நிறைய படித்தவர்களுக்கு பாலியல் அறிவு அதிகம் இருக்காதா?

Image

டாக்டர் நாராயண ரெட்டி அட்வைஸ்

இந்திய அளவில்  உள்ள செக்ஸுவாலஜிஸ்ட்  மருத்துவர் நிபுணர்களில் மிக முக்கியமானவர் பிரபல மருத்துவர் டாக்டர் நாராயணரெட்டி அவருடன் உரையாடல் தொடர்கிறது.

கேள்வி : பொதுவாக இன்றைய மனிதர்கள் செக்ஸில் அதிகம் ஆர்வமாக இருப்பதற்கு காரணம் என்ன?

டாக்டர் :

’’இளமையில் செக்ஸ் பற்றிய ஆர்வம், வேகம் அதிகமாக இருக்கும். இதை சரியாக வழிப்படுத்தி சரியான பாதையில் கொண்டுபோனால், அந்த இளைஞனோ, இளைஞியோ அவர்களின் வளர்ச்சி நல்லாயிருக்கும். அதற்கு பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. ஆனால், நம் பெரியவர்களோ, சமுதாயமோ, ‘செக்ஸ்’ என்கிற வார்த்தையை, அது உலகத்தில் மகா பெரிய குற்றம் என்று நினைத்து அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவதே இல்லை. இதற்கு தீர்வு செக்ஸ் எஜுகேஷன் கொடுப்பதுதான்.

செக்ஸ் எஜுகேஷன் இல்லாததினால் சரியான வழிகாட்டி இல்லாமல் இளைஞர்களும், இளைஞிகளும் தவறான வீடியோக்களை வழிகாட்டும் பல்கலைக்கழகமாக நினைத்துக் கொள்கிறார்கள்.

கேள்வி : வயதானால் செக்ஸ் நாட்டம் குறைந்து விடுமா?

டாக்டர் :

’’வயது அதிகமான மனிதன் செக்ஸில் ஈடுபடமாட்டான், உணர்ச்சியும் குறைவாக இருக்கும் என்பது நிறைய பேரின் தவறான கண்ணோட்டம். உண்மையில் அப்படி கிடையாது. ஒரு மனிதனின் கடைசி நாள் வரைக்கும் செக்ஸ் ஆசை, ஈடுபாடு, சாமர்த்தியமும் இருக்கும். ஆனால் நம் சமுதாயத்தின் நெறிகளினாலும் மற்ற மூட நம்பிக்கைகளினாலும் குழந்தைகள் பிறந்து, அந்தக் குழந்தைகள் வயதுக்கு வந்தபிறகு தங்களுக்கு செக்ஸ் தேவையில்லை என்கிற தவறான நம்பிக்கையில் இருக்கிறார்கள். வயதானால் செக்ஸ் வேகம்தான் குறையுமே தவிர ஆசையோ, சாமர்த்தியமோ குறையாது.’’

கேள்வி : ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணங்கள் என்ன?

டாக்டர் ;

’’விந்து வெளிப்போக்குக் குழாயில் ஏற்படும் அடைப்புகளால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவது உண்டு. இத்தகையோரது விந்து நீர்மத்திலே விந்து அணுக்கள் அறவே இருக்காது. இவர்கள் கருத்தரிப்புத்திறன் அற்ற முழு மலடுகள். கல்லீரல் வியாதியும், சிறுநீரக கோளாறும் மலட்டுத்தன்மைக்கு கொண்டு சென்று விடுவதும் உண்டு.

பொன்னுக்கு வீங்கி அல்லது புட்டாளம்மை விதைப்பையில் கோளாறுகளை ஏற்படுத்தி விடுவதுண்டு. விதைப்பையில் இவ்வாறு ஏற்படும் பிரச்னையை வைரஸ் ஆர்சிடிஸ் என்பர். பொன்னுக்குவீங்கியால் பீடிக்கப்படும் வயது வந்த ஆண்களில் நான்கில் ஒருவருக்கு விதைப்பை பாதிக்கப்படும். சிலரது மலட்டுத்தன்மைக்கு பொன்னுக்கு வீங்கியின் பக்க விளைவே காணமாகவும் அமைந்து விடுகிறது.’’

கேள்வி : பெண்களுக்கு மாதவிடாய் வற்றல் (மெனோபாஸ்) போல ஆண்களுக்கும் மெனோ பாஸ் உண்டாமே?

டாக்டர் ;

’’பெண்களுக்கு மாதவிடாய் நிற்பது போல் ஆண்களுக்கும் உண்டு. விஞ்ஞானிகள் இதற்கு வேறு பெயர் வைத்திருக்கிறார்கள். மாஸ்டர்ஸ் அண்ட் ஜான்ஸன்ஸ் மற்றும் கலோட்னி இதற்கு Male Climacteria  என்று பெயர் கொடுத்தார்கள். பிறகு, மற்ற சில விஞ்ஞானிகள் Male Menopause என்றும் மற்றும் சிலர் Andropause என்றும் பெயரிட்டு உள்ளார்கள். இப்போது மருத்துவ உலகில் ஆண்ட்ரோபாஸ் என்ற பெயரே நிலைத்துவிட்டது.

இந்த நிலைமைக்கான அறிகுறிகள் 50 வயதுக்கு மேல் 1. பொறுமையின்மை, 2. எடை குறைவு, 3. சாப்பாடு குறைதல், 4. தாமதமாக குறி விறைப்பது, 5. விறைப்பு குறைதல், 6. கவனச் சிதைவு உண்டாதல், 7. தளர்ச்சியினால் விரைவில் விந்து போகுதல், 8. எரிச்சல் – இப்படித் தான் ஆண் மெனோபாஸ் இருக்கும். இதனையும் இன்றைய நவீன செக்ஸ் மருத்துவத்தின் மூலம் குணப்படுத்திவிடலாம்.

கேள்வி ; செக்ஸ் தெரபி மூலம் எப்படிப்பட்ட பிரச்னைகளை சரிசெய்ய முடியும்?

டாக்டர் :

ஆண், பெண்ணுக்கு செக்ஸ் குறைகளை நீக்கவும், குறைகள் ஏற்படுவதை முன் எச்சரிக்கையாக தடுக்கவும் உண்டான சிகிச்சை முறையே செக்ஸ் தெரபி எனப்படும். சிகிச்சை முறையில் மருந்து உபயோகிக்கும் போது அது ’ட்ரக் தெரபி’எனவும் உடற்பயிற்சி களை சம்பந்தப்படுத்தி செய்யும்போது ’பிஸியோ தெரபி’எனவும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என மனிதன் பழக சொல்லித் தருவது ’பிஹேவியரல் தெரபி எனவும் சொல்லப்படுகிறது. உடல் ரீதியாக அல்லாமல் மனரீதியாக கோளாறு ஏற்பட்டு உடல்உறவில் குறைகள் நிகழும்போது அதை சரிசெய்ய குறிப்பிட்ட செக்ஸ் வழி முறைகளையும் காம உணர்வு உந்துதல் வழிமுறைகளையும் சொல்வதுதான் செக்ஸ் தெரபி.

நிறைய படித்தவர் என்றால் செக்ஸ் பற்றி அதிக அறிவு இருக்கும் என்று நினைத்துவிடக் கூடாது. திருமணத்திற்கு முன்பு செக்ஸ் தெரபி ஆலோசனை எடுத்துக்கொள்வது இருபாலாருக்கும் நல்லது.

Leave a Comment