ரகசியம் முக்கியமுங்கோ
நான் ரொம்ப ஓப்பன் டைப். என்னிடம் எதுவும் ஒளிவு மறைவு கிடையாது என்றெல்லாம் பேசுவது அலுவலக விஷயங்களில் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் அப்படி இருக்கவே கூடாது. எல்லோருக்கும் கொஞ்சமாவது ரகசியம் இருக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையைப் பற்றி வெளிப்படையாகப் பேசாத மனிதர்கள் மீது கவர்ச்சி இருக்கிறது.
அந்த வகையில் பிறருக்கு சொல்லக்கூடாத விஷயங்கள் என்னவென்று பார்க்கலாம்.
- முட்டாள்தனமாக பணம் யாரிடமாவது ஏமாந்து போயிருக்கலாம். அதனால் உங்களுக்கு வருத்தம் இருக்கலாம். ஆனால், இந்த விஷயத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதீர்கள். எத்தனை பெரிய முட்டாள் என்று அந்த விஷயத்தை சகலருக்கும் பரப்புவார்கள். இதனால் உங்களுக்கு அவமானமே மிஞ்சும்.
- வீட்டில் எவ்வளவு சொத்து இருக்கிறது, எவ்வளவு நகை இருக்கிறது என்பதெல்லாம் வேறு யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை.
- தண்ணீரைக் கண்டால் பயம், உயரத்தைக் கண்டால் பயம் என்பது போன்று ஏதேனும் பயம் இருக்கலாம். அவற்றை எல்லாம் வெளியே சொல்லவேண்டிய அவசியம் இல்லை, தேவையில்லாத கிண்டலுக்கு ஆளாக நேரிடும்.
- கணவன், மனைவி படுக்கையறையில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார், எதில் ஆர்வமாக இருக்கிறார் என்பதெல்லாம் மூன்றாவது நபர் யாருக்கும் தெரியவேண்டிய அவசியமே இல்லை.
- யாருக்காவது அவசரத்தில் கடன் கொடுத்து அல்லது வேறு வகையில் உதவி செய்திருக்கலாம். அந்த உதவி செய்யலைன்னா அம்புட்டுத்தான் என்பது போன்று யாரிடமும் சொல்லக்கூடாது.
- வீட்டு சாவி, பணம் போன்றவைகளை எந்த இடத்தில் வைப்பீர்கள் என்பதை வெளிப்படையாக யாரிடமும் சொல்லக்கூடாது.
- கணவன், மனைவியிடம் தனிப்பட்ட குறை இருக்கலாம், மறைவான இடத்தில் மச்சம் இருக்கலாம். இதையெல்லாம் யாரிடமும் சொல்லக்கூடாது.
- கணவன், மனைவிக்குள் சண்டை வருவது சகஜம். என்ன காரணத்துக்காக சண்டை, அந்த சண்டையின் போது எப்படிப்பட்ட வார்த்தைகள் பயன்படுத்தினீர்கள் என்பதை எல்லாம் பேசக்கூடாது. இதனை பலரும் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். இதனாலே நிறைய குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன.
- உங்களை யாரேனும் பிரத்யேகமாகப் பார்க்கலாம், அன்பு காட்டலாம். இதை தவறான உறவாக மற்றவர்களிடம் சித்தரிக்கக்கூடாது.
- குழந்தைகளிடம் அப்பாவைப் பற்றி அம்மாவும், அம்மாவைப் பற்றி அப்பாவும் யாரும் குறை சொல்லவே கூடாது.
- தோழன், தோழியர் பற்றி படுக்கையறையில் பேசும் விஷயங்களை வெளியே சொல்லக்கூடாது. ‘என் வீட்டுக்காரருக்கு உன் மேல இண்ட்ரஸ்ட் இருக்கு’ என்று ஜாலியாகப் பேசுவது பின்னர் விபரீதமாக வந்து நிற்கும்.
- கார், நெக்லஸ் போன்ற ஏதேனும் வாங்குவதாக இருந்தால் முன்கூட்டியே வெளியே சொல்லாதீர்கள். ஆளுக்கு ஒரு ஐடியா கொடுப்பார்கள் அல்லது பணம் கேட்டு தொந்தரவு வரலாம்.
- சுற்றுலா சென்று திரும்பிய பிறகு அது குறித்து பேசினால் போதும். முன்கூட்டியே பேசினால், நாங்களும் வருகிறோம் என்று நிறைய பேர் தொற்றிக் கொள்வார்கள்.