டாக்டரைப் பார்க்கப் போகாதீங்க…

Image

நோய் அறியும் கலை

மருத்துவ நண்பர் ஒருவர் சமீபத்தில் ஆழமான கருத்து ஒன்றைப் பதிவு செய்தார். அதாவது, அவரைத் தேடி வரும் நோயாளிகளில் கிட்டத்தட்ட பாதிப் பேருக்கு நோய் இருப்பதில்லை என்று கூறினார்.

அதாவது, ’’தாங்க முடியாத அளவுக்கு வலி, வேதனை என்று வருகிறார்கள். என்னென்ன பிரச்னைகள் என்பதை டாக்டரிடம் சொன்னதுமே அவர்களுக்குப் பாதி நோய் தீர்ந்துவிடுகிறது. பொதுவான மருந்துகள் எடுத்துக்கொண்டதும் மீதியும் சரியாகிவிடுகிறது. உண்மையில், மருந்துகளே அவர்களுக்குத் தேவையில்லை.

உடல் நலமில்லாத தன்னை யாரேனும் மருத்துவமனைக்கு அழைத்து வருவதை விரும்புகிறார்கள். நோய் அனுபவத்தை பிறரிடம் பகிர்வதற்கும், பிறர் தங்களிடம் விசாரிப்பதற்கும் விரும்புகிறார்கள். தன்னை பிறர் கவனிக்க வேண்டும் என்பதே அவர்களுக்குப் பிரதான நோக்கமாக இருக்கிறது. முதியவர்கள் மட்டுமின்றி கணவன், மனைவி, குழந்தைகளும் இந்த யுக்தியை அவர்களுக்கே தெரியாமல் கடைப்பிடிக்கிறார்கள்’’ என்று கூறினார்.

இதற்கு தீர்வு என்ன..?

தலைவலி, உடல் சோர்வு, ஜீரணமாகவில்லை என்று ஒருவர் சொல்வதை அக்கறையுடன் கேட்க வேண்டும். எப்போது முதல் தலை வலிக்கிறது, சரியாகத் தூங்கவில்லையா, தைலம் போட்டுவிடவா, ஆவி பிடித்தாயா என்றெல்லாம் கேட்பது மிகப்பெரிய ஆறுதலாகிறது. அதன் பிறகும் அவ்வப்போடு அக்கறையுடன் விசாரித்தாலே இந்த பிரச்னை நோயாக மாறுவதில்லை.

ஆனால், பெரும்பாலோர் பிறர் சொல்வதை காது கொடுத்துக் கேட்பதில்லை. தன்னைக் கவனிக்க யாருமில்லை என்ற எண்ணமே சாதாரண தலைவலியை தாங்க முடியாத தலைவலியாக்கி, டாக்டரிடம் போக வைக்கிறது. அதேநேரம், தங்கள் பிரச்னையை பிறரிடம் மனம் விட்டுப் பேசுபவர்களும், தங்கள் பிரச்னைகளை மறந்து வேறு வேலைகளில் மனம் ஒன்றி ஈடுபடுபவர்களும் சாதாரண விஷயங்களுக்காக மருத்துவமனைக்குப் போவதில்லை.

ஆகவே, உறவுகள், நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். சின்னச்சின்ன கை வைத்தியம் செய்துகொள்ளுங்கள். தேவையில்லாமல் மருந்துகள் எடுத்துக்கொள்வதும் பக்கவிளைவு தரலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.  

Leave a Comment