டீன் வயதினர் உணர்வுகளுடன் விளையாடாதீங்க…

Image
  • டாக்டர் பதூர் பொய்தீன், பாத்திமா நர்சிங் ஹோம், சென்னை.

முதியோர் தற்கொலை குறைந்து டீன் வயதினர் தற்கொலை அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவாக திட்டமிட்டு தற்கொலை செய்பவர்களை விட, திடீரென உணர்வுகளின் அடிப்படையில் தற்கொலை முடிவு எடுப்பவர்களே அதிகம். அதுவும் டீன் ஏன் வயதினரிடம் அப்படிப்பட்ட அபாயம் அதிகம் உண்டு. ஏனென்றால், இன்று வீட்டுக்கு ஒரு பிள்ளை என்று  செல்லம் கொடுத்து வளர்க்கும் சூழலில் சின்ன தோல்வி, அவமானம், சிக்கல் போன்றவற்றை எதிர்கொள்ளும் தைரியம் நிறைய பிள்ளைகளுக்கு இருப்பதில்லை.

பொதுவாக 10ம் வகுப்பு, +2 தேர்வு முடிவு அறிவிக்கும் நேரத்தில் அதிக தற்கொலைகள் நிகழ்வதை பார்த்துவருகிறோம். ஃபெயில், குறைந்த மதிப்பெண் போன்ற அவமானத்தில் இருந்து தப்புவதற்கு வழி தெரியாமல் மாணவர்கள் தற்கொலையில் சிக்கிக்கொள்கிறார்கள். இதுபோன்ற தோல்விகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை ஒரே நாளில் அவர்களுக்கு வழங்கிவிட முடியாது. பரிட்சை ரிசல்ட் வந்த தினத்தில் மட்டும் அவர்களுக்கு ஆறுதல் சொல்வது போதுமானதாக இருப்பதில்லை.

எந்த ஒரு தோல்வியும் வாழ்க்கையைத் தீர்மானிப்பது இல்லை என்று சின்ன வயதில் இருந்தே கற்பிக்க வேண்டும்.  ஒவ்வோர் ஆண்டும் பொதுத்தேர்வில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைகிறார்கள். அவர்கள் எல்லோருமே தற்கொலை செய்வதில்லை என்ற உண்மையை மாணவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். ஒரு மாணவன் தோல்விக்காக தற்கொலை செய்ய, அதே போன்று தோல்வி அடைந்த வேறு மாணவன் மீண்டும் படித்து பாஸ் ஆகிறான். இதுதான் சரியான வழி என்று சொல்லித்தர வேண்டும். மாணவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களது பெற்றோருக்கும் இதனை புரியவைக்க வேண்டும்.

தொடர்ந்து குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களின் பெற்றோரை அழைத்துப் பேச வேண்டும். மதிப்பெண்ணுக்காக குழந்தைகளைத் திட்டுவது அல்லது அடிப்பது எந்தப் பலனும் கொடுக்காது என்பதை சொல்லித்தர வேண்டும். ஏனென்றால் குடும்பத்தினருக்குப் பயந்தே பெரும்பாலான மாணவர்கள் தற்கொலை முடிவு எடுக்கிறார்கள். அதனால் முதலில் திருத்தப்பட வேண்டியது பெற்றோர்கள்தான். இதனை செய்யாத சமூகம்தான் முக்கிய குற்றவாளி.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு காதல், குடும்பம் போன்ற உறவுகளின் ஆழம் புரியாது. பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு தங்களை படிக்க வைக்கிறார்கள் என்பது தெரியாது. ஏனென்றால் பொருளாதாரப் பிரச்னைகள் தங்கள் குழந்தைகளை பாதித்துவிடாமல்தான் பெரும்பாலான பெற்றோர் வளர்க்கிறார்கள். மேலும் பணம், சேமிப்பு, கடன் போன்ற விவகாரங்களின் அழுத்தமும் ஆழமும் அவர்களுக்குப் புரிவதில்லை.

ஏனென்றால்  டீன் ஏஜ் வயதில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் காரணமாக, தங்களைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். எந்த நேரமும் தன்னுடைய உடல், தன்னுடைய வாழ்க்கை, தன்னுடைய ஆசை, தன்னுடைய உணர்வு ஆகியவை மட்டுமே முக்கியமாக இருக்கும். மதிப்பெண் தாண்டியும் சிலர் கீழ்க்கண்ட விஷயங்களில் தவறான முடிவுகள் எடுக்கிறார்கள்.

