சந்தோஷம் நிலைப்பதில்லை
மனித வாழ்க்கை என்பது மலர் படுக்கையாக மட்டும் இருப்பதில்லை, கரடுமுரடாகவும்தான் இருக்கும். எது வந்தாலும், எதிர்நீச்சல் போட்டு முன்னேறுவது நம் கையில்தான் இருக்கிறது. மகிழ்ச்சியான நேரத்தில் நாம் யாருடைய துணையையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், கடினமான நேரத்தில் உண்மையான மனிதர்கள் அருகே இருந்தால் நல்லது என்று எதிர்பார்க்கிறோம்.
பிறர் உண்மையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கும் நாம், உண்மையான மனிதராக வாழ்கிறோமா என்பதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்க்க வேண்டும். ஏனென்றால் எல்லாவற்றிலும் போலியான சந்தோஷத்தை விரும்பும் மனிதர்கள்தான் அதிகமாகிவிட்டார்கள்.
ஆம், இப்போது பிறப்பிலேயே போலியான வாழ்க்கையும் தொடங்கிவிடுகிறது. தாங்கள் விரும்பும் நாள், நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, நிறைமாதக் கா்ப்பிணிக்கு இயல்பாக வலி ஏற்படும் வரையிலும் காத்திருப்பதில்லை. தங்களுக்கு ஏற்ற நேரத்தில் குழந்தை பிறக்கச் செய்வது, அதன் ஜாதகத்தை மாற்றுவதை சாதனையாக நினைக்கிறார்கள்.
நெற்றியில் திருநீறுக்குப் பதிலாக பவுடர் பூசிக்கொள்கிறார்கள். ஏனென்றால் திருநீறு பளீச்சென்று தெரியாதாம். அதேபோன்று போலியாக நலம் விசாரிக்கும் பழக்கமும், பந்தா காட்டும் பழக்கமும் அதிகமாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அதிக லைக்ஸ் பெறுவதற்காக பிறருடைய உழைப்பைத் திருடி, தன்னுடைய கருத்து போன்று பதிவிடுகிறார்கள். அதேபோன்று செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போன்று, தெரு நாய்க்கு பிஸ்கட் போடுவது போன்றெல்லாம் சேவை செய்வதாக நடித்து, படமெடுத்து சமூக வலைதளங்களில் போட்டு லைக்ஸ் அள்ளுகிறார்கள்.
தேவை இருக்கிறதோ இல்லையோ, கல்யாணம் என்றாலே பயன்படாத அண்டா குண்டா போன்ற சீர்வரிசைகளை அடுக்கி வைப்பதை பெருமையாகக் கருதுகிறார்கள். அப்படி வாங்கப்படும் அண்டாவும், குண்டாவும் அதன்பிறகு வாழ்நாளில் எப்போதும் பயன் தரப் போவதில்லை.
அதேபோல், திருமணம், விழாக்களுக்கு செல்லும்போது கடன் வாங்கியாவது கழுத்து நிறைய நகைகளை அணிந்துசெல்வது, அடுத்தவர் வாங்கிவிட்டார் என்பதற்காக தன் வீட்டு முன்னாலும் கார் வாங்கி நிறுத்துவது என்று போலியாக வாழவே பலரும் ஆசைப்படுகிறார்கள். தவிர சிரிப்பு, உபசரிப்பு, விளம்பரம், பக்தி, பாசம் என அனைத்திலும் போலி கலந்துவிட்டது.
உண்ணும் உணவு, குடிக்கும் பால், உபயோகப்படுத்தும் பொருள்கள் என அனைவற்றிலும் போலிகள் நுழைந்துவிட்டன. மேலும் போலி மருத்துவா்கள், போலி கையெழுத்துகள், போலி சான்றிதழ்கள், போலி கரன்சிகள், போலி பட்டங்கள், போலி நிறுவனங்கள், போலி இணையதளங்கள் என போலிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
இப்படி போலியாக வாழ்வதன் மூலம் என்ன சாதிக்க முடியும்? மற்றவர்கள் நம்மைத் தவறாக நினைப்பார்கள் என்று நினைத்தால், நம்முடைய வாழ்க்கையை வாழவே முடியாது. இதனால் இயல்பான பிறவிக் குணங்களையே இழந்துவிட நேரிடும். இது ஒரு கட்டத்தில் உடல் மற்றும் மனநல நோயாகவும் மாறிவிடும்.
எனவே, போலிகளுக்கு மத்தியிலும் உண்மையாக இருங்கள். அதுதான் என்றும் நிரந்தரம்.
