• Home
  • பணம்
  • ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாந்து போகாதீங்க

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஏமாந்து போகாதீங்க

Image

பணம் முக்கியமுங்கோ



சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு கிரிக்கெட் பேட் ஆர்டர் செய்தார். வந்து சேர்ந்தது. அதை உடனடியாக அவர் திறந்து பார்க்காமல் அவசரத்தில் சென்றுவிட்டார். இரண்டு நாட்களுக்குப் பிறகு வந்து பார்த்தநேரத்தில், அதில் இருந்தது ஒரு சாதாரண கட்டை மட்டுமே. அதை அவர் சொன்னபோது நிறுவனம் நம்பவில்லை. ஏனென்றால், பொருள் வாங்கியது குறித்து அடுத்தடுத்து வந்த மெசெஜ்களை நண்பர் வழக்கம் போல் ஓகே கொடுத்துவிட்டார்.

இதில் நமது தவறு இருக்கிறது என்றாலும், ஏமாற்று வேலையும் நடக்கிறது. எனவே, எச்சரிக்கையாக இருந்தால் மட்டுமே பணத்தை மிச்சப்படுத்த முடியும். ஒரு பொருள் வாங்குவதற்காக நாலு கடை தேடி அலைவது நமக்கு நேர இழப்பு. விலை ஒப்பிட்டுப் பார்த்து வாங்க முடியாமல் போவதால் பண இழப்பு ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் தீர்ப்பதற்காக வந்தவையே ஆன்லைன் ஷாப்பிங்.

இதில் பணம் இழக்காமல் ஆதாயத்தோடு வாங்குவதற்கான வழிகளைப் பார்க்கலாம். இதில் இருக்கும் வசதி என்றாலே கஷ்டப்பட்டு கடையைத் தேடி செல்வதற்குத் தேவையில்லை. பணம் செலுத்தும் இடத்தில் நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை. கம்யூட்டரிலேயே பல்வேறு நிறுவன பொருட்களை அலசி ஆராய்ந்து, விலைகளை சரிபார்த்து வாங்கிக்கொள்ள முடியும். இதெல்லாம் ஆன்லைன் ஷாப்பிங்கில் கிடைக்கும் வரம் என்றாலும், ஒருசில  சிக்கல்களும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

 ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, நீங்கள் வாங்க விரும்பும் பொருள்களை ஏற்கெனவே வாங்கியவர்களின் கமென்ட்களை முழுமையாகப்  படித்தபிறகு வாங்குவது நல்லது.  ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன், நமக்கு அது அவசியமில்லை எனத் தோன்றும் அல்லது வேறு ஒரு பொருளை வாங்கத் தோன்றும். அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும் வசதியை, ஷாப்பிங் செய்யும் தளம்  வழங்குகிறதா என கவனித்து வாங்கவும். அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளர்கள் பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒருசில டெக்னிக்கைப் பின்பற்றுகின்றன. அதாவது, `பொருளை வாங்க இரண்டு நிமிடங்களே அவகாசம் இருக்கிறது. அதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங்களுக்குக் கிடைக்காது’ என்று அவசரப்படுத்துவார்கள். இதுமாதிரியான ஷாப்பிங் தளங்களை கண்ணை மூடிக்கொண்டு  தவிர்ப்பதுதான் நல்லது.  

பொருள்களைத் திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை வழங்க மறுப்பதிலும் பெரும்பாலான தளங்கள் மோசடி செய்கின்றன. சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்களின் தளத்திலேயே விதிமுறைகளைப் பட்டியல் போட்டிருப்பார்கள். மிக முக்கியமான விதிமுறைகளை நம் கண்ணுக்குத் தெரியாதபடி போட்டிருப்பார்கள். அதையெல்லாம் கவனித்து வாங்க வேண்டும். குறிப்பாக, நாம் பொருட்களை வாங்க விரும்பும் வலைத்தளம் பற்றியும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். அடுத்து, பல்வேறு வலைத்தளங்களோடு இந்த தளத்தின் விலையையும் ஒப்பிட வேண்டும்.

குறிப்பிட்ட பணத்துக்குப் பொருள் வாங்கினால் கொண்டுவந்து தரும் செலவு இலவசம் என்று போட்டிருப்பார்கள். அந்த தளத்திற்குப் போகாதீர்கள். தேவையில்லாத பல பொருட்களை நீங்கள் வாங்கவேண்டிய சூழல் ஏற்படும். இது பண இழப்பு.

