வெறும் காலில் நடப்பது ஆபத்து
சமீபத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, ‘’செருப்பு போடாமல் நடப்பது உடல்நலத்திற்கு நல்லது, தன்னம்பிக்கையை வளர்க்கிறது. நான் எப்போது செருப்பு இல்லாமல் நடக்க ஆரம்பித்தேனோ அன்று முதல் எந்த விதமான நெருக்கடியான சூழலும் எனக்கு ஏற்படவில்லை. எனவே, ஒரே ஒரு மாதம் நடந்து பாருங்கள், வித்தியாசத்தை உணர முடியும்’’ என்று ஒரு மருத்துவ ஆலோசனை கூறியிருக்கிறார்.
இது ஒரு மோசமான ஆலோசனை. இன்றைய சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருப்பதால் செருப்பு போடாமல் நடப்பது, நோயை விலை கொடுத்து வாங்குவதற்கு சமம் என்று எச்சரிக்கை செய்கிறார்கள் மருத்துவர்கள்.
விஜய் ஆண்டனி கூறியிருப்பது பொறுப்பற்ற செயல் என்பதற்கு ஒரு சம்பவத்தை விவரிக்கிறார் சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் பாரூக் அப்துல்லா.

’’பல ஆண்டுகளாக நீரிழிவு நோயுடன் இருக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறைக்குள் உள்ளே நுழையும் போதே துர்நாற்றம் வீசவே, காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்குத் தான் பாட்டி வந்திருப்பது புரிந்தது. எதிர்பார்த்தபடி அவரது வலது கால் பாதத்தில் பெரிய புண் அதில் முழுவதும் ஊர்ந்தும் நெளிந்தும் சில புழுக்கள் தென்பட்டன. புழுக்கள் தசை திசுக்களைத் தின்று மிச்சமுள்ள கழிவுகளில் இருந்து வருவதே அந்த துர்நாற்றம்.
நீரிழிவு நோயர்களுக்கு அதிலும் முதியோர்களுக்கு கணுக்காலுக்கு கீழே வரும் புண்கள் “அவசர நிலை” எமர்ஜென்சியாகும். காலம் தாழ்த்த தாழ்த்த முதலில் விரல் பிறகு கணுக்கால் வரை பிறகு முழங்கால் மூட்டுவரை பிறகு மொத்த காலும் என்று பறிபோகும் உறுப்பின் சதவிகிதம் கூடிக்கொண்டே சென்று இறுதியில் தொற்று ரத்தத்தில் கலந்து சிறுநீரகம் – கல்லீரல் – கணையம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளை பாதிப்புக்குள்ளாக்கி செப்சிஸ் எனும் அபாய நிலையை அடைந்து மரணம் வரை இட்டுச் செல்லும்.
இத்தகையதோர் நிலைக்கு காரணம் என்ன?
“என்ன பாட்டி.. இத்தனை வருசமா இது மாதிரி புண் வந்ததில்லையே? எப்டி பாட்டி?”
“சாமி…எப்டியாவது சரி பண்ணி விட்ருங்க சாமி. எனக்கு புண்ணு வந்ததே தெரியலைய்யா. இல்லனா ஓடி வந்துருப்பேன்”
“அது சரி பாட்டி .. இத்தனை வருசம் இப்டி ஒரு புண்ணு வரலையே இப்ப எப்டி வந்தது?”
அவரை அழைத்து வந்த மகன், “ரெண்டு வாரத்துக்கு முன்னாடி செருப்பு வாரு அந்து போச்சாம் சார். செருப்ப மாத்தாம மிச்சம் பண்றேன்னு வீட்டுக்கு வெளியே அப்பறம் கொல்லைக்கு செருப்பு போடாம போய்ருக்கு.. எங்கயோ முள்ளு குத்திருச்சு”
“அது சரி… பாட்டிக்கு கால் மதபதப்பு மரமரப்பு இருக்குறதுனால.. முள்ளு குத்துணதும் தெரியல. புண்ணு வந்ததும் தெரியல. இப்ப புழு நெளியறதும் தெரியல”
“ஏம் பாட்டி.. செருப்பு போடாம வெளிய எங்கயும் போகாதீங்கன்னு உங்களுக்கு எழுதியே கொடுத்துருக்கேனே?”
