• Home
  • பணம்
  • ஆளுக்கு ஒரு ரயில் வேண்டுமா..?

ஆளுக்கு ஒரு ரயில் வேண்டுமா..?

Image

வீடு எனும் கூடு

செடிகளில் பூத்துக்குலுங்கும் மலர்களை தரிசித்துக்கொண்டிருந்தார் ஞானகுரு. பின்னே வந்துநின்ற மகேந்திரன், ‘’நீண்ட காலமாக எனக்கென்று ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. வங்கியில் கடன் தர தயாராக இருக்கிறார்கள். என் ஆசை நிறைவேற உங்கள் ஆசி வேண்டும்’’ என்று வணங்கினார்.

‘’நீ ரயிலில் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது… சுகமான பயணம் அமைய வேண்டும் என்றால் முன்பதிவு செய்வாயா அல்லது ஒரு ரயில் பெட்டியை விலைக்கு வாங்குவாயா..?”

‘’எனக்கு ரயில் எதற்காக…? நான் ஒரு பயணி மட்டும்தானே…’’

‘’அப்படித்தான் மகேந்திரா… நீ இந்த பூமிக்கு விருந்தாளி. பயணம் முடிந்ததும் உன் உடுப்பைக்கூட உருவி எரித்துவிடுவார்கள். நீ சம்பாதித்த வீடு, சொத்து, நிலம், பதவி, புகழ், உறவு, நட்பு என எதுவும் உன்னுடன் வரப்போவதில்லை. இந்த உண்மை ஒவ்வொரு மனிதனுக்கும் தெரியும். ஆனாலும், இந்த மண்ணுக்குத்தான் எத்தனையெத்தனை போராட்டங்கள். இன்று நீதிமன்றங்களில் நிலம், வீடு தொடர்பான வழக்குகள் தான் நிரம்பிவழிகிறது. நாட்டை பிடிக்கப்போகிறேன் என்று போருக்குப் போனவர்கள், வென்றவர்கள், தோற்றவர்கள் எல்லோரும் மண்ணுக்குள் இருக்கிறார்கள். யாராலும் இந்த மண்ணை வெல்ல முடியவில்லை…’’ 

‘’நான் எனக்கென்று வாழத்தானே வாங்குகிறேன்..’’

‘’ஒரே ஒரு வீடு என்றுதான் இந்த ஆசை தொடங்கும். இன்னும் கொஞ்சம் பெரிய வீடு, சுற்றிலும் நிலம், எதிர்கால முதலீடு என்று ஆசை வளரும். ஒரே ஒரு வீடு வாங்குவதற்காக தன் வாழ்நாள் முழுவதும் சம்பளத்தில் பாதியை கடன் தவணைக்கு இழந்து, சந்தோஷத்தை தொலைத்த மனிதர்கள்தான் எக்கச்சக்கம். அண்ணன், தம்பி, சகோதரி பாசமாகத்தான் இருப்பார்கள். பெற்றோரின் இடத்தை பிரிக்கும்போதுதான் ஒவ்வொருவரின் கோர முகமும் வெளிப்படும். எனவே, மண்ணாசையை விடு வாழ்க்கை வசப்படும்’’ என்றார்.

‘’வீடு வாங்கினால்தானே மதிப்பு..?”

‘’வீடு வாங்குவதற்கு முக்கால் பங்கு பணம் உன்னிடம் இருக்கிறது கால் பங்கு கடன் வாங்கு. நீ கால் பங்கு வைத்துக்கொண்டு முக்கால் பங்குக்கு கடன் வாங்கினால், வாழ்க்கை உன்னை பார்த்து சிரிக்கும்.’’ என்றார் ஞானகுரு.

குழப்பத்தில் நின்றார் மகேந்திரன்

Leave a Comment