அவசரமாக ஒரு பொருள் தேவை என்றாலும் ஆன்லைனில் போடாதீர்கள். ஏனென்றால் தாமதமாக வாய்ப்பு இருக்கிறது, வந்த பொருளை திருப்பியனுப்ப நேரலாம். அதே பொருளை அவசரத்துக்கு மீண்டும் பக்கத்தில் போய் வாங்க நேரிடும். எனவே, நிதானமாக வாங்கக்கூடிய பொருட்களை மட்டுமே இதில் வாங்குங்கள்.


நாம் ஆன்லைனில் பொருட்களை வாங்க முற்படும்போது, அந்த இணையத்தளம் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்ய பிரவுஸர் முகவரி பட்டியில், https அல்லது பேட்லாக் உள்ளதா என்று சரிபார்த்து, நிதி பரிமாற்றங்களை தொடர வேண்டும். பின்பு பரிமாற்றங்கள் முடித்தவுடன் உடனடியாக கிரெடிட் கார்ட் அறிக்கையை சரிபார்த்து, நீங்கள் கட்ட வேண்டிய தொகை சரிதானா என்று பார்க்கவும். அதில் மாற்றங்கள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்யவும். டெபிட் அல்லது கிரெடிட் அட்டை எண்ணை ஷாப்பிங் வலைத்தளங்களில் சேமிக்க வேண்டாம். நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்த பின்னர் அனைத்து இணைய பிரவுஸர் குக்கீகளை நீக்கீவிட்டு பி.சி யை அணைக்கவும். ஏனெனில் ஸ்பேம்கள் மற்றும் ஃபிஷர்ஸ் ஆகியோர் இணையத்துடன் இணைக்கப்பட்ட கணினியை குறிவைத்து ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்பி உங்கள் தனிப்பட்ட தகவலை சேகரிக்கக்கூடிய, தீங்கிழைக்கும் மென்பொருளை நிறுவ முயற்சி செய்வர்.

 ‘பணம் செலுத்துதல், வாங்குதல் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை உறுதிப்படுத்தவும்’ போன்று வரும் மின்னஞ்சல்களை கண்டு எச்சரிக்கையாக இருக்கவும். முறையான வணிகர்கள் அத்தகைய மின்னஞ்சல்களை அனுப்ப மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அத்தகைய மின்னஞ்சல்களைப் பெற்றால் உடனடியாக வியாபாரியை அழைத்து தெரிவிக்கவும். நீண்டகாலத்திற்கு ஒரே பாஸ்வோர்டை பயன்படுத்த வேண்டாம்.  உங்கள் மின்னஞ்சல் ஐடி, வங்கி கணக்கு, கடன்-பற்று அட்டை பாஸ்வோர்டை அடிக்கடி மாற்றவும். நீங்கள் அனைத்திற்கும் ஒரே பாஸ்வோர்டு பயன்படுத்தும்போது, ஹேக்கர்கள் உங்கள் ஒரு பாஸ்வோர்ட்டை கண்டுபிடித்தால் பிறவற்றையும் எளிதில் கண்டுபிடிக்கக்கூடும்.
எனவே எல்லா வலைத்தளங்களுக்கும் வெவ்வேறு பாஸ்வோர்டை பயன்படுத்துங்கள். அனைத்து கடவுச்சொற்களையும் நினைவில் வைத்திருப்பது மிகவும் கடினமாக இருந்தாலும், அவை பாதுகாப்பை அதிகரிக்கும்.  எப்போதும் பாதுகாக்கப்பட்ட இணைய இணைப்பை பயன்படுத்தவும். பொது வைஃபை இடங்கள் இணைய தாக்குதல்களால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. சைபர் குற்றவாளிகள் பிரபலமான  வணிக வலைத்தளங்களில் பெரும் தள்ளுபடிகள் இடம்பெறும் செய்திகளை அனுப்புகின்றனர். இதுபோன்று வாட்ஸ் ஆப் குழுக்கள் அல்லது தெரியாத எண்களிலிருந்து வரும் சலுகைகளை க்ளிக் செய்வதைவிட நிஜமான வளைதளங்களுக்குச் சென்று உறுதி செய்யவது நல்லது. ஆன்லைன் ஷாப்பிங் சுலபமாய் இருக்கிறது என்பதற்காக அவசரப்பட்டு ஏமாந்துவிடாதீர்கள்.

Leave a Comment