பாலிடாக்டிலி
ஆறு விரல் இருந்தால் அதிர்ஷ்டம் என்று சொல்வதுண்டு. நாட்டுப்புறத்தில் இதை பணக்கார யோகம் என்றும் சொல்வார்கள். அதேபோல், ஆறு விரல் இருந்தால் அறிவாளி என்று கொண்டாடுவதும் நடக்கிறது. ஆனால், உளவியல் ரீதியாக ஆறு விரல் இருப்பதை அனைவரும் சுமையாகக் கருதுகிறார்கள் என்பதே உண்மை.
மருத்துவரீதியில் கூடுதல் விரலுடன் பிறப்பது பாலிடாக்டிலி (Polydactyly) என்று அழைக்கப்படுகிறது. கைகள் மற்றும் கால்களில் காணப்படும் பொதுவான பிறவிக் குறைபாடுகள். அதாவது கைகளில் அல்லது கால்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் விரல்களுடன் பிறப்பது பாலிடாக்டிலி.
முதன்முதலாக பார்ப்பவருக்கு இது கொஞ்சம் வித்தியாசமாகவும் கவலைக்குரியதாகவும் தோன்றலாம். அதன்பிறகு, மற்றவர்கள் அதை ஒரு பொருட்டாக கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை.
கூடுதல் விரல் அமைப்பு
நிறைய பேருக்கு அந்த கூடுதல் விரல், மற்ற விரல்களைப் போன்று இயல்பாக இல்லாமல் மிகச் சிறியதாக, தோல் மட்டும் இணைந்ததாக இருக்கிறது. சிலருக்கு எலும்பு, மூட்டு, நரம்புகள், நகம் போன்றவற்றுடன் முழுமையாக உருவாகியிருக்கலாம்
பெரும்பாலும் சிறிய விரல் பக்கத்தில் ஆறாவது விரல் இருக்கிறது. அதேபோல் கை பெருவிரல் அல்லது கால் பெருவிரல் பக்கத்தில் அடுத்தடுத்து இரண்டு விரல்கள் இருப்பதுபோல் தென்படும். மற்ற விரல்களுக்கு அடுத்து தோன்றுவது அரிதாகவே காணப்படுகிறது.
காரணங்கள்
பிறவிக் குறைபாடு போன்று குழந்தையாகப் பிறக்கும்போதே கூடுதல் விரல் வளர்ச்சி காணப்படுகிறது. பிறந்த பிறகு புதிதாக யாருக்கும் வளர்வதில்லை. எனவே, இது ஒரு தனித்துவமான வளர்ச்சி மாற்றம் என்றே மருத்துவம் கருதுகிறது. ஜெனிடிக் எனப்படும் மரபியல் காரணமாக குடும்பத்தில் காணப்படலாம்.
கருவில் இருக்கும்போது ஆரம்பகட்டத்தில் இதனை கண்டறிய முடிவதில்லை. ஆனால், குழந்தைக்கு விரல்கள் உருவான நேரத்தில் ஸ்கேன் மூலம் சிலருக்கு தெரியும், சிலருக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. எனவே, பொதுவாக குழந்தை பிறந்த பிறகே தெளிவாகக் கண்டறியப்படுகிறது.
பிரச்னைகள்
கூடுதல் விரல் முழுமையாக வளர்ந்திருந்தால், கை அசைவுகளில் அல்லது பொருட்களைப் பிடிப்பதில் சிரமம் ஏற்படலாம். குறிப்பாக பேனா பிடித்து எழுதுவது, இசைக்கருவிகள் வாசிப்பது, தட்டச்சு செய்வது, சில விளையாட்டுகளில் பங்கேற்பது போன்ற செயல்களில் சிக்கல் ஏற்படலாம்.
அதேபோல் கை மற்றும் காலில் கூடுதல் விரல் இருந்தால் சாக்ஸ் அணிவது, ஷூ அணிவது, சரியான அளவிலான காலணிகளை அணிவது கடினமாகலாம். இதனால் ஏற்படும் உராய்வு காரணமாக வலி அல்லது புண்கள் உருவாகலாம்.
சில நேரங்களில் கூடுதல் விரல் எலும்புகள் மற்றும் மூட்டுகளுடன் இணைந்திருக்கும். இதனால் மூட்டு வலி, விரல் வளைவு, கையின் இயல்பான இயக்கத்தில் குறைபாடு ஏற்படலாம். அரிதாக, கூடுதல் விரலில் நரம்புகள் மற்றும் இரத்த நாளங்கள் சிக்கலான முறையில் அமைந்திருக்கலாம். இதனால் உணர்வு மாற்றம், வலி, விரல் அசைவில் சிரமம் உண்டாகலாம்.
குழந்தைப் பருவத்தில் மற்றவர்கள் கேலி செய்வது, தன்னம்பிக்கை குறைதல், உடல் தோற்றம் பற்றிய கவலை போன்ற உளவியல் விளைவுகள் அனைவருக்கும் கண்டறியப்படுகிறது.
சிகிச்சை
பொதுவாக கூடுதல் விரலுடன் குழந்தை பிறந்தவுடன் எக்ஸ் ரே மூலம் மூட்டு அமைப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்கு மருத்துவர் பரிந்துரை செய்யலாம். அவசியம் இல்லை என்று கருதினால் எந்த பரிசோதனையும் தேவைப்படாது.
கூடுதல் விரல் இருப்பது எந்த ஒரு பெரிய நோய்க்கும் காரணமாக இருப்பதில்லை. அதேபோல் கூடுதல் விரல் இருக்கும் அனைவருக்கும், மரபு ரீதியாக பிறக்கும் குழந்தைகளுக்கு கூடுதல் விரல் இருக்கும் என்பதும் உறுதி கிடையாது.
அதேநேரம், இந்த விரல் தேவையில்லை என்று நினைப்பவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியும். பொதுவாக தோல் மட்டும் இணைந்திருந்தால் அறுவை சிகிச்சை மிகவும் எளிதாக அகற்றலாம். அதேநேரம், எலும்பு, மூட்டு, நரம்புகள் இருந்தால் அறுவை சிகிச்சையைத் திட்டமிட்டு மிகவும் கவனமாக செய்ய வேண்டும். மற்ற விரல்களுக்குப் பாதிப்பு நேராத வகையில் அறுவை சிகிச்சை இருக்க வேண்டும்.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு மற்ற விரல்களில் நல்ல இயக்கம், இயல்பான செயல்பாடு, இயல்பான தோற்றம் கிடைப்பது சாத்தியமாகிறது. எனவே, ஆறாவது விரலை குறையாக அல்லது நிறையாகப் பார்க்கத் தேவையில்லை.
