எம்.ஜி.ஆருக்கு கணக்கு கேட்க உரிமை இல்லையா?

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 56

சைதை துரைசாமி கூறிய உண்மைகளின் அடிப்படையில் தனக்கு எதிராக தி.மு.க.வில் நடக்கும் சூழ்ச்சிகளை முழுமையாகப் புரிந்துகொண்டு அக்டோபர் 8ம் தேதி திருக்கழுக்குன்றக் கூட்டத்தில், ‘கிளைக்கழக செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை சொத்துக்கணக்கு காட்ட வேண்டும்’ என்று புரட்சிக்குரல் எழுப்பினார்.

அன்றைய தினம் லாயிட்ஸ் ரோடு கூட்டத்தில் பேசிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ‘’நான் வறுமையில் உழன்றுகொண்டிருந்த நேரத்திலும் கவலைப்படாதவன். என் நண்பர்கள் வீட்டில் ஒரு நாளைக்கு ஒரு வீடு என்று சாப்பிட்டால் கூட சாகும் வரை சாப்பிட முடியும். நான் இனி சம்பாதிக்க வேண்டியதில்லை. அவ்வளவு நண்பர்களை தொண்டர்களைப் பெற்றிருக்கிறேன். அப்படியிருக்க நான் ஏன் கவலைப்பட வேண்டும்? நான் ஏன் கொள்கையைச் சொல்ல பின் வாங்க வேண்டும்?

தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்திற்கு வாக்கு தாருங்கள். இன்னின்ன கொள்கைகளை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமையில்லையா..?

கழகத்திற்கு வாக்கு தாருங்கள், இன்னின்ன காரியங்களை நிறைவேற்றுவோம். ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னவனே அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு, சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா? திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம். யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. யாருக்கோ என்னுடைய கேள்வி குழப்பத்தை உண்டாக்குகிறது.

மந்திரிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற, ஒன்றிய, நகர கிளைச் செயலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கணக்கு காட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழக பொதுக்குழு ஏன் கேட்கக்கூடாது?..’’ என்று ஆவேசமாகப் பேசினார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். பேச்சில் அனல் பறந்தது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment