இந்தியாவில் டிரோல் நம்பர் ஒன்
பட்ஜெட் வெளியீட்டுக்குப் பிறகு இந்திய அளவில் டிரோல் செய்யப்படும் நபர்களில் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று சொல்லும் அளவுக்கு எல்லோரும் கிண்டலடிக்கிறார்கள். அவரது நடவடிக்கைகளும் அப்படித்தான் இருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி, ‘பட்ஜெட்டுக்கு அல்வா கிண்டுவதில் கூட பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்கள் இடம் பெறவில்லை’ என்று பேசியதும், இதெல்லாம் ஒரு பேச்சா என்பது போல் தலையில் அடித்துக்கொண்டு சிரித்தார்.
உடனே ராகுல்காந்தி, ‘இது சிரிக்கக்கூடிய விஷயமல்ல, அந்த இடத்தில் கூட ஜாதி பிரதிநிதித்துவம் இல்லை என்றால், அந்த மக்களுக்கு எப்படி நியாயம் கிடைக்கும்?’ என்று கடுமையாகப் பேசினார்.
அதேபோல் பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரே இடம் பெறவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக கண்டனம் தெரிவித்தார். அதாவது, தமிழ்நாட்டில் அதீக வரி வசூல் செய்து விட்டு தமிழ்நாடு புறக்கணிப்பு செய்யப்படுகிறது என்பதையே முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் பெயரை குறிப்பிடவில்லை என்றால் மாநிலத்திற்கென சிறப்பு திட்டங்கள் ஏதும் இல்லை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கும் நிதி வழங்கப்படவில்லை என்றும் அர்த்தம் என்பது சின்னக் குழந்தைகளுக்கும் புரியும்.
ஆனால், இந்த விஷயத்தை ஏதோ தீவிரக் குற்றச்சாட்டு போன்று எடுத்துக்கொண்டு நிர்மலா சீதாராமன், ‘’2005 – 06 நிதி ஆண்டு பட்ஜெட்டில் 18 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை 2006 – 2007 நிதியாண்டில் 13 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை 2007 – 2008 நிதியாண்டில் 16 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை 2008 – 2009 ஆண்டுகளில் 13 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை 2009 – 2010 ஆண்டுகளில் 26 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை’’ என்று பதில் கூறியிருக்கிறார்.
நிதியமைச்சருக்கு உண்மையிலே புரியவில்லையா அல்லது புரியாதவர் போன்று நடிக்கிறாரா..?