மூளையைத் தின்னுமா அமீபா..?

Image

டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை

சமீபத்தில் கேரளாவில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு நிறைய பேர் பாதிப்புக்கு ஆளானார்கள். அதற்கு காரணமான அமீபாவை தெரிந்துகொள்வோம்.

மூளைக் காய்ச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது, நிக்லேரியா ஃபவுலேரி (Naegleria fowleri) எனும் அமீபா வகை ஒரு செல் உயிரி. இதற்கு “ப்ரைமரி அமீபிக் எண்கஃபாலைட்டிஸ்” (PRIMARY AMOEBIC ENCEPHALITIS) என்று பெயர்.

இந்த நிக்லேரியா அமீபா வகை, வெப்பமான நீர் நிரம்பிய குளம், குட்டைகளில் அதிகம் வாழுகின்றன. இது வெப்பத்தை விரும்பும் அமீபாவாக இருப்பதால், பெரும்பாலும் வெயில் காலங்களில் இந்தத் தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது.

இந்த நிக்லேரியா, தான் உயிர்வாழ எந்த ஒரு உயிரையும் நம்பாமல் தானே உயிர்பிழைத்திருக்கும் வல்லமையுடன் இருக்கிறது. கூடவே நீரின் வெப்பம் 45.8 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தால் கூட அதில் வாழும் தன்மையுடன் இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் வெப்ப நீர் ஊற்றுகளில் கூட இந்த அமீபா உயிருடன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வெப்ப நீரில் வாழும் சயனோபாக்டீரியாக்களை புசித்து இந்த அமீபாக்கள் வாழுகின்றன.

இந்த அமீபாக்கள், வெப்பமான நன்னீரில் தான் வசிக்குமே அன்றி கடல் நீரில் உயிர் வாழ்வதில்லை.

சமீபகாலமாக மாறிவரும் காலநிலை சூழ்நிலை காரணமாக, புவி வெப்பமடைவதால்

குளம், குட்டைகள் முன்பை விடவும் வெப்பமான நீருடன் இருக்கின்றன. கூடவே பொதுமக்களும் வெப்பத்தைத் தகித்துக் கொள்ள இந்த நீர்நிலைகளில் அடிக்கடி குளிக்க வருவதால், இந்த அமீபாவுடன் மனிதர்களுக்கு அதிகம் தொடர்பு ஏற்படுகிறது. இதுவும் தற்போது இந்தத் தொற்று அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

தொற்று எவ்வாறு ஏற்படுகிறது?

நிக்லேரியா அமீபாவானது குளம், குட்டைகள், முறையாகப் பராமரிக்கப்படாத, குளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்கள் ஆகியவற்றில் உள்ள வெப்ப நீரில் வாழுகின்றன.

நீரில் நீச்சல் அடித்துக் குளிக்கும் போது பல நேரங்களில் மூக்கின் நாசியை நீருக்குள் மூழ்குமாறு குளிக்க வேண்டியது வரும். அப்போது இந்த அமீபாக்கள் நேரடியாக நாசிக்குள் சென்றுவிடுகின்றன. நமது நாசிகளுக்குள் க்ரிப்ரிஃபார்ம் தட்டு ( Cribriform plate) எனும் ஓட்டைகள் கொண்ட எலும்பு அமைப்பு உண்டு. இந்த ஓட்டைகள் வழியாக நுகர்தலுக்குத் தேவையான ஆல்ஃபேக்டரி நரம்பில் அமீபா தொற்று ஏற்பட்டு , மிக விரைவாக மூளையைச் சென்று அடைகின்றன. மூளையைச் சென்று அடைந்தவுடன் அங்கு பெரும் அழற்சி நிலையை உண்டாக்கி நாளடைவில் மூளையின் நரம்பு செல்களைச் சிதைவுறச் செய்கின்றன.

குளம், குட்டைகள் மட்டுமன்றி முறையாகப் பராமரிக்கப்படாத அசுத்தமான குழாய் நீரில் இருந்தும் இந்த அமீபா தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சில நேரங்களில், சைனஸ்களில் உள்ள சளியை போக்குவதற்கு

நீரை நாசிக்குள் விட்டு சுத்தம் செய்யும் முறையில் கூட அசுத்தமான நீரை உபயோகித்தால் இந்தத் தொற்று பரவக்கூடும்.

