கெட்ட செயல் செய்வதற்கு நல்ல நேரம் பார்ப்பீர்களா..?

Image

காலம் எனும் பொக்கிஷம்

காலம் பொன் போன்றது என்று சொல்வதைவிட, உயிர் போன்றது என்று சொல்லலாம். ஆம், மருத்துவர்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் உயிர் பிழைக்கவைக்கும் அற்புதமாக கருதுகிறார்கள். அதனால்தான் ஆபத்தான நிலையில் நோயாளியை பரிசோதிக்கும் நேரத்தில்,  ‘கொஞ்சம் முன்னாடியே கொண்டுவந்திருந்தா காப்பாற்றி இருக்கலாம்’ என்கிறார்கள்.

 பெஞ்சமின் டிஸ்ரேலி என்ற அறிஞர், ‘நேரத்தைச் சம்பாதித்துக்கொண்டவன், எல்லாவற்றையும் சம்பாதித்துக்கொள்வான்’ என்பார். காரணம், காலம் அத்தனை மதிப்புமிக்கது. காலம், இரண்டு மனிதர்களை அடையாளப்படுத்துகிறது. ஒன்று, சோம்பேறிகளை. மற்றொன்று, வெற்றியாளர்களை. சோம்பேறிகள்,  ‘நேரம் போகவில்லை’ என்கிறார்கள். வெற்றியாளர்கள்,  ‘நேரம் போதவில்லை’ என்கிறார்கள்.

உண்மையில், எல்லோருக்கும் 24 மணி நேரம்தான்.  அதை சிறப்பாக பயன்படுத்திக்கொள்பவர்களே வெற்றியைத் தொடுகிறார்கள்.  நம்மில் பெரும்பாலோனார் நேரத்தை மதிப்பதில்லை. பணத்தைச் சேமித்துவைக்க வங்கிகள் இருப்பதுபோன்று நேரத்தைச் சேமித்துவைக்க  எந்த வங்கியும் கிடையாது. ஆனால், நேரத்தை புத்திசாலித்தனமாய் செலவழிக்க முடியும்.

சகுனம், ஜோசியம் பார்த்து தாமதப்படுத்துவன் மூலம் எந்த மாயாஜாலமும் நிகழப்போவதில்லை. உண்மையில், நேரத்தைத்தான் வீணடிக்கிறோம். இன்னும் சிலர், ‘எனக்கான நேரம் வரவில்லை’ என்பார்கள். அப்படி காத்திருப்பவர்கள், வருடம் முழுவதும் வாழ்க்கை முழுவதும் காத்திருந்தாலும் நல்ல நேரம் வருமா என்பது கேள்விக்குறிதான். பொதுவாக, யாருக்கும் நல்ல நேரம் வாய்ப்பதில்லை. எல்லா நேரத்தையும் அவர்கள்தான் நல்ல நேரமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு, நல்ல நேரத்திற்காக காத்திருக்கும் மனிதர்கள், கெட்ட அல்லது தவறான காரியத்தைச் செய்வதற்கு எந்த நேரமும் பார்ப்பதில்லை. ஓய்வை செலவழிப்பதற்கும் காலநேரம் பார்ப்பதே இல்லை.

24 மணி நேரத்தை எப்படிச் செலவிடுகிறோம் என்பதை கணக்கிட்டாலே போதும், நாம் செய்யும் காரியத்தை செம்மையாக செய்துவிட முடியும். முதலில், நேரத்தை எதுவெல்லாம் வீணடிக்கிறது என்பதை இனம்காண வேண்டும். அதேபோன்று எடுத்த செயலை முடிக்காமல் அரைகுறையாக நின்றுபோவதற்கும், அறவே செய்யாமல் விடப்படுவதற்கும் என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். காலத்தை நம்மால் உருவாக்க முடியாது. ஆனால், அதற்கு மதிப்பு கூட்டுவது தனி நபரின் கையில்தான் இருக்கிறது. நேரத்தின் அருமை பற்றி சொல்லப்படும் இந்த கருத்து என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்கது.

ஒரு விநாடியின் மகிமையை ஓட்டப்பந்தயத்தில் இரண்டாவது வந்தவன் அறிவான். ஒரு நிமிடத்தின் மகிமையை ரயிலை கோட்டை விட்டவன் அறிவான். ஒரு மணி நேரத்தின் மகிமையை விபத்து பிரிவு மருத்துவர்கள் அறிவார்கள். ஒரு நாளின் மகிமையை அன்றாடக் கூலிக்காரன் அறிவான். ஓர் ஆண்டின் மகிமையை படிப்பில் ஃபெயில் ஆன மாணவன் அறிவான்.

காலத்தை பணம் போன்று செலவழிக்க வேண்டும். ஆம், ஒரு செலவு செய்யும்போது ஒன்றுக்கு பலமுறை யோசிப்பது போலவே நேரத்தை செலவிடவும் யோசிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் உங்கள் கையில் 24 மணி நேரம் எனப்படும் 24 லட்சம் ரூபாய் இருக்கிறது. நல்லபடியாக செலவழியுங்கள்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment