ஆடாதோடை அற்புதம்
இயற்கையாக வளரக்கூடிய அரிய வகை மூலிகைகளில் ஒன்றுதான் ஆடாதோடை. ஆடுகள் இந்த இலைகளை சாப்பிடுவது இல்லை. அதனால், ஆடு + தொடா + இலை என்பதே ஆடாதோடை என்று அழைக்கப்படுகிறது. இதுதான் கபத்தைப் போக்கவல்லது. கபம் பாதிப்பு இருந்தால் மூச்சுவிடுவதற்கும் பேசுவதற்கும் பாடுவதற்கும் சிரமமாக இருக்கும். ஆடாதோடை இந்த சிக்கல்களைத் தீர்ப்பதால்தான், ‘ஆடாதோடைக்கு பாடாத நாவும் பாடும்… ஆடாத உடலும் ஆடும்’ என்று ஒரு பழமொழியே தமிழில் இருக்கிறது.
இந்த செடியை அடையாளம் காண்பது மிகவும் எளிது. இதன் இலைகள் மாவிலை போன்ற அமைப்பில் இளம்பச்சை நிறத்தில் காணப்படும். ஒவ்வொரு இலைகளும் சுமார் 15 செ.மீ. வரை வளரக்கூடியவை. இந்த செடி கிட்டத்தட்ட இரண்டு மீட்டருக்கும் மேல் உயரம் வளரும். இந்த இலையை முகர்ந்து பார்த்தால் டீ இலையைப் போன்ற மணம் இருந்தாலும் கசப்பு சுவை கொண்டது. ஆடாதோடை அதிகளவு கரியமில வாயுவை உள்வாங்கி, பிராண வாயுவை வெளியிடுகிறது. இது அதிகளவு ஆக்ஸிஜனை வெளியிடுவதால் இதனை ஆயுள் மூலிகை என்றும் அழைக்கின்றனர். இதன் வேர், பட்டை, பூ, இலை அனைத்தும் மருத்துவத் தன்மை கொண்டது. இந்த மூலிகையை எப்படி கபத்துக்குப் பயன்படுத்துவது என்பதைப் பார்க்கும் முன்பு சளி ஏன் உருவாகிறது என்பதை பார்க்கலாம்.
சளி பிரச்னையால் அவதிப்படாத மனிதர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இந்தப் பிரச்னைக்கு அதிமுக்கியமான காரணம் வைரஸ் கிருமிகள்தான். காற்று, நீர், உணவு மூலமாகவே பெரும்பாலான வைரஸ் கிருமிகள் பரவுகின்றன. சீதோஷ்ண மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், தூசி போன்றவையும் சளியை உருவாக்கலாம்.
வைரஸ் கிருமிகள் உடலுக்குள் நுழைந்ததும் மூக்கை தாக்குகின்றன. மூக்கில் ஏதோ தேவையில்லாத அந்நியப்பொருள் நுழைந்து ஆபத்தை உருவாக்குகிறது என்று மூளைக்குத் தெரியவருகிறது. உடனே நிலைமையை சமாளிப்பதற்காக மூக்கு பகுதிக்கு அதிகப்படியான ரத்த சப்ளையை மூளை அதிகரிக்கிறது. இதனால் மூக்கில் இருக்கும் `டர்பினேட்டுகள்’ விரிவடைந்து சளி திரவத்தை சுரக்கிறது. இதனால் தொடர்ந்து சளி வெளியேறிக்கொண்டே இருப்பது ஜலதோஷமாக அறியப்படுகிறது. சாதாரணமாக சளியானது மனித உடலில் மூக்கு, நெற்றி, தொண்டை மற்றும் நுரையீரல் பகுதிகளில் தேங்குகிறது.
சாதாரண ஜலதோஷத்துக்கு எவ்விதமான மருந்தும் தேவையில்லை. சத்தாண உணவும் ஆவி பிடித்தலும் ஓய்வும் ஜலதோஷத்தை விரட்டிவிடும். அதனால்தான் ஜலதோஷம் குறித்துப் பேசும்போது, ‘சளிக்கு மருந்து சாப்பிட்டால் ஒரு வாரத்தில் நிச்சயம் குணமாகிவிடும், மருந்து சாப்பிடவில்லை என்றால் ஏழு நாட்கள் ஆகும்’ என்று நகைச்சுவையாக சொல்வார்கள்.
இரண்டு அல்லது மூன்று வாரங்களைத் தாண்டியும் ஜலதோஷம் தொடரும்போது, சைனஸாக மாற்றம் அடைவதற்கு வாய்ப்பு உண்டு. சைனஸ் பாதிப்பு ஏற்படும்போது சுவாசிப்பது சிரமமாக இருக்கும். மூக்கு அடைத்துக்கொள்ளும். தலை எப்போதும் பாரமாக இருக்கும். ஒருசிலருக்கு விண்விண் என்று வலி தெரியும். இந்த பிரச்சினையில் சிக்குபவர்களால் எளிதாக சுவாசிக்க முடியாது. சகஜமாக பேசவும் இயலாது, எந்த வேலையிலும் கவனம் செலுத்தமுடியாது.
