பத்திரம் பாதுகாப்பு ரகசியம்
வீடு வாங்குவது என்பதுதான் எல்லோருடைய பொதுவான கவலையாக இருக்கிறது. ஆனால், அதற்குப் பிறகு அதைப் பாதுகாப்பதும், அவற்றுக்கான பத்திரங்களைப் பாதுகாப்பதும் பெரிய வேலையாக இருக்கிறது. ஆம், அவற்றை இன்றைய சூழ்நிலையில் நாம் பாதுகாக்கத் தவறினால், அயலார்கள் அபகரித்துவிடுவார்கள். இந்த நிலையில் நம்முடைய சொத்துக்கு ஆதாரமாக இருக்கும் பத்திரங்களை எப்படிப் பாதுகாப்பது என வழக்கறிஞர் நிலா அவர்களிடம் பேசினோம்.

“நம்முடைய வீடு அல்லது சொத்து என்று சொல்வதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே ஆதாரம் பத்திரம்தான். அதை தலைமுறை தலைமுறையாகப் பாதுகாப்பது நம்முடைய கடமை. முதலில், பத்திரப்பதிவு முடிந்தபின்னர், சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகம் சென்று பதிவு செய்யப்பட்ட பத்திரத்தினை திரும்பப் பெறுதல் வேண்டும். சில நாட்களுக்குப்பின் அதே பதிவகத்தில், உங்கள் பத்திரத்தின் பதிவு எண்ணை குறிப்பிட்டு, ஒரு சான்றிட்ட நகல் வேண்டி மனு கொடுத்து, அதனை அந்த அலுவலகத்திலிருந்து, 20 ரூபாய் பத்திரத்தில் சான்றிட்ட நகலாக தருவதைப் பெற்று, ஏற்கெனவே பதிவுசெய்து திரும்பப் பெற்றிருந்த ஒரிஜினல் ஆவணத்துடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்தல் நல்லது.
தற்போது, உங்கள் சொத்துக்கான பத்திரங்களைப் பொறுத்தமட்டில் உங்களது கிரயப்பத்திரம் பாதுகாக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இப்போது, கிரயப் பத்திரத்தின் ஜெராக்ஸ் நகல் ஒன்றினை சம்பந்தப்பட்ட வருவாய் அலுவலகத்தில் சமர்ப்பித்து, உங்கள் சொத்துக்கான வரி விதிப்பினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் வாங்கிய சொத்துக்கான வரிவிதிப்பு உங்கள் பெயருக்கு ஏற்படுத்துவதும் உங்கள் உரிமையை நிலைநாட்டக்கூடிய ஒரு கூடுதல் ஆவணமே. அதுபோல், வருடத்துக்கு ஒருமுறை அல்லது இரு முறை என உங்கள் சொத்துக்கான வில்லங்க சான்றிதழ் தாக்கல்செய்து தேவையில்லாத வில்லங்கம் எவையும் உள்ளனவா அல்லது உருவாக்கப்பட்டுள்ளனவா எனப் பார்த்து வருதலும் அவசியம்.
மேலும், இதுதவிர பத்திரங்களைப் பத்திரப்படுத்த வேண்டும் என்பதற்காக லேமினேஷன் செய்வது தவறு. காரணம், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும். அதேநேரத்தில் அவற்றை, தனித்தனியாகப் பிரித்து, தைத்து வைக்கலாம். ரப்பர் பேண்ட், கிளிப், குண்டூசி போன்றவைகளைத் தவிர்ப்பது நல்லது. சிலர், ஆவணங்களை பாலித்தீன் கவரில் போட்டு, அதற்குள் அந்து உருண்டை போன்ற ரசாயன பொருட்களைப் போட்டு வைப்பார்கள். அப்படிச் செய்வதும் ஆபத்துக்கு வழிவகுக்கும்.
பொதுவாக, பத்திரங்களை சாதாரண ஃபைல்களில் வைத்து பத்திரப்படுத்துவதே நல்லது. மேலும், அனைத்து ஆவணங்களையும் தேதிப்படி வரிசைப்படுத்தி, பென்சிலால் பக்க எண்கள் போட்டுவைக்கலாம். பயணங்களின்போது, ஒரிஜினல் மற்றும் இதர பத்திரங்களை பத்திரமாக கையாள்கிறோம் என சுமந்துசெல்வதை தவிர்த்தல் வேண்டும். அடிக்கடி பத்திரங்களை எடுத்து, நல்ல சூரிய வெளிச்சத்தில் ஒவ்வொரு தாளாக, தனித்து, பிரித்து வைக்கலாம். பிறகு சிறிதுநேரம் கழித்து, மீண்டும் அவ்வாறே பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
அதுபோல், வங்கி லாக்கர்களில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை, ஆண்டுக்கு இரண்டு முறையாவது வெளியில் எடுத்து, இவ்வாறு சூரிய வெளியில் வைத்து, பின்பு மீண்டும் பெட்டகப்படுத்தலாம். இப்படிச் செய்வதால் பத்திரத்துக்கு எந்த ஆபத்தும் இருக்காது. பத்திரமும் நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்” என்றார்.
– எம்.நிலா, மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
தொடர்புக்கு : 7299753999