·         தான் விரும்பும் பெண் அல்லது ஆண் வேறு ஒருவரை விரும்புகிறார் அல்லது தன்னைவிட்டு விலகிப் போவதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

·         தன்னுடைய நிறம் அல்லது உடல் அமைப்பை அவமானப்படுத்துவதால் மனம் வெறுத்துப் போகிறார்கள்.

·         தான் விரும்பும் செல்போன், வண்டி, அழகு க்ரீம் போன்றவற்றை வாங்கித்தராமல் ஏமாற்றுவதால் மனம் கொதிப்பவர்கள் உண்டு.

·         ஆசிரியர் அல்லது பெற்றோர் மிகவும் கண்டித்தால், வன்முறை பிரயோகம் செய்தால், அதில் இருந்து தப்பிக்க வேறு வழியில்லாமல் தவிப்பார்கள்.

ஒருசில சமுதாய பிரச்னைகளும் இவர்களை பாதிப்பதுண்டு. இவர்களுக்குப் பிடித்த சினிமா நடிகர்கள், அரசியல் தலைவர்கள் கைது செய்யப்படுவது, அவமானப்படுவதும் இவர்களைப் பாதிக்கிறது.  மொழி, இன, சாதி போராட்டங்கள் இவர்களை எளிதில் ஆக்கிரமித்துக்கொள்கிறது. இவற்றுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால்,  இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் தவறான முடிவு எடுக்கிறார்கள்.

பொதுவாகவே, டீன் ஏஜ் வயதினருக்கு தங்கள் உடல் பலம், மன பலம் மீது அபார நம்பிக்கை உண்டு. தன்னால் எதையும் செய்யமுடியும் என்று உறுதியாக நம்புவார்கள், ஆனால் அப்படி எதுவும் செய்ய இயலாது என்ற உண்மை தெரியவரும்போது கடுமையான ஏமாற்றத்துக்கு ஆளாகிறார்கள்.

டீன் வயதினருக்கு சிக்கல் தோன்றும்போது இரண்டு வழிகளை தேர்வு செய்கிறார்கள். முதல் வழி போதை. சிகரெட், மது, கஞ்சா போன்ற பொருட்கள் மூலம் தங்கள் ஏமாற்றத்தை, தோல்வியை மறைக்க முயல்கிறார்கள். போதைப் பொருட்களை தேர்வுசெய்ய விரும்பாதவர்கள் அல்லது அச்சப்படுபவர்கள் தற்கொலை எண்ணத்துக்கு ஆளாகிறார்கள்.

பெரும்பாலான பருவ வயதினர் தங்களுடைய பிரச்னைகளை, பெரியவர்களிடம் பகிர்ந்துகொள்வதை அவமானமாகக் கருதுகிறார்கள். யாரேனும் ஒரு பெரியவரை சந்தித்து சந்தேகம் கேட்பதற்கும், குழப்பத்தைத் தீர்ப்பதற்கும் முயற்சி செய்வதில்லை. ஏனென்றால் அவர்கள் பார்வையில் பெரியவர்கள் அனைவருக்கும் போதிய அறிவும், தெளிவும் இல்லை என்றே நினைப்பார்கள். எல்லாம் தங்களுக்குத் தெரியும் என்ற எண்ணத்தினால், தங்கள் வயதையொத்த நண்பர்களின் ஆலோசனைகளை பெரிதாக மதிப்பார்கள். இளவயது நண்பர்களுக்கு போதிய அனுபவம், தெளிவு இருப்பதில்லை என்பதால் தவறான முடிவுகள் எடுக்கிறார்கள்.

ஆசிரியரின் கடமை

டீன் ஏஜ் வயதினருக்கு ஆசிரியராக இருப்பவர்களுக்கு ஒரு முக்கிய கடமை இருக்கிறது. அதாவது படிப்பு, விளையாட்டு, உடல்நலம் மற்றும் வேறு ஏதேனும் வகையில் சிக்கல் அல்லது பிரச்னை ஏற்பட்டால், உடனே தயங்காது வீட்டில் அல்லது ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும் என்பதை சொல்லித்தர வேண்டும். ஒரு முறை மட்டும் இதனை அறிவுரையாகச் சொன்னவுடன் அவர்கள் மனதில் பதியாது. அவ்வப்போது டீன் ஏஜ் வயதினர் மனதில் பதியும் வகையில் இந்த அறிவுரையை வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும். பெற்றோர், உறவினர், ஆசிரியர் உதவியை நாடுவது எந்த வகையிலும் பலவீனம் அல்ல என்பதையும் புரியவைக்க வேண்டும். மனதில் குழப்பம் வந்தால் பேசுவதற்கு அரசு மற்றும் பொதுநல அமைப்புகளின் தொலைபேசி எண்ணை கண்களில் படும் வகையில் ஆங்காங்கு வைக்க வேண்டும்.

