ஞானகுரு பதில்கள்
கேள்வி :
நான் தினமும் 12 மணி நேரம் நின்றுகொண்டே வேலைசெய்கிறேன். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உயிர் வாழ வேண்டுமா..?
- தனபால் ஆறுமுகம், சீர்காழி.
ஞானகுரு ;
நின்றுகொண்டே வேலை செய்வதை கடினம் என்று சொன்னால், சாக்கடை குழிக்குள் முழுமையாக மூழ்கி அடைப்பு எடுக்கும் மனிதர்களின் வேலையை என்ன சொல்வீர்கள்..? சுரங்கத்திற்குள் குனிந்தபடி நுழைந்து, குனிந்துகொண்டே வேலை செய்யும் மனிதர்கள் இருக்கிறார்கள்.
தூர நின்று குப்பையை வீசி எறியும் மக்களுக்கு மத்தியில்தான் முழு நேரமும் குப்பை அள்ளுகிறார்கள் இருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து ஃபிஷர்மேன், ஃபயர் சர்வீஸ், பைலட், ராணுவம் என்று பணியாற்றுகிறார்கள். பணத்துக்காக வேறு ஒரு ஆணுக்கு கொஞ்ச நேரம் உடம்பை வாடகைக்கு விடும் செக்ஸ் தொழிலாளிகள் என உலகில் நிறைய பேர் கஷ்டப்பட்டே உழைக்கிறார்கள்.
ஏசி ரூமில், சொகுசான சேரில் அமர்ந்திருக்கும் ஐ.டி. பணியாளர்கள் ஜாலியாக வேலை செய்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. அவர்களும் கடுமையான மன உளைச்சலில், டென்ஷனுடனே வேலை செய்கிறார்கள்.
கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. இஷ்டப்பட்ட வேலை செய்யுங்கள். எவ்வளவு நேரம் உழைத்தாலும் அலுப்பு தெரியாது. பணம் குறைவாக இருந்தாலும் மனம் நிறைவாக இருக்கும். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
மீண்டும் ஒரு முறை கஷ்டப்பட்டு வேலை செய்வதாக நினைவு வரும்நேரத்தில், வேலை இல்லாமல் எத்தனை பேர் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள், சோகம் காணாமல் போய்விடும்.
