சாதியில்லா சான்றிதழ் சர்ச்சை
சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி, மதத்தை ஒழிப்பதற்கு கலப்புத் திருமணங்களே சரியான ஆயுதங்களாக இருக்கிறது. இப்படி கலப்புத் திருமணம் செய்தவர்கள் தங்களுடைய சாதிக் குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு, சாதி இல்லை என்று தங்கள் பிள்ளைக்கு சான்றிதழ் வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் கயல் ஆனந்தி அப்படியொரு சான்றிதழ் வாங்கியிருப்பது கடும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
2014 ஆம் ஆண்டு “பொறியாளன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஆனந்தி. ‘கயல்’ படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு கயல் ஆனந்தி என்று பெயர் வந்தது. பின்னர் த்ரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, சண்டி வீரன், விசாரணை, பரியேறும் பெருமாள் போன்ற பல படங்களில் நடித்தார். இதையடுத்து இணை இயக்குநர் சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். அதனை தொடர்ந்து இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் இராவணக் கோட்டம் படத்திற்காக பேட்டி அளித்த கயல் ஆனந்தி, ‘’நான் என்னுடைய மகனுக்கு சான்றிதழில் சாதி இல்லை என்று தான் அதாவது சாதியில்லா சான்றிதழ் தான் பெற்றுள்ளேன். அனைவரும் சாதி பெயரை சுமந்துட்டு இருப்பதை என் மகனுக்கு அது தொடர விரும்பவில்லை. இந்த முடிவிற்கு காரணம் நான் படித்த புத்தகங்களும் நான் சந்தித்த நபர்களும்’ என்று கூறியிருக்கிறார்.
கயல் ஆனந்தியின் முடிவு சரியானது இல்லை என்று பலரும் விமர்சனம் செய்கிறார்கள். அதாவது, ‘’இது போன்ற “No Caste” certificate வாங்குவது பல தலைமுறையாய் படித்து முன்னேறியவர்கள் செய்யட்டும் . ஆனால் ஒரே ஒரு வாய்ப்பு வந்து முதல் தலைமைறை பட்டதாரிகளாகி பணம் வந்தவுடன் நானும் upper class ஆகிவிட்டேன் என மனப்பால் குடித்துக்கொண்டு இந்த கருமத்தை செய்தால் அது முட்டாள்தனம்.
பல்லாயிரம் ஆண்டுகளாக நம் வாய்ப்புகளை பிடிக்க திண்ற ஊதாரி கும்பலிடமிருந்து constitutional பதவிகளில் இருந்த நீதிகட்சி , அம்பேத்கர் , அண்ணா , கலைஞர் , எம்.ஜி.ஆர் , ஜெயா கொண்டு வந்த சட்டங்கள் வழியாக நமக்கு மீண்டும் கிடைத்த உரிமையை நீர்த்து போகச் செய்யும் முயற்சி தான் இந்த “ No caste” certificate ஜிகினா வேலை..’ என்கிறார்கள்.
அதாவது, அடக்கி ஆளும் எண்ணம் கொண்டவர்கள் இருக்கும் வரையில் அடக்கப்பட்டவர்கள் தங்கள் அடையாளத்தை மறைப்பது அல்லது மறுப்பதன் மூலம் சாதியை அழித்துவிட முடியாது. சாதி இல்லாமல் போகும் காலத்தில் தான் ஒடுக்கப்பட்டவர்கள் சாதியில் இருந்து வெளியேற வேண்டும் என்கிறார்கள்.
ஆம், இத்தனை நாட்களும் அதிகாரத்தை ருசித்தவர்களே முதலில் சாதியில்லாதவர்களாக மாற வேண்டும். அதிகாரம் பறிக்கப்பட்டவர்கள் அல்ல.