மின்விசிறி டிப்ஸ்
மன்னருக்கு வியர்க்காமல் இருப்பதற்கு பணிப்பெண்கள் இரண்டு பக்கமும் நின்று சாமரம் வீசுவது வழக்கம். இன்று ஒவ்வொரு மனிதனும் மன்னன் ஆகிவிட்டான். ஆம், வீட்டின் ஒவ்வொரு அறையிலும் மின்விசிறி பயன்படுத்தி காற்று வரவழைத்துவிடுகிறான். மின்விசிறி இல்லாமல் ஒருவராலும் இருக்கவே முடியாது என்ற நிலை வந்துவிட்டது.
கிராமம், நகரம், குடிசை, மாளிகை என்று எல்லா இடங்களிலும் பேதம் இல்லாமல் நீக்கமற இடம் பெற்றிருக்கக் கூடிய பொருள் என்றால் அது மின்விசிறிதான். வெப்ப அலை அடிக்கும் தமிழ்நாட்டில் மின்விசிறி ஆடம்பரம் அல்ல; அத்தியாவசிய பொருள். ஆனால், மின்சாரக் கட்டணம் எல்லோரையும் மிரள வைக்கும். இதற்கும் தீர்வு தரும் வகையில் வந்துவிட்டன பில்டிசி மின்விசிறிகள்.
2012-ம் ஆண்டு பிஎல்டிசி BLDC (Brushless Direct Current) இந்தத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டது. மின்சார வசதி குறைவாக உள்ள கிராமப்புற மற்றும் மலைப் பகுதிகளுக்காகவே இதை வடிவமைத்துள்ளார்கள். ஆம், 30 வாட்ஸ் மின்சாரம் இருந்தாலும் இந்த மின்விசிறி இயங்கும். அதாவது சூரிய ஒளி மின்சாரம் மூலம் நேரடியாக இந்த மின்விசிறியை இயக்கலாம். வழக்கமான மின்விசிறிகள் மாற்று மின்சாரத்தில் (AC) இயங்கும். இந்த வகை மின்விசிறிகள் நேரடி மின்சாரத்தில் (DC) இயங்கும். அதாவது பேட்டரி மூலம் கூட இயக்கலாம். எனவே, இவற்றை பயன்படுத்தினால் மின்சாரச் செலவு பாதியாகக் குறையவும் வாய்ப்பு உண்டு.
மின்விசிறியை வாங்கச் செல்வதற்கு முன் அறையின் நீள, அகல, உயரங்களைத் துல்லியமாக அளந்துகொண்டு செல்ல வேண்டும். சில மின்விசிறிகளின் மேல் அட்டையிலேயே எந்த அளவு கொண்ட அறைக்கு எந்த அளவுக்கு நீளமான இறக்கைகளின் பரப்பு தேவை என்று போட்டிருப்பார்கள். அதைத் தேர்ந்தெடுத்து வாங்கலாம் அல்லது அனுபவமிக்க கடைக்காரர் மற்றும் எலெக்ட்ரீஷியன்களின் ஆலோசனைகளைப் பெற்று வாங்கலாம். சிலர் நான்கு இறக்கைகள் கொண்ட மின்விசிறி என்றால் அதிகக் காற்று கிடைக்கும் என்பதாக எண்ணிக்கொள்வார்கள். இது தவறு. அறையின் உயரம் குறைவானது என்றால் நீங்கள் ஃப்ளஷ் மவுண்ட் வகை மின்விசிறியை வாங்கலாம். இவற்றை ஹக்கர் மின்விசிறிகள் என்றும் கூறுவதுண்டு. இவை கிட்டத்தட்ட அறையின் மேல் கூரையை ஒட்டியே இருக்கும். அதாவது மின்விசிறி கீழே தொங்காது.
எட்டு அடியைவிடக் குறைவான சீலிங் கொண்ட அறைகளுக்கு இந்த வகை மின்விசிறிகள் பொருந்தும். தோராயமாகச் சொல்ல வேண்டுமானால், சுமாரான அளவு மற்றும் ஓரளவு பெரிய அறைக்கு வழக்கமான மின்விசிறியே போதுமானது. அதாவது 50லிருந்து 56 அங்குல இறக்கை அளவு கொண்ட மின்விசிறியைப் பொருத்தினாலே அறை முழுவதும் அந்த மின்விசிறி காற்றை அளிக்கும். அறை பெரிதாக இருந்தாலும் மின்விசிறியின் கீழே உட்காருபவர்களுக்கு அதிக காற்று கிடைக்க வேண்டுமென்றால் மீடியம் அளவு மின்விசிறியே போதுமானது. பெரிய அறைகளுக்கு பெரிய மின்விசிறியைப் (60லிருந்து 72 அங்குலம் இறக்கை அளவு கொண்டது) பொருத்தலாம் அல்லது இரண்டு சிறிய அல்லது சாதாரண அளவு கொண்ட மின்விசிறிகளைப் பொருத்தலாம். வீட்டில் யார் மிக உயரமானவரோ, அவர் நன்கு கையை மேலே தூக்கும்போது மின்விசிறியின் கீழ்ப்பகுதிக்கும் அவரது விரல் நுனிகளுக்குமிடையே போதிய இடைவெளி இருக்க வேண்டும்.
