எச்சரிக்கையா இருந்துக்கோங்க.
எத்தனை பணம் இருந்தாலும், எத்தனை புகழ் இருந்தாலும் நோய்களின் பிடியில் இருந்து மனிதர்கள் தப்ப முடியாது என்பதற்கு உதாரணம் நடிகர் மம்முட்டி
மலையாளத்தின் முன்னணி நடிகரான மம்முட்டியின் உடல்நிலை பற்றிய கடந்த 2025ம் ஆண்டு ஏகப்பட்ட வதந்திகள் வந்தன. அதாவது, மம்முட்டிக்கு வெளியே சொல்ல விரும்பாத ஒரு உடல்நிலை பாதிப்பு இருப்பதாகவும், அதனால் அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் பேசப்பட்ட்து. ஒரு சிலர் மம்முட்டிக்குப் புற்றுநோய் என்றும் கூறினார்கள்.
இந்த வதந்திகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் மம்முட்டியும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார். சினிமா படப்பிடிப்பு மட்டுமின்றி பொது நிகழ்ச்சிகளிலும் அவரைப் பார்ப்பது அரிதாக மாறியது.
இந்த நேரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மம்மூட்டிக்காகச் சிறப்பு வழிபாடு செய்ததாக செய்திகள் வந்தன. அப்படி என்றால் மம்முட்டிக்கு மிகப்பெரிய உடல்நலப் பிரச்சினை என்று ரசிகர்கள் கவலைப்பட்டனர்.
மம்முட்டியின் உடல்நிலை பற்றி ரசிகர்கள் மிகவும் கவலைப்பட்டிருந்த நேரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம், மம்முட்டிக்கு ஏற்பட்ட பிரச்சினை சரியாகி விட்டதாக அவரது சகோதரர் இப்ராஹிம் குட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் மம்முட்டிக்கு என்ன நோய் இருந்தது என்பதை அவர் சொல்லவில்லை.
அதன் பிறகு, ‘கலம்காவல்’ படத்தில் மம்முட்டி நடித்தார். அந்த படமும் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இப்போது ’பாட்ரியாட்’ எனும் படத்தில் நடித்துவரும் மம்முட்டி, அடுத்த்தாக அடூர் கோபாலகிருஷ்ணனின் ‘படயாத்ரா’ என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு மேடையில், தனக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி மம்முட்டியே விளக்கமாகப் பேசியிருக்கிறார். செவித்திறன் குறைவு உள்ளவர்களுக்கு காது கேட்கும் கருவியை வழங்கும் நிகழ்ச்சியில், மம்முட்டி தனக்கு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பை பற்றி பேசினார்.
இந்த நிகழ்ச்ச்சியில் அவர், “மனிதர்களின் வழ்க்கையில் பார்க்கும் திறனும், கேட்கும் திறனும் மிக முக்கியமானவை. ஒரு சில மனிதர்கள் எதையும் நுகர்ந்து பார்க்கும் தன்மை இல்லாமல்கூட கஷ்டப்படுகிறார்கள். நான்கூட சமீபத்தில் நுகர்ந்து பார்க்கும் திறனையும், ருசியைத் தெரிந்துகொள்ளும் திறனையும் இழந்து நீண்ட நாள் கஷ்டப்பட்டேன். இப்போதுதான் அந்த திறன் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இதுபோன்ற திறன்களை இழக்கும்போதுதான் அதன் முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம்.
ஒருவர் சத்தமாக பாட்டு கேட்கும்போது, அதைக் குறைக்கச் சொல்லி கேட்பது நமக்கு கேட்கும் திறன் இருப்பதால்தான். ஒருசிலர் பாடல்கள் பிடிக்கிறது என்றும், பிடிக்கவில்லை என்றும் சொல்கிறார்கள். செவித்திறன் இல்லாதவர்கள் ஒரு சத்தத்தை கேட்க முடியாதா என்று ஏங்குகிறார்கள். செவித்திறன் இருப்பது என்பது ஒருவருக்கு கிடைக்க்க்கூடிய அனுகிரகம்” என்று கூறியுள்ளார் மம்முட்டி.
இதிலிருந்து உடல்நலக் குறைவு காரணமாகத்தான் கடந்த ஆண்டு பல மாதங்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தார் என்பது நிரூபணமாகி உள்ளது.
மம்முட்டியால் ஏன் மணத்தை நுகரவும், ருசியைத் தெரிந்துகொள்ளவும் முடியவில்லை என்பது தொடர்பாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்று மருத்துவர்களின் கருத்துகளை கேட்டு வெளியிட்டுள்ளது.
மம்முட்டிக்கு ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநர்கள், “வாசனை மற்றும் சுவை உணர்வு குறைபாடு என்பது வெறும் மூக்கு அல்லது நாக்கு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; இது பெரும்பாலும் ஒரு சிக்கலான நரம்பியல் மற்றும் உடலியல் சார்ந்த எதிர்வினையாகும்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 14% முதல் 18% பேர் புதிய வகையான வாசனை அல்லது சுவை அறியும் திறனை இழந்ததாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளில் 50 முதல் 80 சதவீதம் பேர்வரை இப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மம்முட்டி விஷயத்தில் அவரது வயது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 50 சதவீதம் பேருக்கு மணம் அறியும் திறன் குறைகிறது. சில நேரங்களில், இது பார்கின்சன்ஸ் அல்லது அல்சைமர் போன்ற நரம்பியல் குறைபாடுகளின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்” என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மம்முட்டியின் பிரச்சினைகள் விரைவில் முழுவதுமாக தீரட்டும்.
- பி.எம்.சுதிர்