மூக்கில் உள்ள சைனஸ் அறைகள் அடைத்துக் கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. மூக்கின் நடுவில் இருக்க வேண்டிய தடுப்புச் சுவர் வளைந்து இருத்தல், சைனஸ் அறை வாசலில் சதை வளர்ச்சி மற்றும் தூசி அல்லது ரசாயனப் பொருட்கள் தாக்குவதால் சளி வடியத்தொடங்கும். சாதாரண சளியாக இருந்தாலும் அது சைனஸ் என்ற நிலைக்கு மாறிவிட்டாலும் ஆடாதோடை மூலம் நிச்சயம் குணப்படுத்த முடியும். இப்போதும் கிராமங்களில் மருத்துவர்களும், பாட்டிகளும் ஆடாதோடை இலையை அதிகளவில் சளிக்கான மருந்துப் பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆடாதோடை இலையை பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து குடித்தால் சாதாரண சளித் தொந்தரவு உடனடியாக விலகும். குறிப்பாக நுரையீரலில் சிக்கியிருக்கும் சளியை நீக்குவதில் அதிவேகமாக செயலாற்றல் புரிகிறது. பிராணவாயுவை பிரித்து எடுத்துக்கொண்டு, கரியமில வாயுவை வெளியேற்றும் பணியை நுரையீரல் சீராகவும் சிறப்பாகவும் நடைபெற்றால்தான் ரத்தம் ஆரோக்கியமாக இருக்கும். ஆடாதோடை கஷாயம் தொடர்ந்து எடுத்துக்கொண்டால், அது நுரையீரலின் காற்றறைகளில் சேர்ந்திருக்கும் சளியை வெளியேற்றி, தேவையான ஆரோக்கியம் தருகிறது.
ஜலதோஷம் வந்த பிறகு குணப்படுத்துவது மட்டுமின்றி சளிப் பிடிக்காமல் பாதுகாக்கவும் ஆடாதோடை உதவுகிறது. ஆம், ஆடாதோடை இலையுடன் சம அளவு தூதுவளை இலை எடுத்து காயவைத்து பொடியாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வைரஸ் கிருமிகளால் எளிதில் பாதிப்பு நேராது. அத்துடன் ரத்தத்தில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருட்களையும் வெளியேற்றும்.
சளி காரணமாக இளைப்பு ஏற்பட்டு மூச்சுவிட சிரமம் இருந்தால் ஆடாதோடை பொடியை தேனில் குழைத்து இரண்டு வேளைகள் சாப்பிட்டுவந்தால் விரைவில் குணம் தெரியும். ஆடாதோடை வேரையும், கண்டங்கத்திரி வேரையும் இடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து அத்துடன் திப்பிலி பொடி சேர்த்து அருந்தி வந்தால் வறட்டு இருமல் மற்றும் தொண்டைப் புகைச்சல் குணமாகும். ஆடாதோடை இலைகளை உலர்த்திப் பொடியாக்கி சிறிது நீர்விட்டு குழைத்து நெஞ்சில் பற்றுப் போட்டால், நெஞ்சுச்சளி நீங்கும். ஆடாதோடை இலை, தூதுவளை, துளசி இலைகளை வெயிலில் உலர்த்திப் பொடியாக்கி தேன் கலந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தும்மல், இருமல், இழுப்பு, ஆஸ்துமா நீங்கும்.
சளிப் பிடித்தால் ஏற்படும் முக்கியமான பாதிப்பு தொண்டையில் கீச்கீச். இதனால் உண்டாகும் தொண்டை கரகரப்பு, தொண்டை கமறல், தொடர் இருமலுக்கும் ஆடாதோடை நல்ல மருந்தாகிறது. ஆடாதோடையை தொடர்ந்து கஷாயமாக அல்லது பொடித்து தேனுடன் உபயோகித்து வந்தால் பாதிப்பு தீர்வதுடன் குரல் இனிமையைப் பெறலாம். அதேபோன்று தொடர்ந்து ஆடோதோடை இலையை குடிநீரில் போட்டு குடித்துவந்தால் நல்ல குரல் வளம் கிடைக்கும். குறிப்பாக சொல்வது என்றால் சளியினால் ஏற்படும் அத்தனை பிரச்னைகளுக்கும் ஆடாதோடை அற்புதமான மருந்தாக செயலாற்றல் புரிகிறது.
பயன்படுத்திப் பாருங்களேன்.