நேரம் எனும் அதிசயம்
நேரத்தின் அருமை உணரவேண்டும் என்பதற்காகத்தான் மனிதர்கள் கையில் கடிகாரம் கட்டிக்கொள்ளும் பழக்கம் உருவானது. ஆனால் கடிகாரத்தை அலங்கார பொருளாகத பார்க்கிறார்களே தவிர, நேரத்தை மிச்சப்படுத்தும் கருவியாக பயன்படுத்துவதில்லை. அதனால் தோல்வி அல்லது ஏமாற்றம் கிடைத்தால், நேரம் சரியில்லை என்று காலத்தின் மீது பழியை போடுகிறார்கள். உண்மையில் என்ன தவறு செய்ததால் தோல்வி ஏற்பட்டது என்பதை பலரும் சிந்திப்பதே இல்லை.
நேரம் போதவில்லை என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக மாணவர்கள் நேர நிர்வாகத்தில் மிகவும் பின்தங்கி இருக்கிறார்கள். எனக்கு மட்டும் இன்னும் கூடுதலாக அரை மணி நேரம் கொடுத்திருந்தால் பரிட்சையில் எல்லா கேள்விகளுக்கும் பதில் எழுதி மாநிலத்தில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றிருப்பேன் என்று சொல்பவர்கள் உண்டு.
மற்றவர்கள் அதே நேரத்தில் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்போது, சிலரால் மட்டும் ஏன் முடிவதில்லை? நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்தாததுதான் காரணம். ஒவ்வொரு பகுதியையும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதி முடிக்கவேண்டும் என்று தீர்மானம் எடுத்திருக்க வேண்டும், அதற்காக எழுதி பழகியிருக்க வேண்டும். ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் தெரியவில்லை என்பதற்காக, யோசித்துக்கொண்டே காலம் கடத்துவது புத்திச்சாலித்தனம் அல்ல. அதனால் நேரத்தை திட்டமிட்டு பயன்படுத்துபவர்கள் நிச்சயம் வெற்றி அடையமுடியும்.
நேரம் பற்றி சொல்லப்படும் இந்த நல்ல கருத்தை கேட்டிருப்பீர்கள். தினமும் கண் விழித்ததும் கிடைக்கும் 24 மணி நேரம் என்பது, உங்கள் வங்கிக்கணக்கில் போடப்படும் 24 ஆயிரம் ரூபாய் போன்றது. இந்தப் பணத்தை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் செலவு செய்யலாம். செலவு செய்யாத பணம் சேமிப்பாக இருக்காது. நிஜமாகவே தினமும் 24 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கிக்கணக்கில் போடப்படுவதாக நினைத்துக்கொள்ளுங்கள். அன்றே நீங்கள் செலவழிக்கவில்லை என்றால் அந்தப் பணம் காணாமல் போய்விடும் என்றால் என்ன செய்வீர்கள்?
நேரத்தை வீணாக்காமல் அவசரமாக உங்களுக்குத் தேவையானதை எல்லாம் வாங்குவீர்கள். அதற்கு மேலும் பணம் இருந்தால் உங்கள் உறவுகள், நெருங்கியவர்களுக்கும் ஏதாவது வாங்கிக் கொடுப்பீர்கள் அல்லது கடனாவது கொடுப்பீர்கள்.. எப்படியாவது 24 ஆயிரத்தையும் செலவழித்தே தீர்வது என்பதில் உறுதியாகவே இருப்பீர்கள்.. ஏனென்றால் பணம் போய்விட்டால் திரும்ப வராதே. இதே போன்றுதான் நேரத்தையும் மனிதர்கள் நினைக்க வேண்டும். இன்றைய நேரம் போய்விட்டால் திரும்பவராது. நாளை என்ற ஒன்று இருக்குமா என்பதும் தெரியாது. அதனால் இன்று கிடைத்திருக்கும் 24 மணி நேரத்தை மிகச்சிறப்பாக பயன்படுத்தும் தெளிவும் உறுதியும் இருக்கவேண்டும்.












