கசப்பான உண்மை
என்னைப் போன்று என்னுடைய பிள்ளை கஷ்டப்படவே கூடாது என்ற சிந்தனை ஆணுக்கும் பெண்ணுக்கும் ரத்தத்திலே ஊறியிருக்கிறது. அதனாலே, தங்களால் முடிந்த அளவுக்குப் பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்துவைக்க ஆசைப்படுகிறார்கள்.
தங்கள் மகிழ்ச்சி, கனவு, ஆசை எல்லாவற்றையும் மறந்துவிட்டு பிள்ளைகள் நலனை பெற்றோர்கள் முக்கியமாகக் கருதுகிறார்கள். தங்கள் சொத்துக்களை எல்லாம் உயிருடன் இருக்கும்போதே பிள்ளைகளுக்கு எழுதி வைக்கிறார்கள். இதனாலே, கடைசி காலத்தில் நிறைய பெற்றோர்கள் வருந்தும் நிலைக்கு ஆளாகிறார்கள்.
பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய உண்மை ஒன்று உண்டு. அதாவது, பிள்ளைக்கு படிப்பு கொடுத்து பணம் சம்பாதிப்பதற்கு உதவியாகவும் ஆதரவாகவும் இருப்பது மட்டுமே பெற்றோருக்குப் போதுமானது. பிள்ளைக்குத் திருமணம் முடிப்பதும், சொத்து சேர்ப்பதும் பெற்றோரின் கடமை அல்ல.
பெற்றோர் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அவர்களே அனுபவிக்கும் மனப்பான்மை வர வேண்டும். அதில் மிச்சம் மீதியிருந்தால் மட்டும் பிள்ளைகள் அனுபவிக்கட்டும்.
ஆனால், சின்ன வயதிலிருந்தே பிள்ளைகளிடம் இதனை சொல்லி வளருங்கள். எங்கள் சொத்து உனக்குக் கிடைக்காது. உனக்கு அன்பும் ஆதரவும் மட்டுமே தருவோம் என்று சொல்லி வளருங்கள். இந்த உண்மை புரிந்துவிட்டால் பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்கத் தொடங்குவார்கள். இதுவே, ஒரு நல்ல பெற்றோருக்கு அழகு. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