பெற்றோர் கடமை

டீன் ஏஜ் வயதினருக்கு நெருக்கடிகளை சமாளிப்பதற்கு கற்றுத்தர வேண்டும். தோல்விகளை எதிர்கொள்ள கற்றுத்தர வேண்டும். இந்த வாழ்க்கையில் உயிர் வாழ்தலே மிக உயர்வான போராட்டம் என்பதை புரியவைக்க வேண்டும் சின்ன வயதில் இருந்தே குடும்ப பிரச்னைகள், சிக்கல்கள் தெரிந்து வளரும் டீன் ஏஜ் வயதினர் போதிய மன உறுதியுடன் இருக்கிறார்கள். அதனால்தான் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய அடித்தட்டு டீன் வயதினர் தற்கொலை செய்துகொள்வது  குறைவாக உள்ளது.

அதேபோன்று, மொழி, மதம், இனம், கட்சி போன்ற விஷயங்களில் தெளிவுபெறும் வயது இது அல்ல என்று அவர்களை கட்டுக்குள் இருக்கும்படி வளர்த்தல் வேண்டும். ஏதேனும் கட்சி அல்லது இயக்கத்தில் தீவிரமாக இருக்கிறார் என்றால், அவரை மீண்டும் பள்ளியின் பாதையில் திசை திருப்ப வேண்டும். இந்த சித்தாத்தங்களை படித்துமுடித்து வேலைக்குப் போன பிறகே மேற்கொள்ள வேண்டும் என்று அழுத்தமாக புரியவைக்க வேண்டும்.

காதல் என்பது இனக்கவர்ச்சி, காதல் செய்வதற்குரிய முதல் தகுதி சொந்தக் காலில் நின்று பணம் சம்பாதிப்பது என்பதை மீண்டும் மீண்டும் டீன் வயதினரிடம் மந்திரம் போன்று ஓதவேண்டும். அப்போதுதான் சம்பாதிக்கும் வயது வரும் வரையில் காதலிப்பது சரியல்ல என்பது மனதில் பதியும்.

தினமும் தாய் அல்லது தந்தை அரை மணி நேரமாவது உரையாடுதல் வேண்டும். டீன் வயதினர் பேசுவதற்கு விரும்பமாட்டார்கள், தப்பித்துச்செல்லவே ஆசைப்படுவார்கள். ஆனாலும் அன்பு காட்டி அவர்களிடம் பேசுவதற்கு பெற்றோர் முயற்சி எடுக்க வேண்டும். அதேபோல், பிள்ளையின் தோழர்கள் பற்றி அறிந்திருக்க வேண்டும். அவர்களிடமும் அன்புடன் பழக வேண்டும்.பெற்றோர் சொல்லாத விஷயங்களைக்கூட நண்பன் சொன்னால் கேட்பார்கள்.அதனால் நண்பர்களை பெற்றோர் தங்கள் ஆதரவாளராக மாற்றிக்கொள்ள வேண்டும். பிள்ளைக்கு ஏதேனும் மன சங்கடம், பிரச்னை இருப்பது தெரிந்தால், நண்பரிடம் கேட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த விஷயமாக இருந்தாலும் பிள்ளை தானே வந்து பேசட்டும் என்று அமைதி காக்க வேண்டியதில்லை. முதிர்ச்சி அடையாத மனம், பிடிவாத குணம், அலட்சிய மனப்பான்மை போன்றவை டீன் ஏஜ் வயதினரின் இயல்புகள் என்றாலும் அன்பினால் அதனை வெல்வதற்கு பெற்றோர் முன்வர வேண்டும். அன்பு, அரவணைப்பு, ஆறுதலே டீன் வயதினரின் அகால மரணத்தைத் தடுக்கக்கூடிய ஆயுதங்கள்.

Leave a Comment