• Home
  • யாக்கை
  • சுகப்பிரசவத்திற்கு ஆசைப்படுறீங்களா..?

சுகப்பிரசவத்திற்கு ஆசைப்படுறீங்களா..?

Image

சிக்கல்களை தெரிஞ்சுக்கோங்க

எல்லா பெண்ணுக்குமே சுகப்பிரசவம் ஆகவேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்கிறது. ஆனால், பெரும்பாலான நேரம் சிசேரியன் நடந்துவிடுகிறது. தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

ஆகவே, சிசேரியனுக்கு தூண்டும் வகையில், கர்ப்ப காலத்தில் சில பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. இதனையும் ஏற்றுக்கொள்வதே நல்லது.

  •  பிரசவிக்க நீண்ட நேரமாதல்

முதல் குழந்தையை ஈனும் தாயெனில் அவள் தனது பிள்ளையை பிரசவிக்க குறிப்பிட்ட நேரம் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இரண்டு மூன்றாம் பிள்ளைகளை பெற்றெடுப்பவள் அதை விட குறைவான நேரத்தையே எடுத்துக்கொள்வார். இந்த நேரத்தை கணிக்க partograph எனும் அளவிடும் வரைபடம் பயன்படுத்தப்படும்.

பிரச்சினைக்குரிய காத்திருப்பு நேரத்தை கடந்தால் குழந்தையின்  நலம் தொடர்ந்து சோதிக்கப்படும். தொடர்ந்து வலி சரியாக ஏற்படாமலும் கர்ப்ப வாய் திறக்காமலும் இருந்தாலும்    குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படும். அதனால் குழந்தை இறப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு. இதை தடுக்க இருக்கும் வழி சிசேரியன் சிகிச்சை

  •  தாமத பிரசவம்

ஒரு பெண் கருவுற்றவுடன் அவளது கடைசி மாதவிடாய் சுழற்சி தேதியை கொண்டு அவளுக்கு உத்தேச பிரசவிக்கும் தேதி வழங்கப்படும் . மேலும் அவளுக்கு செய்யப்படும் ஸ்கேன்கள் மூலம் அந்த பிரசவிக்கப்போகும் தேதி உறுதி செய்யப்படும்

இதை dating scan என்போம். இப்படி சரியாக எல்லாம் சென்று கொண்டிருக்கையில்  சிலருக்கு அவர்களது பிரசவிக்கும் தேதியன்று வழிவராது. பலருக்கும் அந்த தேதிக்கு முன்னரே கடைசி மாதத்தில் வலி வந்துவிடும். இப்படி வலி வராத பெண்களை மருத்துவமனையில் அனுமதித்து மருத்துவரின் பரிந்துரையில் ஒரு நாளோ இரண்டு நாளோ காத்திருப்பு நிலையில் வைக்கப்பட்டு அப்போதும் வலி வரவில்லையெனில் சிசேரியன் செய்யப்படுகிறது

நன்கு வளர்ந்த மனித சிசுவுக்கு கருவறைக்காலம் 270 நாட்களேயாகும். அதற்கு மிகவும் முந்துவதோ பிந்துவதோ குழந்தைக்கு நல்லதல்ல.  குழந்தை மூச்சுத்திணறலுக்கு செல்லும் . இறப்பு ஏற்படும். தாய்க்கும் பிரச்சனை ஏற்படுத்தும் வாய்ப்பு உண்டு.  இதை தடுக்கவே சிசேரியன் செய்யப்படுகிறது

  • பனிக்குட நீர் குறைவு

இந்த பிரச்சனை குழந்தை வளர்ச்சி நன்றாக அடைந்து விட்ட கடைசி மாதத்தில் நிகழலாம். காரணம் தாய்க்கு ஏற்படும் நீர் இழப்பு , நோய் தொற்று, காய்ச்சல் , புரதபற்றாக்குறை போன்றவை ஆகும். பனிக்குட நீர் மிகவும் குறைவது குழந்தைக்கு திணறலை ஏற்படுத்தி காட்டுப்பீயை தாயின் கர்ப்பபையிலேயே போக வைத்து அதை குழந்தை உட்கொண்டு உள்ளேயே இறக்கும் வாய்ப்பாகிவிடுகிறது . இதை தடுக்க இருக்கும் ஒரே வழி சிசேரியன் மட்டும்தான்.

