விஜயகாந்த்துக்கு குரு பூஜை தேவையா..?

Image

அரசியல் விளையாட்டு

கருணாநிதி, ஜெயலலிதா போன்ற அரசியல் ஆளுமைகள் இருந்த நேரத்திலேயே தில்லாக கட்சியைத் தொடங்கி மாஸ் காட்டினார் விஜயகாந்த். மக்களுடன் மட்டுமே கூட்டணி என்று களத்திற்கு வந்தவர் எப்போது ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தாரோ அப்போதே அவரது அரசியல் எதிர்காலம் முடங்கிவிட்டது. சட்டமன்றத்தில் ஜெயலலிதாவை வலிமையுடன் எதிர்த்த பிறகு, அவர் கட்சியிலே அவருடைய ஆளுமை கேள்விக்குரியதாக மாறிவிட்டது.

விஜயகாந்த் கட்சியினரைக் கொண்டே விஜயகாந்த் எனும் பிம்பத்தை உடைத்துத் தள்ளினார் ஜெயலலிதா. அடுத்த தேர்தலில் விஜயகாந்த் முதல்வர் என்று கோஷமிட்ட சொன்ன மக்கள் நலக் கூட்டணியின் பொம்மலாட்டத்தில் அவரது கட்சியின் ஒட்டுமொத்த பிம்பமும் உடைந்துபோனது. அடுத்த தேர்தலில் ஒரே நேரத்தில் அ.தி.மு.க.வுடனும் தி.மு.க.வுடனும் கூட்டணி பேரம் பேசி பிரேமலதா அவமானப்பட்டார்.

அதன் பிறகும் உடல் நலமில்லாமல் எதிரே நிற்கும் நபர்களை அடையாளம் காணவே சிரமப்பட்ட நிலையிலும், அவரை பிரசாரத்துக்கு அழைத்துச்சென்று அவமானப்படுத்தினார் பிரேமலதா. அவர் மறைந்த நேரத்திலும் பிரசாரமே பேசினார் பிரேமலதா.

இப்போது அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை குரு பூஜை என்று ஒரு கூத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இறந்துபோன தலைவர்களை தனி நபர்களை நினைவு நாளில் கொண்டாடுவது தவறு இல்லை. அவரது பெருமைகளை பரப்புவதற்கு அந்த நாளை பயன்படுத்துவது நல்ல முயற்சி. ஆனால், குரு பூஜை என்று சொல்லி அவரை கடவுள் போன்று வழிபடுவதும், கோயில் கட்டி ஆரத்தி காட்டுவதும் தவறான முன்னெடுப்பு.

கருணாநிதி சமாதியில் வடை, இனிப்பு வைத்து கொண்டாடுவது எத்தனை அவமானமோ அதைவிட மோசமான செயல். இது  ஒரு கட்டத்தில் ஜாதி அடையாளமாக மாறிவிட வாய்ப்பு உண்டு. கட்சித் தலைவர்கள் தொண்டர்களை சரியான வழியில் நடத்தவேண்டுமே தவிர, மூட நம்பிக்கையின் பக்கம் திசை திருப்பக்கூடாது.

Leave a Comment