இஸ்லாமியர்கள் தொழுகைக்கு முன்பு “உளு” எனும் உடலைத் தூய்மை செய்வர். அப்போது மூக்கினுள் நீரை செலுத்தும் முறை உண்டு. உளு செய்வதற்கு அமீபா தொற்றுக்குள்ளான நீரை அதன் வழியிலும் தொற்று பரவிய வரலாறுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இந்தத் தொற்று அசுத்தமான நீரைப் பருகுவதால் ஏற்படுவதில்லை. மாறாக அந்த நீர் நேரடியாக மூக்குக்குள் சென்றால் மட்டுமே தொற்று ஏற்படுகிறது. இந்த நோய், ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் நோய் அல்ல.

இந்த நோயின் அறிகுறிகள் யாது?

தீவிர காய்ச்சல்

அதீத தலைவலி

குமட்டல் / வாந்தி

குளிர் நடுக்கம்

பின்கழுத்து இறுக்கம்

ஒளி கண்டு கண்கூசுதல்

மனப்பிதற்றல் நிலை

மூர்ச்சை நிலை

தொற்று ஏற்பட்டு 2 முதல் 15 நாட்களில் நோயின் அறிகுறிகள் தென்படும்.

நோயின் அறிகுறிகள் தென்பட்டதில் இருந்து ஒரு வாரம் முதல் பத்து நாட்களுக்குள் மரணம் சம்பவிக்கும்.

மூளையைத் தாக்கி அழிக்கும் இந்த அமீபா தொற்று அடைந்தவர்களில் இறப்பு விகிதம் 97% ஆகும்.நாசிக்குள் நுழைந்ததில் இருந்து மூளையை அடைவதற்கு மிகக் குறுகிய கால இடைவெளி தான் இருப்பதால் அதற்குள் நோயைக் கண்டறிந்து சிகிச்சையை ஆரம்பிப்பது மிகப்பெரிய சவாலான காரியமாகும்.

மூளைக் காய்ச்சல் ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக தண்டுவட நீரைப் பரிசோதனைக்கு அனுப்பி அதில் இந்த அமீபாக்கள் இருக்கின்றனவா என்பதை சோதனை செய்ய வேண்டும்.

பிசிஆர் ( பாலிமரேஸ் செய்ன் ரியாக்சன் ) பரிசோதனையில் இந்த அமீபாவின் டிஎன்ஏ கூறுகளை வளர்த்து அதன் மூலம் தொற்றைக் கண்டறியலாம்.

எந்த வகை சிகிச்சை அளிக்கப்படுகிறது?

இந்த நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு , ஆம்ஃபோடெரிசின்-பி எனும் மருந்தும், அதனுடன் ரிஃபாம்பின், ஃப்ளூகோனசோல், மில்டிஃபோசின் ஆகிய மருந்துகளைக் கூட்டாக வழங்கும் போது பலன் தருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை இந்தத் தொற்று கண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு 11 பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளதாக ஆய்வுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆபத்தான நோய் , அரிதினும் அரிதானது என்பதையும் பதிவு செய்கிறேன்.

எனினும் இது குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருந்தால், நிச்சயம் இந்த நோய் ஏற்படாமல் தவிர்த்துக் கொள்ள முடியும்.

எப்படி இந்தத் தொற்று ஏற்படாமல் தவிர்ப்பது?

1. வெப்பமான நீர் இருக்கும் குளம், குட்டைகள், ஏரிகள், நீர்நிலைகள் ஆகியவற்றில் நீச்சல் அடிப்பதையும் குளிப்பதையும் தவிர்க்கலாம். ஒருவேளை குளிக்க வேண்டும் என்றால் மூக்குகளுக்கு ப்ளக் அணிந்து கொண்டு முங்கிக் குளிக்கலாம்.

2. சைனஸை சுத்தம் செய்ய மற்றும் தொழுகைக்கு முன் உளு செய்ய சுத்தமான தொற்று நீ‌க்க‌ம் செய்யப்பட்ட நீரை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

3. தங்கும் விடுதிகளில் பொதுஇடங்களில் உள்ள நீச்சல் குளங்கள், பொது நீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்தொட்டிகள் ஆகியவற்றை அவ்வப்போது சுத்தம் செய்து முறையாக குளோரினேற்றம் செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

இதுபோன்ற நீர்நிலைகளில் குளித்த பத்து நாட்களுக்குள் கடும் தலைவலியுடன் தீவிர காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் , நீர்நிலையில் குளித்த வரலாற்றை எடுத்துக் கூறி துரிதமான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.

மீண்டும் கூறுகிறேன். இந்தத் தொற்று நீர்நிலைகளில் குளிக்கும் அனைவருக்கும் ஏற்படுவதில்லை. ஆயினும் வெப்ப மண்டல நாடுகளில், வெப்பமான நீர் நிலவும் நீர் நிலைகளில் இந்த அமீபா வாழ்வதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால் நிச்சயம் நாம் அனைவரும் இது குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

Leave a Comment