• Home
  • பணம்
  • ஹெல்த் இன்சூரன்ஸ்க்கு ஏஜென்ட்களை நம்பாதீங்க

ஹெல்த் இன்சூரன்ஸ்க்கு ஏஜென்ட்களை நம்பாதீங்க

Image

பணம் பாதுகாக்கும் வழி

ஓரளவுக்கு நல்லபடியாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது என்று சந்தோஷப்படும் நடுத்தர வர்க்கத்தினரை, ஒரேயொரு அறுவை சிகிச்சை ஒரேயடியாக ஏழையாக மாற்றிவிடுவதுண்டு. ஏனென்றால், பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் மற்றும் தொடர் சிகிச்சைக்குக் கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வரை சாதாரணமாக செலவாகிறது. அதன் பிறகு வேலைக்குச் செல்ல முடியாமல் நிறைய பேர் மாட்டிக்கொண்டு விழிப்பதுண்டு.

அரசு கொடுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் முழு செலவையும் சரிக்கட்டுவது இல்லை. எனவே, இன்றைய நிலையில் ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வதே ஓரளவு புத்திசாலித்தனமான முடிவு ஆகும். முதலில் ஏதேனும் ஒரு பாலிசி எடுக்க வேண்டியது அவசியம். ஐ.ஆர்.டி.ஐ. விதிகளின் படி நீங்கள் எட்டு ஆண்டுகளுக்கு மேல் தடையின்றி ஒரு பாலிசியை தொடர்ந்து வந்தால், அந்த நிறுவனம் உங்கள் கிளைமை தவிர்க்க முடியாது என்பதால் இன்சூரன்ஸ் சிஸ்டத்திற்குள் வருவது முதல் அவசியம்.

ஒருசிலருக்கு அலுவலகத்தில் பாலிசி இருக்கலாம். ஆனால், அது குடும்பத்துக்குக் கவர் ஆகிறதா என்று பாருங்கள். அப்படியில்லை என்றால் குடும்பத்தினருக்கும் பாலிசி முக்கியம். ஒருசில நிறுவனங்களில் இருந்து வெளியேறினாலும் அந்த பாலிசியை நீங்கள் தனிப்பட்ட முறையில் தொடரமுடியுமா என்று பாருங்கள். கம்பெனியில் பாலிசி போட்டிருக்கிறார்களா என்பதை உறுதி செய்வது முக்கியம். நீங்களாகவே போட்டிருப்பார்கள் என்று கற்பனையில் வாழாதீர்கள்.

நல்ல பாலிசி என்று எதுவுமே கிடையாது. ஒவ்வொரு வகை பாலிசியிலும் ஒருசில நன்மைகளும் சில மைனஸ்களும் இருக்கவே செய்யும். நமக்கு எது சரியாக வரும் என்பதை நாமே படிக்க வேண்டும். நான்கைந்து பாலிசிகளை கொஞ்ச நேரம் பொறுமையாக அமர்ந்து படித்தாலே எது உங்களுக்கு சரியாக இருக்கும் என்ற தெளிவு வந்துவிடும்.

இதற்கு இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களை நம்பி பாலிசி போடுவது புத்திசாலித்தனம் அல்ல. ஏனென்றால், அவர்கள் ஒருசில நிறுவனத்திற்கு மட்டுமே பணியாற்றுவார்கள். அந்த நிறுவன பாலிசியே நல்லது என்றும் சொல்வார்கள். . மேலும் நிறைய இன்சூரன்ஸ் ஏஜெண்ட்கள், எதுவென்றாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதி கொடுப்பார்கள். ஆனால், கிளைம் என்று போகும்போது, ஏதேனும் காரணம் சொல்லி தட்டிக் கழிப்பார்கள். ஆகவே, எது நல்ல பாலிசி என்பதை தேர்வு செய்யவேண்டியது நீங்கள் மட்டுமே.

தேவையான நேரத்தில் ஓடிவந்து உதவிசெய்யும் ஒருசில ஏஜெண்ட்கள் இருக்கிறார்கள் என்றாலும் நிறைய பேர் பாலிசி வாங்கும் நேரத்தில் காட்டும் ஆர்வத்தை கிளைம் நேரத்தில் காட்டுவது இல்லை. மேலும் தொடர்ந்து உங்களிடம் நிறைய பாலிசி வாங்க முடியும் என்றால் மட்டுமே உதவுவார்கள். எனவே, அவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் நீங்களே சரியான பாலிசியை தேர்வு செய்யுங்கள்.

பொதுவாக பெரும்பாலான பாலிசியில் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் மட்டுமே கவர் செய்வதாக இருக்கும். எனவே, அதைத் தாண்டி பரிசோதனைகள், மருந்துகள் போன்றவை தரும் பாலிசி இருக்கிறதா என்று பாருங்கள். ஒருசில பாலிசிகளில் குறிப்பிட்ட நோய்கள் குறிப்பிட்ட காலத்தில் கண்டறியப்பட்டால் கவர் செய்ய முடியாது என்று இருக்கும். அந்த நோய்கள் குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கும் பட்சத்தில் தவிர்த்துவிடலாம்.

முதலில் பணம் கட்டிவிட்டு கிளைம் செய்யும் பாலிசி, பணம் கட்டாமலே கிளைம் தரும் பாலிசி, செலவுகளில் 75% மட்டுமே தரும் பாலிசி என்று பல்வேறு வகையில் இருக்கும். இவற்றை எல்லாம் படித்துவிட்டால் குழப்பமின்றி தெளிவுடன் கிளைம் செய்ய முடியும். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே பாலிசி என்பது நல்ல அணுகுமுறை அல்ல. வயதானவர்கள் இருந்தால் அவர்களுக்குத் தனியே ஒரு பாலிசியும் இளம் வயதினருக்கு தனியே ஒரு பாலிசியும் போடலாம். வயதானவர்களுக்கு அதிக கவரேஜ் இருக்கும் வகையில் பாலிசி எடுத்துக்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

பாலிசியில் இல்லாத ஒரு நோய் உங்களுக்குக் கண்டறியப்படுகிறது என்றால், அதனை பாலிசியில் சேர்ப்பதற்கு பிரிமியம் கட்டுவதற்கு வாய்ப்பு இருக்கும். அதேபோல், ஏதோ ஒரு பாலிசி வாங்கியிருக்கிறோம், எதுவும் நிகழவில்லை என்பதற்காக அதையே தொடரவேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் நல்ல பாலிசியாகத் தெரியவந்தால் சரியான நேரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள். சின்னச்சின்ன மருத்துவச் செலவுகளை எல்லாம் திரும்ப வாங்கவேண்டும் என்று அடிக்கடி கிளைம் செய்வது உங்களுடைய பிரீமியத்தை அதிகரித்துவிடும். எனவே, நல்ல பாலிசி ஒன்று கையில் வைத்திருங்கள். ஒருவகையில் இதுவே, நல்ல சேமிப்பு.

Leave a Comment