“ஆமாஞ் சாமி.. என்ன மன்னிச்சுருய்யா.. செருப்பு அந்து போச்சு.. அத்தோட முன்னாடி பழக்கவழக்கம் மாதிரியே செருப்பு இல்லாம நடந்துட்டேன்” பாட்டியின் அறியாமை என்பதா? அல்லது முன்கூட்டியே அறிவுறுத்தியும் சரியாக விழிப்புணர்வு பெறாமை என்பதா? கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயர்களுக்கு கால் புண்கள் எளிதில் ஆறுவதில்லை. இதற்குக் காரணம் கால் பகுதி ரத்த நாளங்கள் சுருக்கத்தை சந்தித்திருப்பதும் கூடவே அந்தப் பகுதியில் நரம்பு மண்டல அழற்சி ஏற்படுவதும் காரணமாகின்றன.
எனவே நான் என்னை சந்திக்க வரும் நீரிழிவு நோயர்களை கட்டாயம் செருப்பின்றி வெளியே நடக்க அனுமதிப்பதில்லை எதையும் வருமுன் காப்பதே நல்லது. இவையன்றி கால் பாத வளைவு சரியாக இல்லாமல் தட்டையான கால்கள் கொண்டவர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். இவர்களுக்கென்று பிரத்யேக செருப்புகள் அணிந்தே தீர வேண்டும் கூடவே கால் பாதம் சார்ந்த எலும்பில் வலி ஏற்பட்டு இருப்பவர்களும் உண்டு. இவர்களுக்கு வீட்டுக்கு உள்ளேயே எம்.சி.ஆர் செப்பல் போட அறிவுறுத்தப்படுகிறது.
இன்னும் செருப்பின்றி வெளியே நடப்பதால் கால் பாதம் வழியாக நுண் புழுக்கள் உள் சென்று குடலில் வாழும். குடலில் இருந்து கொண்டு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும். இதன் விளைவாக ரத்த சோகை நோய் குணமாக வழியே இராது. இதன் காரணமாகத் தான் அரசு பள்ளி சிறார் சிறுமியருக்கு காலணிகள் வழங்கப்படுகின்றன.
கூடவே வருடம் இருமுறை குடல் புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் செருப்பின்றி வெளியே பணி புரிபவர்கள், நடப்பவர்களுக்கு காலில் முள் தைத்து, ஆணி தைத்து அதனால் பல சிக்கல்கள் உண்டாகின்றன. எனவே காலணி போடுவதற்கு மறக்க வேண்டாம்’’ என்கிறார்.
சென்னை அரசு மருத்துவமனையின் மூளை மற்றும் முதுகு தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ப்ரூனோ, செருப்பு போடாமல் நடப்பதால் உருவாகும் இன்னொரு அபாயம் குறித்து விளக்குகிறார்.

‘’குடல் புழுக்கள் பல இருந்தாலும் Ancylostoma duodenale மற்றும் Necator americanus என்பவை மனிதர்களை தாக்கும் வகைகள். இவை குடலினுள் இருந்துகொண்டு, தினமும் சிறிது சிறிதாக ரத்தத்தை உறிஞ்சும். எனவே குடல் புழுக்கள் உள்ள நபருக்கு ரத்த சோகை எனப்படும் அனீமியா வரும்.