சிலர் குளியலறைகளுக்குக்கூட மின்விசிறியைப் பொருத்துகிறார்கள். அப்படி, ஈரம் அதிகமுள்ள அறையில் பொருத்தப்படும் மின்விசிறிகள் துருவுக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்ட பெயிண்ட் அடிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். குளியறையில் பொருத்தாதபோதிலும், கடற்கரைப் பக்கமாக உள்ள வீடுகளில் மின்விசிறிகள் துருப்பிடித்துவிடும். ஆகையால், கவனம் தேவை.
அதுபோல், சிறந்த மின்விசிறிக்கும் சாதாரண மின்விசிறிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதில் முதலில் இருப்பது மோட்டாரின் தரம். தொழில்நுட்பப்படி முறையாக உருவாக்கப்பட்ட மோட்டார் என்றால் மின்விசிறி இரைச்சல் இல்லாமல் சுற்றும். இலகுவாகச் செயல்படும். போதிய காற்றோட்டத்தை அளிக்கும். ஆகையால், காசு குறைவாக இருக்கிறதே என்று எண்ணி தரமில்லாத மின்விசிறிகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
வாங்கிய கொஞ்ச காலத்திலேயே, மின்விசிறி ஆன் செய்யப்பட்டு, ஹம்மிங் ஒலி கேட்டுக் கொண்டிருந்தால் அது தரமற்ற மின்விசிறி என அறியலாம். பொருத்திய சில வருடங்கள் கழித்தும் மின்விசிறி இயங்கும்போது கடகடவென்று சத்தம் வந்தால் அதிலுள்ள பால் பேரிங் தேய்ந்துவிட்டது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதுபோல், மின்விசிறிகளுக்கு எந்தவகை சுவிட்சுகளைப் பொருத்துகிறீர்கள் என்பதும் முக்கியம். பழங்கால மின்விசிறிகளில் ரெகுலேட்டர்களை இயக்கும்போது அதிக வேகத்தில் மின்விசிறியைச் சுற்றினாலும் அதே அளவு மின்சாரம்தான் செலவாகும். இப்போதைய மின்னணு சுவிட்சுகள் வேகத்துக்குத் தகுந்தாற்போல் மின்சாரம் செலவை மிச்சப்படுத்தும்.
தற்போது மக்களைக் கவரும்விதமாக, மின்விசிறியும் மின்விளக்கும் இணையாகவே வருகின்றன. ஆகையால், நம்முடைய மின்சுற்றுக்கு இந்த இரண்டையும் தாங்கும் சக்தி இருக்கிறதா என்பதை அனுபவமுள்ள எலெக்ட்ரீஷியனைக் கேட்டு உறுதிசெய்தபின் அதைப் பொருத்த வேண்டும். மேலும், ஆட்கள் இல்லாதபோது, ஏசி இயங்கும்போது, இயற்கை காற்று முழுமையாக வரும்போது மின்விசிறியை இயக்குவது நல்லதல்ல… அதனால் மின்சார செலவுதான் அதிகரிக்கும். அதுபோல் வெளியே எங்கும் செல்வதற்கு முன் கவனமாய் மின்விசிறி பட்டன்களை அணைத்துவிட்டுச் செல்லலாம்.
பொதுவாக, குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் மின்பட்டன்களை, மின்விசிறி ரெகுலேட்டர்களையும் அமைப்பது நலம். அதுபோல் மின்விசிறியில் படிந்திருக்கும் தூசியால் உடல்நலம் பாதிக்கப்படும். ஆகையால் மாதம் ஒருமுறை அதைத் துடைத்துவிடுவது நல்லது. மின்விசிறி குறித்த இதுபோன்ற குறிப்புகளை நாம் நிச்சயம் கடைப்பிடித்தால், மின்விசிறியையும் பாதுகாக்கலாம்; மின்சார செலவையும் குறைக்கலாம்.