• Home
  • பணம்
  • பணத்துக்குப் பின்னே ஓடாதீங்க… தேடி வரவழையுங்கள்

பணத்துக்குப் பின்னே ஓடாதீங்க… தேடி வரவழையுங்கள்

Image

பணமும் காதலும் பட்டாம்பூச்சி

தாத்தா, அப்பா போன்று தானும் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஆசைப்பட்டான் மகேந்திரன். எனவே, அவனுடைய சேமிப்பை முதலீடாகப் போட்டு ஒரு தொழில் தொடங்கினான். ஆனால், அவன் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ரொம்பவே சோர்ந்து போனான்.

தோற்றுப் போன முகத்துடன் தாத்தாவை சந்தித்தான். ‘’தாத்தா… உங்களைவிட அப்பாவை விட பெரிய வெற்றி அடைய ஆசைப்பட்டேன். ஆனால், என் முயற்சி தோல்வி அடைந்துவிட்டது. என்னுடைய இலக்குகள் சரியானவை. ஆனால், அவற்றை அடைய முடியவில்லை. வெற்றியைப் பிடிக்க முயன்று தோற்றுப் போகிறேன்… ’’ என்றேன்.

அவரது தோட்டத்தில் ஒரு பட்டாம்பூச்சி பறந்து கொண்டிருந்தது. அதை அவனிடம் காட்டி, ‘’அதை எப்படியாவது பிடித்துக் கொண்டுவா… உனக்கு நான் வெற்றிக்கு வழி சொல்லித் தருகிறேன்’’ என்றார்.

’’பட்டாம் பூச்சி பிடிக்கவா… விளையாடுறீங்களா?’’

‘’அட, சும்மா டிரை பண்ணு’’ என்றார். உடனே மகேந்திரன் எழுந்து போனான். மெதுவாக அருகில் போவதற்குள் அது பறந்துவிட்டது. அடுத்தடுத்த செடிக்குப் போன பிறகும் அதை பிடிக்க முடியவில்லை. சட்டென்று அந்த பட்டாம் பூச்சி மேலே எழுந்து காணாமல் போகவே, வீட்டுக்குள் தோல்வியுடன் வந்தான்.

‘’என்னால், இதைக் கூட செய்ய முடியவில்லை..’’ என்றான்.

உடனே தாத்தா அந்த பால்கனியை திறந்து வைத்தார்… ஜன்னலைத் திறந்து வைத்தார். அதன் பிறகு மகேந்திரனிடம் பேசத் தொடங்கினார்.

‘’நீ வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்துவதில் நேரத்தைச் செலவிட்டால், அவை பறந்துவிடும். அதை உன்னால் பிடிக்க முடியாது. ஆனால் நீ ஒரு அழகான தோட்டத்தை உருவாக்கினால் வண்ணத்துப்பூச்சிகள் உன்னைத் தேடி வரும். பட்டாம்பூச்சி என்பது வாழ்க்கையின் இலக்குகளைப் போன்றது. உடனடியாக இலக்குகளை அடைந்து வெற்றிபெற ஆசைப்படலாம். ஆனால் நாம் நமது திறமைகளில் கவனத்தை செலுத்தும்போது உண்மையான மாற்றம் நிகழ்கிறது, அருமையான தோட்டத்தை வளர்த்து பட்டாம்பூச்சிகளை வரவழைப்பது போல, உன் திறமைகளை வளர்த்துக்கொண்டால் வெற்றியும் பணமும் உன்னைத் தேடி வரும்’’ என்றவர், ‘’உன்னைத் தேடி பட்டாம் பூச்சி வந்துவிட்டது’’ என்றார்.

பால்கனியைத் திறந்துவிட்டதால் அங்கு வைத்திருந்த செடிகளைத் தேடி சில பட்டாம் பூச்சிகள் வந்துவிட்டன. மகேந்திரனுக்கு நிறைய புரிந்தது. எனக்கு பணம் பற்றி இன்னும் சொல்லுங்கள் என்று கேட்டான்.

’’நிறைய பேர் பணத்தை நேசிக்கிறார்கள். பணம் சம்பாதிக்க எதுவும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். முதல் லட்சத்தை சம்பாதிப்பது மட்டுமே கடினம். இரண்டாவது லட்சத்துக்கு அத்தனை கஷ்டம் இருக்காது. மூன்றாவது லட்சம் அதைவிட சுலபமாகக் கிடைத்துவிடும்.

எனவே, பணம் என்பது இங்கு முக்கியம் அல்ல. அதை தேடுவதில் அர்த்தமும் இல்லை. பணம் உனக்கு நிறைய வசதிகள் தரலாம் என்றாலும் அதை அனுபவிப்பவதற்கு எல்லைகள் இருக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று நேரத்துக்கு மேல் உன்னால் சாப்பிட முடியாது. நீ கோடி ரூபாய் சம்பாதித்தாலும் அவ்வளவு தான் சாப்பிட முடியும். கோடி கோடியாக சம்பாதித்தாலும் பணம் உனக்கு எதுவும் தராது.

அதாவது, பணத்தை நீ என்ன செய்யப் போகிறாய் என்பது முக்கியம் இல்லை, பணம் உன்னை என்ன செய்கிறது என்பது ரொம்ப முக்கியம். அதாவது உன் வாழ்க்கையை, உன் இளமையை, உன் நண்பர்களை, உன் உறவுகளையும் பணம் பிரித்துவிடக் கூடாது. எனவே, உன் திறமையைக் கண்டுபிடித்து அதை ஒரு தொழிலாக மாற்று. உன்னைத் தேடி பணம் வரும். பணம் மட்டுமல்ல காதலையும் நீ தேடாதே. நீ கவர்ச்சியாக உடல் வைத்திருந்தால், ஆரோக்கியமாக இருந்தால், நல்ல பழக்கவழக்கத்துடன் இருந்தால் காதலும் தேடி வரும்….’’ என்றார்.

Leave a Comment