நமது உடலில் நுரையீரலில் இருந்து உடலின் பிற பகுதிகளுக்கு பிராணவாயுவை எடுத்து சென்றால் தான் அனைத்து பகுதிகளில் உள்ள திசுக்களும் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்ய முடியும் ரத்த சோகை இருந்தால் இப்படி பிராணவாயுவை எடுத்து செல்வது குறைவாக இருக்கும். எனவே உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் போதிய அளவு செல்லாது. எனவே உறுப்புகளால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது.
ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட நபர்கள் எளிதில் சோர்வடைவார்கள். கண் எரிச்சல் இருக்கும். ஆனால் கண் பரிசோதனை செய்தால் கண் சரியாக இருக்கும். தலைவலி, முதுகுவலி என்று இருக்கும். எக்ஸ் ரே எடுத்து பார்த்தால் எலும்பு சரியாக இருக்கும். இது போல் பல பிரச்சனைகள் இருக்கும். ரத்த சோகை அதிகரித்தால் அதனால் இதயத்திற்கு கூட பாதிப்பு வரலாம்.
மேலும் ரத்த சோகை உள்ள பெண்கள் கர்ப்பமடையும் போது பல பிரச்சனைகள் வரும். குழந்தைக்கு போதிய வளர்ச்சி இருக்காது. பிரசவத்தில் சிக்கல் வரும். பேறுகால மரணங்கள் மற்றும் பச்சிளம் குழந்தை மரணங்களுக்கு ரத்த சோகை மிகவும் முக்கியமான காரணம் ஆகும்.
அதே போல் குழந்தைகள் வயிற்றில் புழுக்கள் இருந்தால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே கொக்கி புழுக்கள் பாதிப்பு என்பது வயிற்றில் புழு உள்ளது என்று எளிதாக கடந்து செல்லக்கூடிய பிரச்சனை அல்ல பேறுகால மரணம், பச்சிளம் குழந்தை மரணம், குழந்தை வளர்ச்சிக்குறைபாடு என்று பல சமூக பிரச்சனைகளின் மூலம் குடற்புழுக்கள் ஆகும் அதே போல் ரத்தச்சோகையினால் உடலில் இருக்கும் இரும்பு சத்து குறைந்தால் முடி உதிர்வது போன்ற பிரச்னைகளும் வரும்.
இந்த குடற்புழுக்கள் எப்படி உடலினுள் வருகின்றன என்றால் அதில் ஒரு சுவாரசியமான விஷயம் உள்ளது காலரா, டைபாயிடு போன்ற கிருமிகளும் குடலுக்குள் வந்து பிரச்சனை செய்கின்றன. ஆனால் காலரா கிருமி என்பது நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது குடிக்கும் நீர் மூலம் உங்கள் குடலினுள் வரும். டைப்பாயிடு கிருமியும் அப்படியே, எனவே நீங்கள் நீரை காய்ச்சி குடித்தால் காலரா, டைப்பாயிடு ஆகியவற்றை தடுக்க முடியும்
குடற்புழுக்கள் அப்படி அல்ல. இந்த புழுக்களின் சிறுவடிவங்கள் உங்கள் காலில் முதலில் தொற்றுகின்றன. பிறகு காலில் இருந்து ரத்தம் மூலம் நுரையீரல் செல்லுகின்றன. நுரையீரலில் ரத்தக்குழாயில் இருந்து காற்றுப்பைகளுக்குள் வருகின்றன. நுரையீரலில் இருந்து மூச்சுக்குழாய் மூலம் வெளிவந்து அப்படியே உணவு குழாய் மூலம் வயிற்றினுள் சென்று குடலுக்குள் செல்கின்றன. எனவே இந்த புழுக்கள் தொற்றுவதை தவிர்க்கவேண்டும் என்றால் செருப்பு அணிந்து நடக்க வேண்டும்…’’ என்கிறார்.
கடற்கரை, புல்வெளி போன்ற இடங்களிலும் சுகாதாரம் இருப்பது உறுதியில்லை என்பதால் செருப்பு போடாமல் நடக்காதீங்க.