பொய் பேசுவது ஒரு நோயா?
கதையை விரும்பிப் படிக்கிறோம். சினிமாவை ரசித்துப் பார்க்கிறோம். அந்த புத்தகத்திலும் சினிமாவிலும் இருப்பது பொய் என்று தெரிந்தும் அவர்களுடைய கற்பனையை வெகுவாகப் பாராட்டுகிறோம்.
அதேநேரம் நடக்காத ஒன்றை நடந்தது போன்றும், செய்யாத ஒன்றை செய்தது போன்றும், பேசாத ஒன்றை பேசியது போன்றும் பொய் சொல்வதை யாரும் விரும்புவதில்லை. தான் சொல்வதை நம்புவதை யாரும் நம்பவில்லை என்றாலும் அதை அழுத்தம் திருத்தமாக மீண்டும் மீண்டும் சொல்வதை மித்தோமேனியா என்கிறது உளவியல். இப்படி பொய் சொல்வது நோய் இல்லை என்றாலும் போபியா போன்றதொரு அசாதாரணமான மனநிலை.
கட்டுப்படுத்த முடியாமல் பொய் சொல்வதை மித்தோமேனியா என்று உளவியல் மருத்துவம் கூறுகிறது. மற்ற நாட்டினரை விட இந்தியர்கள் அதிகம் பொய் பேசுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் என்னவென்றால், நமது வாழ்க்கையில், பண்பாட்டில் பொய் அதிகம் கலந்திருக்கிறது. ‘ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்’, ‘நல்ல காரியத்துக்குப் பொய் சொல்வது தப்பில்லை’, என்றெல்லாம் பொய் சொல்வதை சமூகம் ஊக்கப்படுத்துகிறது.
குழந்தைக்குப் பள்ளியில் லீவு வேண்டும் என்றால், ‘உடம்பு சரியில்லை, தாத்தா செத்துவிட்டார்’ என்றெல்லாம் பெற்றோரே காரணம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அதனால், பொய் சொல்வது மனிதர்களால் தவிர்க்க முடியாத செயலாகக் கருதுகிறார்கள். சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பொய் சொல்லும் மோசமான வழக்கம் இப்போது பெருகி வருகிறது.
எதுவெல்லாம் பொய் என்று பார்க்கலாம். இல்லாத ஒன்றை இருப்பது போல் கூறுவது பொய், நடக்காத ஒன்றை நடந்தது போல் கூறுவது பொய், ஒருவரிடம் பேசியதை, அப்படி நான் பேசவில்லை கூறுவது பொய், அடுத்தவர்கள் நம்மை மதிக்க வேண்டும் என்பதற்காக நம்மை உயர்வாகக் கூறுவது பொய், பார்க்காத ஒன்றை பார்த்தது போல் சாட்சி கூறுவது பொய், ஒருவரை வீழ்த்துவதற்காக உண்மையென பொய்யான தகவல்களை கூறுவது பொய்.
அடுத்தவர் செய்யும் தவறுகளை மறைப்பதற்காகக் கூறுவது பொய், தான் தவறான பழக்க வழக்கங்களில் இருந்து கொண்டு ஏமாற்றி வாழ்வது பொய், தான் மட்டும் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக சில உண்மைகளை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது பொய், மற்றவர்கள் செய்த தவறுகளுக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதும் மறைப்பதும் பொய், யாரும் கஷ்டப்பட வேண்டாம் என்பதற்காக உண்மையைச் சொல்லாமல் மறைப்பதும் பொய். திருமணத்திற்குப் பிறகு நான் மாறிவிடுவேன் என்று ஏமாற்றி வாழ்க்கையைத் தொடங்குவதும் பொய்.
100% பொய் சொல்லாமல் யாரும் வாழ முடியாது என்றாலும், கூடியவரை உண்மை பேசுவது மனதிற்கு நிம்மதியும் திருப்தியும் தருகிறது. உண்மையை சொல்ல முடியாத இக்கட்டான தருணங்களில் மௌனம் காத்தல் சிறந்தது.
பொய் சொன்னால் சாமி கண்ணை குத்தும் என்று சிறுவயதில் பயமுறுத்தி இருப்பார்கள். அப்படி எதுவும் நடக்காது என்பது தெரிவதால் சிறு வயதிலேயே பொய் சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். பொய் சொல்வதால் நிறையவே சிக்கல்கள் உருவாகும். ஒரு பொய் சொல்ல ஆரம்பித்தால் அதை மறைக்க மற்றொரு பொய், அதை மறைக்க மற்றொரு பொய் என்று அடுக்கடுக்காக நிறைய பொய்கள் சொல்ல வேண்டிவரும். சொன்ன பொய்கள் அத்தனையையும் மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தவறாக மாற்றிச் சொல்லி மாட்டிக்கொள்வது நிச்சயம். நிறைய பொய்களை ஞாபகம் வைத்துக் கொள்வது ரொம்ப கடினம். எனவே பேசாமல் உண்மையைப் பேசி விடலாம்.