அதேபோல் கர்ப்ப காலத்தில் ரத்த கொதிப்பு இருப்பவர்களுக்கு அல்லது சிலருக்கு பிரசவ நேரத்தில் ரத்த அழுத்தம் திடீரென மிக அதிகமாகிறது. இதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு தாயின் உயிருக்கு ஆபத்தாகிறது.  இதை தடுக்க அவசர நிலையில் சிசேரியன் செய்ய நேர்கிறது.  சிலருக்கு இடுப்பெலும்பு நன்றாக பெரிதாக இருந்தும் குழந்தைக்கு தலை கீழாகவே இருந்தும் பிரசவிக்கும் தருவாயில் குழந்தை பல படிநிலைகளைக் கடந்து கீழிறங்கி வருகையில் எங்கேனும் சிக்கிக்கொள்வதை (dystocia) என்கிறோம். இப்படி சிக்கிக்கொண்டாலும் அதன் உயிருக்கு சிக்கல்தான். அந்த சூழ்நிலையிலும் சிசேரியன் செய்யப்படுகிறது

இன்னும் சிலருக்கு பனிக்குடம் பிரசவ வேலை ஆரம்பிப்பதற்கு முன்பே உடைந்து விடும். இதை premature rupture of membrane என் போம்.  இந்த நிலையில் குழந்தை இருந்தால் திணறல் ஏற்பட்டு உள்ளேயே மலம் கழித்துவிட வாய்ப்புண்டு. ஆகவே இந்த நிலையில் இருக்கும் பலருக்கும் சிசேரியன் அவசர தேவையாக செய்யப்படுகிறது இன்னும் இக்காலத்தில் சில சகோதரிகளுக்கு பிரசவ கால வலியைப் பொறுத்துக் கொள்ள இயலாமலும் சரிவர முக்கி குழந்தையை கீழே உந்த முயற்சி செய்வதில் சுணக்கம் காட்டுவதிலும் குழந்தை நீண்ட நேரம் பிறப்புறுப்பு வாசலில் தங்கி மூச்சுத் திணறும் வாய்ப்பு உண்டு. இதனால் தாயின் விருப்பப்படி சிசேரியன் செய்யப்படும் சூழலும் உண்டு.

தேவையான இடத்தில், தேவையான நபருக்கு, சரியான நேரத்தில் செய்யப்படும் சிசேரியன் சிகிச்சைகள் உயிர்காக்க வல்லவை. சிசேரியன் குறித்த முடிவை கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்கும் மகப்பேறு மருத்துவர் எடுப்பது என்பது இரு உயிர்களை காக்கும் நடவடிக்கையாகும். சிசேரியன் இரு உயிர்காக்கும் ( தாய் மற்றும் சேய்)  முக்கிய சிகிச்சை. சிசேரியன் பரவலாக்கப்பட்ட பிறகு இன்னும் சொல்லப்போனால் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் எளிதில் அடையக்கூடிய தூரத்தில் கிடைத்த பிறகு தாய் சேய் மரணங்கள் இந்திய அளவில் பெரும்பகுதி குறைந்திருக்கின்றன.

இன்னும் சிசேரியன் குறித்து சிகிச்சை அளிக்கும் மருத்துவரும் தாய்மாரும்  முடிவு செய்வதே சிறந்த பலன்களைத் தரும். சரியான நேரத்தில் சரியான முறையில் செய்யப்பட்ட சிசேரியன் சிகிச்சையால்  காக்கப்பட்ட சேய் மற்றும் தாயின் உயிர்கள் ஏராளம். எனவே, சிசேரியன் என்றால் அது தவிர்க்க முடியாத ஒன்று என்று ஏற்றுக்கொள்வதே நல்லது.

Leave a Comment