விராட் கோலி போல ஜெயிக்கணுமா..?

Image

ஜெயிச்சவங்க சொல்றாங்க

அறிவுரை சொன்னா கேட்டுக்கணும், ஆராயக் கூடாது என்பார்கள். உண்மை தான். பெரியோர், ஆசான், நண்பர்கள் கூறுபவை எல்லாம் பிரதிபலன் பாராதவை.  கட்டாந்தரையான தரிசு நிலத்தினை உழுது பயிரிட்டு வளம் செழிக்கும் பூமியாக மாற்றுவது போன்று ஒருவரை நல்வழிப்படுத்தும் திறன் அறிவுரைக்கு உண்டு.

 ரஸ்கின் பாண்ட் என்ற ஆங்கில எழுத்தாளர்,  ‘உலகில் உள்ள பல குழப்பங்களை எண்ணிக் கொண்டே போனால் அது குப்பை மேடுபோல காட்சி தந்து வாழ்க்கையில் வெற்றியடைய தடைக்கல்லாக மாறிவிடும். அப்படி உங்கள் பாதையில் வரும் குழப்பங்களை நீர்க்குமிழிபோல எண்ணி மறந்து வீறுநடை போட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக கருதும் விராட் கோலி, சிறு வயதில் டெல்லி கிரிக்கெட் அகடாமியில் சேர அவருடைய தந்தை பலரை பார்த்திருக்கிறார். ஆனால் அவர்கள் எல்லாம் அவருடைய உருவத்தினைப் பார்த்து சந்தர்ப்பம் அளிக்கவில்லையாம். அப்போது அவருடைய அப்பா,  ‘நீ உனக்கென்று ஒரு தனி பாணியில் பயிற்சி எடுத்துக்கொண்டே இரு. உன்னைத் தேடி அவர்கள் வரட்டும்’’ என்று வழி காட்டியிருக்கிறார். அதன் பிறகே, தனக்கென விளையாடத் தொடங்கினார். உலகமே அவர் பின்னே வந்ததை நாம் அறிவோம்.

ஒரு சிலர் தனது தொழிலில் முன்னேற முடியவில்லையென்று குடும்பப் பொறுப்பினை விட்டுவிட்டு சந்நியாசம் போகிறேன் என்று ஒவ்வொரு வணக்கஸ்தலத்திற்கும் போய் காலம் கழிப்பர்.  அப்படிப்பட்டவர்களுக்கு, ‘ஆங்கிலேய பதினெட்டாம் நூற்றாண்டு கவிஞர் லார்ட் பைரோன், ‘read the bible and mind your purse’  அதாவது, நீங்கள் மதப் புத்தகங்கள் படியுங்கள். ஆனால், உங்கள் பையில் காசு இருக்கிறதா என்பதையும்  பார்த்துக் கொள்ளுங்கள் என்ற அருமையான அறிவுரை வழங்கியுள்ளார்.

Harry Potter என்ற ஆங்கில நாவலை எழுதிய ஜே.கே.ரவ்லிங், ‘வாழ்க்கையில் வழுக்கி விழாதவர் எவருமிலர். ஆனால் தோல்வியின் படிப்பினை தெரிந்துகொண்டால் நீங்கள் முன்பைவிட வலிமையானவர் ஆவீர்’ என்று கூறியுள்ளார்.

ஆங்கிலேய எழுத்தாளரும், நன்கொடையாளரும், 400 நிறுவனங்கள் நடத்தும் தொழிலதிபருமான ரிச்சர்ட் ப்ரண்ட்ஸன் தாயார் அவருக்கு ஆரம்பத்தில் சொன்ன அறிவுரை என்னவென்றால்,  ‘நீ ஒரு தொழிலில் நஷ்டம் அடைந்தால், அதனைப் பற்றி கவலைப்படாது, உன்னுடைய முயற்சியில் மறு தொழில் தொடங்குவதில் ஈடுபட வேண்டும்’ என்று சொல்வாராம். அவர் சொன்ன அந்த அறிவுரையினை வேதவாக்காக எண்ணி இன்று  400 தொழில்களுக்கு அதிபராக இருப்பதுடன், அந்த தொழிலில் கிடைக்கும் லாபத்தில் சிறந்த நன்கொடையாளர் என்றும் போற்றப் படுகிறாராம்

  அமெரிக்காவில் கறுப்பின கூடைப்பந்து விளையாட்டில் தலைசிறந்த வீரராக கருதப்படும் மைகேல் ஜோர்டன்,  தற்போது பதினைந்தாயிரம் கோடி செல்வத்துக்கு அதிபராக, வெற்றிகரமான தொழிலதிபராக விளங்குகிறார். அவர் எப்படி தன்னுடைய விளையாட்டில் கொடிகட்டி பறந்தார் என்பதை வாழ்க்கையில் உள்ள படிப்பினையாக கூறும்போது,  ‘தன்னுடைய கூடைப்பந்து விளையாட்டில் கிட்டத்தட்ட 9000 இலக்குகளை தவறவிட்டு 300 விளையாட்டுப் போட்டிகளில் தோல்வியடைந்து உள்ளேன். ஆனால் அதனைப் பற்றி வீணான கவலையில் விழுந்துவிடாமல் தொடர்ந்து விளையாடியதால் பிற்காலத்தில் புகழுடன் விளங்க முடிந்தது’ என்று கூறியிருப்பது ஓர் உலக கூடைப்பந்து ஜாம்பவானும் பல தோல்வியை தழுவிதான் வெற்றிவாகை சூடியுள்ளார்.

அறிவுரை என்பது கையில் இருக்கும் விளக்கு போன்றது. அதை வைத்து எத்தனை மைல் தூரத்தையும் கடந்துவிட முடியும்.

Leave a Comment