண்டும், யாரிடமும் பேசாமல் நடக்க வேண்டும், அகத்தியர் காட்டிய வழி என்று பெருமையாக சொல்லப்படுவதால், கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி சந்தோஷமாகச் செய்கிறார்கள்.

17 நிமிடங்கள் 8 போட்டு நடப்பது நிறைய பலன் தருகிறது என்றும் எட்டு போட்டு 80 நாட்கள் நடந்தால் 17 வகையான நோய்கள் கட்டுக்குள் வந்துவிடும் என்றும் இந்த பயிற்சியாளர்கள் சத்தியமே செய்கிறார்கள். இவையெல்லாம் உண்மையா..?

இந்த சர்ச்சையில் போக விரும்பாத மூத்த ஆர்த்தோ மருத்துவர் என்ன சொல்கிறார் தெரியுமா..?  

மனிதர்களை நடக்க வைக்கும் முயற்சி என்பதற்காக வேண்டுமானால் இந்த பயிற்சியைப் பாராட்டலாம். 17 நிமிட நடைபயிற்சியால் மிகப்பெரிய பலன் ஏற்படுவதற்கும், சிக்கல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இல்லை. ஆனால் முதிய வயதினரும், சில எலும்பு நோய் பாதிப்பு உள்ளவர்களும் எட்டு வடிவம், எஸ் வடிவத்தில் நடப்பதால் நிச்சயம் தொந்தரவுக்கு ஆளாகிறார்கள்.

பொதுவாக 50 அடி தூரமாவது நேராக நடந்து அல்லது ஓடி அதன்பிறகு உடலை திருப்புவதே சரியான செயல். இதனால் உடல் வேகம், இதயத் துடிப்பு போன்றவை பேலன்ஸ் ஆக செயல்படும். எட்டு போட்டு அடிக்கடி உடலைத் திருப்புவது காரணமாக கால் மூட்டுகள், லிக்மெண்ட் பாதிக்கப்படுவதால் சிலருக்கு வெர்டிகோ பிரச்னை அதிகரிப்பதற்கும், காலையில் எழும்போது தலை சுற்றல் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. 8 போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று விரும்பினால் ஒரு ஃபுட்பால் கிரவுண்ட்டில் மிகப்பெரிய 8 போட்டு, அதில் பயிற்சி மேற்கொள்ளலாம். அப்படி செய்யும்போது உடம்பையும் கால்களையும் சட் சட்டென திருப்புவதற்கு அவசியம் இருக்காது.

அதேபோல் சிலர் தினமும் நிறைய மாடிப்படிகள் ஏறி, இறங்குவதை சாதனை என்று நினைத்து பெருமைப்படுகிறார்கள். இதுவும் நிச்சயம் சரியான செயல் அல்ல. வயது, உடல்நிலை போன்றவற்றை கருத்தில்கொண்டே மாடிப் படிகளில் ஏறி, இறங்க வேண்டும். அதிகபட்சம் இரண்டு மாடிகள் அதாவது 50 படிக்கட்டுகள் வரை ஒன்றிரண்டு முறை ஏறி இறங்கலாம். அதற்கு மேலான எண்ணிக்கையில் படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவது நிச்சயம் மூட்டுகளுக்கு தொந்தரவு கொண்டு வரும்.

ஏனென்றால், மனிதர்களின் மூட்டுக்கள் நேர் வழியில் செல்வதற்கு ஏற்பவே படைக்கப்பட்டுள்ளது. ஆகவே, அதிகப்படியான படிக்கட்டு பயன்படுத்தினால் மூட்டு, ஜவ்வு இணைப்புகள் விரைவில் தேய்ந்துவிடும். நேர் வழியில் அரை மணி நேரம் நடங்கள், அதுவே மிகச்சிறந்த உடற்பயிற்சி’’ என்கிறார்.

Leave a Comment