அதிக உழைப்பு ஆபத்து
ஒரு பெரிய நிறுவனத்தில் மிகப்பெரும் பொறுப்பில் இருக்கும் ராகவன் ஞானகுருவை தரிசிக்க வந்தான். கைகளில் மூன்று செல்போன்கள், இரண்டு பி.ஏ.க்கள், அவர்கள் கையில் ஃபைல்கள் என பார்க்கும்போதே, அவனுடைய பரபரப்பான வாழ்க்கை புரிந்தது.
‘’எப்ப பார்த்தாலும் வேலை, மீட்டிங்னு பிஸியாவே இருக்கிறார். சாப்பிடுவது தூங்குவது எல்லாத்தையும் பெரிசா எடுத்துக்காம தினமும் 18 மணி நேரம் ஓடிக்கிட்டே இருக்கார். இவரோட கம்பெனி ஜெயிக்கிறதுக்கு ஆசிர்வாதம் பண்ணுங்க சாமி’’ என்று முன்வந்து பேசினாள், ராகவனின் மனைவி.
’’உன் உழைப்பு அபாரமானது. ஆனால் வெற்றியை நீ காண்பதற்கு வாய்ப்பு குறைவுதான். ஏனென்றால், உழைப்பைவிட முக்கியமான ஒன்றை நீ தவற விடுகிறாய்’’ என்றார் ஞானகுரு. அவனுடன் வந்த அத்தனை பேரும் அதிர்ந்து நின்றார்கள்.
‘’நான் எதை தவறவிட்டேன்’’ தட்டுத்தடுமாறி கேட்டான் ராகவன்.
‘’ஓய்வை தவற விடுகிறாய் ராகவன். போட்டிகள் நிறைந்த இந்த உலகில், விரைந்து முடிவெடுக்கவும், செயல்படுவதற்கும் உழைப்பு மட்டும் போதாது, உடலும், மனமும் அதற்கு தயாராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். ஓடிக்கொண்டே இருப்பவன் கண்ணுக்கு அக்கம்பக்கத்தில் நடப்பது தெரியாது. அதனை ஓய்வில்தான் பார்க்க முடியும். ஓய்வு நேர சிந்தனையால்தான் புத்தம் புதிய வழிகள் திறக்கும்.
ஓய்வு கிடைக்காத உடலை எந்த நேரமும் நோய் தாக்கிவிடும். நோயாளியான கோடீஸ்வரரால், ஒரு ஆரோக்கியமான கூலித் தொழிலாளியின் சந்தோஷத்தைக்கூட அனுபவிக்க முடியாது. எனவே வெற்றியை பிடிப்பதற்கு முன்பு உன், போதிய ஓய்வெடுத்து உன் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக் கொள். அமைதியான சிந்தனை, ஆரோக்கிய உணவு, சீரான தூக்கம் மூன்றும் கிடைப்பதற்கு ஓய்வு தேவை.
நீ லட்சியத்தை செதுக்குவது போன்று உடல் ஆரோக்கியத்திலும் கவனம் வை. கார் பழுதானால் மட்டுமே பராமரிப்பது போன்று உடலையும் நோய் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அசட்டையாக இருக்காதே… அந்த நோய் உன்னை திரும்பமுடியாத பாதைக்கு கொண்டுபோய் விடலாம்…’’
‘’ஓய்வு எடுத்தால் வெற்றி தாமதமாகிவிடாதா..?”
‘’வேகமாக ஓடத் தொடங்குவதால், ஓட்டப்போட்டியை வென்றுவிட முடியாது. சீரான வேகத்தில் ஓடுபவனே வெற்றியைத் தொடுவான்…’’ என்றதும் ஞானகுருவின் கையை ஆதரவாகப் பற்றிக்கொண்டான் ராகவன்.
’’சரியான நேரத்தில் எனக்கு கிடைத்த, சரியான ஆசிர்வாதம்’’ என்றான் அமைதியாக.