தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றாதீங்க ஸ்டாலின்
சமீபத்தில் செய்த ஒரு நாள் மழையில் பெருநகர சென்னை ஸ்தம்பித்து நின்றது. அப்போது இரவும் பகலுமாக களத்தில் நின்ற தூய்மைப் பணியாளர்களே தண்ணீரை முறைப்படி அனுப்பிவைத்து, சென்னை மக்களுக்கு நிம்மதி கொடுத்தார்கள். அந்த வகையில் கடுமையாக உழைத்த தூய்மைப் பணியாளர்கள் 600 பேருக்கு பிரியாணி விருந்து கொடுத்த முதல்வர் ஸ்டாலின் தானும் அருகே அமர்ந்து சாப்பிட்டு மரியாதை செலுத்தியிருக்கிறார்.
இந்த மதிப்பும் மரியாதையும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான ஒன்று. அதேநேரம், இது மட்டும் போதுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், தூய்மைப்பணியாளர்களுக்கான பலவேறு கோரிக்கைகள் நிறைவேற்றபடாமல் இருக்கின்றன. வேலை நிரந்தரம், சம்பள உயர்வு உட்பட. இந்த தொழிலாளர்களை சுரண்டும் தனியார் கார்பரேட் நிறுவனம் மிக மோசமான நிலையில் இவர்களை வைத்திருக்கிறது.
அவர்கள் பயன்படுத்தும் துடப்பம் வரையில் அவர்களது சொந்த செலவிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும், முழுமையான ஓய்வோ, விடுப்போ இல்லாத நிலை, உடல்நல பாதுகாப்பு உபகரணங்கள் உட்பட பல உரிமைகள் உறுதி செய்யப்படாமல் உள்ளன. கடந்த ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத்தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என இந்த தொழிலாளர்களுக்கான கோரிக்கைகள் குவிந்து கிடக்கின்றன.
பேரிடர் காலங்களில் சென்னையை மீட்டெடுத்த தொழிலாளர்கள் இவர்கள். ஆனால் இவர்களது சராசரி வாழும் காலம், சராசரி கல்விநிலை, பொருளாதார நிலை என ஆய்வுசெய்து இம்மக்களின் வாழ்க்கை தரம் உயர போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதில்லை. தூய்மைப்பணி என்பது திறன் சார்ந்த பணியல்ல, சாதி அடிப்படையில் திணிக்கப்பட்ட பணி. மூலதனத்தை திரட்டிக்கொள்ளுமளவு ஊதியம் தரும் பணியல்ல, வளர்த்து எடுப்பதற்கு இது தொழில் அல்ல.
எனவே இப்பணியில் உள்ளவர்கள் வறுமை-கல்வியின்மை-சுகாதாரகேடு-சாதியஒடுக்குமுறை-முறைசாராதொழிலாளர் எனும் வட்டத்திலிருந்து மீள முடியாமல் காலங்காலமாக சுரண்டப்படுகிறார்கள். இத்தொழிலாளர்களின் உயர்விற்கும், சுயமரியாதை வாழ்விற்கும், இப்பணியிலிருந்து வெளியேறும் வாய்ப்பையும், பிற பணிகளுக்கு செல்லும் வேலைவாய்ப்பையும் உருவாக்குவதை முன்னெடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார்கள்.
எளிய மக்களுக்கான அரசாக இருக்க வேண்டும் என்பது தான் மக்களின் எண்ணம். இதை புரிந்துகொண்டு ஸ்டாலின் செயல்பட வேண்டும்.