பட்டாம் பூச்சியாக மாற வேண்டுமா..?

Image

பொறுமை முக்கியம் பாஸ்

மீன் பிடிப்பதற்கு தூண்டில் முக்கியமில்லை, பொறுமையே அவசியம் என்பார்கள். சரியான தருணம் வரை காத்திருப்பவர்களாலே சரியான அறுவடை செய்ய முடியும். அவசரப்பட்டவர்களின் காரியம் கெட்ட்ப் போய்விடுகிறது.

வெற்றிக்குத் தேவையான முக்கியமான குணங்களில் ஒன்றாக பொறுமை பார்க்கப்படுகிறது. ஏன், இந்த பொறுமை தேவைப்படுகிறது..? காத்திருப்பு என்பது ஒரு வகையில் பயிற்சி. வெற்றிக்குத் தேவையான தகுதியை உருவாக்கும் தருணம் என்றும் சொல்லலாம்.

சீன மூங்கில் செடியை பொறுமைக்கு உதாரணமாகச் சொல்வார்கள். ஏன் தெரியுமா? தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தாலும் ஒரு இஞ்ச் வளர்ச்சிகூட இருக்காது. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அப்படியேதான் இருக்கும் ஆனால், ஐந்தாவது ஆண்டு, திடீரென அசுர வளர்ச்சி அடையும். அதாவது, சுமார் 80 அடி உயரம் வரையிலும் விறுவிறுவென வளர்ந்துவிடும்.

நான்கு ஆண்டுகளாக அமைதியாக இருந்த மூங்கில், ஐந்தாவது ஆண்டு மட்டும் கிடுகிடு வளர்ச்சி அடைந்தது எப்படி..? அங்குதான் இருக்கிறது இயற்கையின் அதிசயம். முதல் நான்கு ஆண்டுகள் அந்த மூங்கில் செடியானது, தனது வேர்களை பூமியில் நன்றாக இறக்கி மிகச் சிறந்த பிடிமானத்தை உருவாக்கிக் கொள்கிறது. ஐந்தாவது ஆண்டில் நான் எண்பது அடி உயரமாக வளரப் போகிறேன். என்னைத் தாங்கிப் பிடிக்கும் வல்லமை என் வேர்களுக்குத் தேவை என அது முழு மூச்சாய்த் தன்னைத் தயாரித்துக்கொள்கிறது.

அதனால் தான் ஐந்தாவது ஆண்டில் அசுர வளர்ச்சி அடையும் போது அது தடுமாறுவதும் இல்லை, தடம் புரள்வதும் இல்லை. அப்படித்தான் மனிதர்களும் பொறுமையுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். பொறுமையே, உயரமான வெற்றிகளை உருவாக்குகிறது. வெற்றிபெற வேண்டும் என்ற இலக்கு அத்தனை மனிதர்களுக்கும் உண்டு. எல்லோருமே அந்த இலக்கை நோக்கியே ஓடுகின்றனர். ஆனால், அந்த லட்சியப் பயணத்தில் பொறுமையுடன் பயணிப்பவர்கள் மட்டுமே முத்துக்களைப் பெறுகின்றனர்.  பொறுமை இழந்தவர்களுக்கு சிப்பிக்களே கிடைக்கிறது.

திறமையான ஒருவரால், ஒருசெயலை நேர்த்தியாக குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியும். ஆனால் அதையே, பொறுமையில்லாத ஒருவரால் நிச்சயம் செய்ய முடியாது. அவசரப்பட்டு செய்யும் எந்த ஒரு  காரியத்திலும்  உணர்ச்சி வேகம் இருக்குமே தவிர, தெளிவும் அறிவுத் திறனும் இருக்காது. திட்டமிடலும் நிதானமும் இல்லாத செயல் தோல்வியைத்தான் தரும்.

ஒரு விதையை மண்ணுக்குள் விதைத்தால் மட்டும் போதாது,  அது பலன்தரும் வரையிலும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் பொறுமை. இந்த பொறுமைக்கு  இலக்கணமாக நமது பூமியை சொல்லலாம். அதனால்தான் பொறுத்தார் பூமியாள்வார் என்கின்றனர், நம் முன்னோர்கள்.


நமக்கு உணவும் தங்கும் இடமும் கொடுக்கும் பூமியை நாம் என்னவெல்லாம் செய்கிறோம்? ஆனாலும், அது பொறுமையிலிருந்து ஒரு கணமும் விலகுவதில்லை. இதைத்தான் அமெரிக்க எழுத்தாளர் ஜாய்ஸ் மேயர், ‘வெறுமனே காத்திருப்பது பொறுமை அல்ல; காத்திருக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதுதான் பொறுமை’ என்கிறார்.

பொறுமையோடு நடந்துகொள்ளும் ஒருவர், தன்னைப் பற்றி மட்டுமே யோசிக்க மாட்டார்; மற்றவர்களுடைய உணர்ச்சிகளையும் கருத்தில் எடுத்துக்கொள்வார். அதனால்தான், அன்பு என்ற குணத்திலிருந்து பொறுமை என்ற குணம் பிறப்பதாக பைபிள் சொல்கிறது.

 நீண்டதூர வாழ்க்கை பயணத்தில்,  நாம் சமதளத்தை மட்டும் எதிர்பார்த்து பயணிக்க முடியாது. சில நேரங்களில் மேடும் பள்ளமும், கரடுமுரடும் குறுக்கிடலாம். அந்த நேரத்தில் நமக்கு துணையாக இருப்பது பொறுமை. சமதளத்தில் வேகமாய்ப் பயணிக்கும் நாம், மற்ற இடங்களில் பொறுமையுடன் பயணிக்க வேண்டும். ஆனந்தம் வரும் நேரத்தில் மட்டுமின்றி, துன்பம், நோய், வறுமை வரும்போது மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். அப்படியில்லையென்றால், அவை பல்கிப் பெருகிவிடும்.

ஆகவே, பொறுமையை கடைபிடித்து வாழ்க்கையை வெல்வோம்.

Leave a Comment