வைரலாகும் கவர்னர் தேநீர் விருந்து
திராவிட மாடல் அரசுக்கு தொடர் தலைவலியாக இருப்பவர் கவர்னர் ஆர்.என்.ரவி. சுதந்திர தினத்தையொட்டி அவர் வழங்கும் தேநீர் விருந்தை கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் புறக்கணிக்கும் நிலையில் தி.மு.க.வினர் கலந்துகொள்வது கடும் சர்ச்சையாகியுள்ளது.
இதுகுறித்து மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, ‘’’தமிழ்நாட்டு முதல்வர்’ என்பவர் தமிழ் மக்களின் பிரதிநிதி. திராவிட இயக்கத்தின் விளைச்சல். ஒட்டுமொத்த தமிழர்களை இழிவுபடுத்தும் டில்லியின் கைக்கூலியை, பார்ப்பனிய வெறியனை, திராவிட இயக்க வெறுப்பாளரை, மாநில உரிமையை நசுக்குபவரை, நீட் மாணவ படுகொலையின் ஆதரவாளரை, வள்ளுவரை இழிவுபடுத்துபவரை, எதேச்சதிகார ஆளுனரை நிராகரிப்பதே சுயமரியாதையின் அடையாளம். மாநில உரிமையை நசுக்கும் ‘ஆட்டுக்கு தாடி’ என சொல்லப்பட்ட ‘ஆளுனர்’ பதவிக்கு எதற்காக திமுக மதிப்பளிக்க வேண்டும்? இச்சந்திப்பும், அங்கீகாரமும் கண்டிப்பிற்குரியது. வழக்கம் போல திமுக அரசவை அறிஞர்கள், யூட்யூப் புரட்சியாளர்களைக் கொண்டு திமுக மாடலை, ‘திராவிட மாடல்’ என மல்லுக்கட்ட ஆரம்பியுங்கள்.’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
நாம் தமிழரின் இடும்பாவனம் கார்த்தி, ‘’ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் கடந்த மாதம் ஜூலை 31 அன்றோடே முடிந்துவிட்டது. அவரது பதவியை நீட்டிப்பது குறித்தான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இதுவரை ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிடவில்லை; அடுத்த ஆளுநர் வரும்வரை தற்காலிகமாக ஆளுநராகத் தொடரவும் வழிகாட்டுதல் கொடுக்கப்படவில்லை.
இந்நிலையில், ஆர்.என்.ரவி ஆளுநராக நீடிப்பது என்பதே அப்பட்டமான அதிகார முறைகேடு; சட்டவிரோதம்! இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி, வலுவான அரசியல் போராட்டமும், சட்டப்போராட்டமும் செய்து ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வேண்டிய திமுக அரசு, அதனைச் செய்யாமல் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் கூச்சமின்றி பங்கேற்கிறது. கெட் அவுட் ரவி என அரசியலுக்காக முழங்கிய திமுக அரசு, இன்று ஆர்.என்.ரவியை உண்மையிலேயே தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்ற வாய்ப்பிருந்தும் அதனைச் செய்யாது அவரோடு அனுசரணையாக நடந்துகொள்கிறது…’’ என்று குற்றம் சுமத்தியிருக்கிறார்.
கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சுயமரியாதையை விட்டு கவர்னரை கட்டிப் பிடிக்கிறார்கள் என்றால், இவ்வளவு கேவலமானதா திராவிட மாடல் என்று தான் கேட்கத் தோன்றுகிறது.