அதிர்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள்
அண்ணா தி.மு.க. ஒருங்கிணைந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும், தனியே நிற்கும் வரை வெற்றிக்கு வாய்ப்பில்லை. அதனால் ஒன்றாக சேர்வோம் என்று கூவிக்கொண்டே இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதாவது, தி.மு.க.வை அழிப்பதற்காக ஒன்று சேர்வோம் என்று பன்னீர்செல்வம் அழைக்கும் நிலையில், அவரது மகன் ரவீந்திரநாத் இன்று பதவியேற்றிருக்கும் உதயநிதிக்கு வாழ்த்து கூறியிருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.
பா.ஜ.க.வினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில் பா.ம.க. உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். அதேநேரம் பா.ஜ.க.வுக்கு ஆதரவு கொடுத்துக்கொண்டு அதேநேரம் அ.தி.மு.க.விலும் இணைய வேண்டும் என்று பன்னீர் ஆசைப்படும் நேரத்தில் அவரது மகன் ரவீந்திரநாத், ‘’சகோதரர் உதயநிதி பதவியேற்புக்கு வாழ்த்துக்கள்’’ என்று நீளமாக பதிவு போட்டிருக்கிறார்.
இது குறித்து அ.தி.மு.க.வினர், ‘’எடப்பாடி பழனிசாமி யாரையும் இணைத்துக்கொள்ள மாட்டேன் என்று தனித்து நின்று தி.மு.க. வெற்றிக்குப் பாடுபடுகிறார். அனால், ஓ.பன்னீர்செல்வமும் பாஜகவுக்கு விசுவாசமாக இருந்துகொண்டு ஒருங்கிணைப்பு என்றும் பேசி அ.தி.மு.க.வை பிளவு படுத்திக் கொண்டு இருக்கிறார். அவரது மகனை வைத்து திமுகவுடன் உறவு வைத்துக் கொண்டு இருப்பது அவர் அதிமுகவுக்கு விசுவாசமாக இருப்பது போல் தெரியவில்லை. இதற்கு அவர் மகன் நேரடியாகவே திமுகவில் சேர்ந்து கொள்ளலாமே. எடப்பாடியும் பன்னீரும் போட்டி போட்டுக் கொண்டு திமுகவை வாழ வைக்கவும் ஆள வைக்கவும் மட்டுமே உறுதுணையாக இருக்கிறார்கள்’’ என்று புலம்புகிறார்கள்.