வாயைத் திறந்தாலே பொய் பேசுபவர்கள், எதிரே இருப்பவர்கள் நம்ப மாட்டார்கள் என்று தெரிந்தும் பொய் பேசுபவர்கள், கட்டுப்படுத்த முடியாமல் பொய் பேசுவதில் அரசியல்வாதிகள் முன்னணியில் இருக்கிறார்கள். தாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் எதுவும் மாறிவிடப் போவதில்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பாலாறும், தேனாறும் ஓடும் என்று பேசுவார்கள்.
அற்பமான காரணங்களுக்காகவும் பொய் சொல்வது, பொய்யை நம்ப வேண்டும் என்பதற்காக அதற்கு ஏகப்பட்ட அலங்காரம் செய்வது போன்றவை நோயின் அறிகுறியாகவும் மனச்சிக்கலாகவும் கருதப்படுகிறது. இதற்கு சீமான் சொல்லும் ஆமைக்கறி கதையை மருத்துவர்களே உதாரணம் காட்டுவது உண்டு.
அதாவது, மித்தோமேனியா சிக்கலுக்கு ஆளானவர்கள் பொய்களை அலங்காரத்துடன் புதுப்புது தகவல்களுடன் மிகவும் உறுதியாகவும் தைரியமாகவும் விளக்கமாகப்ப் பேசுவார்கள். சாத்தியமற்ற சம்பவங்களை எல்லாம் டிராமடிக்காக விவரிப்பார்கள். பேசும்போது ஒருவகை பதட்டம் மற்றும் ஆர்வம் மேலிடப் பேசுவார்கள்.
பொய்யை அம்பலப்படுத்துகையில் தீவிரமாக எதிர்வினை ஆற்றுவார்கள். தொடர்ச்சியாக கதையை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். பொய் சொன்னதைக் கண்டுபிடித்து விட்டாலும் எந்த குற்றவுணர்வும் இன்றி அலட்சியமாக இருப்பார்கள். பொய் சொல்லும்போது கிளர்ச்சி கொள்வது, தங்களுக்கு நடந்ததாக பிறர் சொன்னவற்றை தன் கதையாக திரித்துச் சொல்வது, சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பது என்று தங்களின் பொய்களை ஒரு கட்டத்தில் அவர்களே உண்மை என்று நம்பத் தொடங்குவார்கள்.
பொய் சொல்பவர்களுக்கு என்றே பிரத்யேக உடல்மொழி இருக்கிறது. கண்களைப் பார்த்து பேச்சை துவங்க மாட்டார்கள், மூக்கையும் முகத்தையும் அவ்வப்போது துடைத்துக் கொள்வார்கள், கண்கள் ஒரு இடத்தில் நிற்காமல் அலைபாயும், மனதில் அடுத்த கதை தயாரிக்கும் மும்முரத்தில் இருப்பார்கள்.
மித்தோமேனியா சிக்கலுக்கு ஆளானவர்கள் பொய் சொன்னதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அவர்களால் பொய் சொல்லாமல் வாழ முடியாது. எனவே, இவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலானது. முக்கியமாக இந்த நிலையில் அவதிப்படுபவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாக ஒப்புக்கொள்வதில்லை. பொய் சொல்ல வேண்டும் என்ற கட்டாய விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். அவரது பொய்கள் மிகைப்படுத்தப்பட்டவை அல்லது முற்றிலும் உருவாக்கப்பட்டவை.
மித்தோமேனியா உள்ளவர்கள் இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவதில் சிரமம் இருக்கலாம், ஏனெனில் அவர்களின் பொய்கள் அவர்களின் உறவு, வேலை மற்றும் அவர்களின் வாழ்க்கையின் பிற அம்சங்களிலும் சிக்கல்களை ஏற்படுத்தும். அவர்கள் எதையும் நிர்ப்பந்தமாக பொய் சொல்லலாம், அவர் உண்மை சொல்கிறாரா இல்லையா என்பதை அறிவது கடினம் என்பதால், சொந்த வாழ்க்கையிலும் சிக்கல்கள் உருவாகலாம்.
மைத்தோமேனியாக் கோளாறுக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்றாலும், அவர்களுடைய நிலைமையைப் புரிய வைக்க வேண்டும். அவர்கள் அதிலிருந்து வெளியேற முயற்சிப்பதற்கு உதவ வேண்டும். ஆதரவு, அன்பு, அனுசரணை கொடுப்பதன் மூலம் அவர்கள் பொய்யில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறலாம். ஆனால், இதுவும் குடி போதை போன்றது. மீண்டும் அவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் பொய் சொல்லத் தொடங்குவார்கள்.