மனமே மந்திரம்
துன்பத்துக்கும் தோல்விக்கும் எதிரிகளே காரணம் என்று பலரும் குற்றம் சாட்டுவதுண்டு. எதிரியை மட்டும் அழித்துவிட்டால், வாழ்க்கையில் பிரச்னைகளே இருக்காது என்று நினைப்பார்கள். அதனால், யாரெல்லாம் எதிரிகள் என்று பட்டியல் போட்டுக்கொண்டே இருப்பார்கள்.
ஓர் உண்மை தெரியுமா? எதிரி நமக்கு வெளியில் இல்லை. ஆம். ஒரு மனிதனின் உண்மையான எதிரி அவனிடம் இருக்கும் கோபம், பொறாமை, பொய், சோம்பேறித்தனம், கோள்சொல்லுதல், தற்பெருமை, தன்னலம், அவதூறு பேசுதல், பிறரை உதாசீனப்படுத்துதல், காமம், பேராசை, பெரும்பற்று, அகங்காரம் உள்ளிட்ட பலவீனங்களே ஆகும். இந்த கெட்ட குணங்கள் எந்த மனிதனிடம் குடிகொண்டிருக்கிறதோ, அவையே அவனை தோல்வியடையச் செய்துவிடும்.
எனவே, இந்த குணங்கள் இருக்கிறதா என்பதை நமக்கு நாமே ஆய்வு செய்து, கண்டறிந்து, அவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். இல்லையென்றால், இவை கொஞ்சம் கொஞ்சமாக நம்மை ஆக்கிரமித்து, அடிமைப்படுத்திவிடும். நம்மிடம் இருக்கும் குறைகளை மறைப்பதற்கு பிறர் மீது வீண் பழி போட வைக்கும். ஒரு கட்டத்தில் வீட்டில் இருக்கும் நபர்களையும், நண்பர்களையும் எதிரியாகவே நினைக்கத் தூண்டும். இதுதான் பல ஆபத்தான முடிவுகளுக்குக் காரணமாக அமைந்துவிடும்.
எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்தவனே போரில் வெற்றி அடைய முடியும் என்பார்கள். நமது எதிரி நமக்குள் இருக்கும் கெட்ட குணங்கள் என்பதால், நமது பலவீனங்களை துல்லியமாக அறிந்து கெட்ட குணங்களை வெளியே தள்ளும்போதுதான் வாழ்க்கை இனிமையாக மாறும்.
அதுசரி, இந்த கெட்ட குணங்களை எப்படி விடுவது. சிம்பிள். உதாரணத்திற்கு சோம்பேறித்தனத்தை எடுத்துக்கொள்ளலாம். தினமும் காலையில் 7 மணிக்கு எழுந்து அலுவலகத்துக்கு தாமதமாக செல்வதுதான் பழக்கமாக இருக்கிறதா? ஒரே ஒரு வாரம் மட்டும் காலை 6 மணிக்கு எழுவது என்று சங்கல்பம் எடுத்துக்கொண்டு செயல்படுத்திப் பாருங்கள். காலையில் எந்த பரபரப்பும் இன்றி சந்தோஷமாக கிளம்பவும், அலுவலகத்திற்கு நேரத்திற்கு சென்று நல்ல பெயர் வாங்கவும் முடியும். அந்த ஆனந்த அனுபவத்தை அனுபவியுங்கள். அதே வழியில், ஒவ்வொரு கெட்ட பழக்கத்தையும் விட்டொழித்து, நம்மையே நாம் புதியவர்களாக மாற்றிக்கொள்ள முடியும்.
உண்மையில் நம்மை வெறுப்பவர்கள் நம் பகைவர்கள் இல்லை, நம்மால் வெறுக்கப்படுபவர்களே உண்மையான பகைவர்கள். பிறர் மீது காரணமின்றி கோபப்படாமல், முதலில் நம் உடலில் ஒளிந்திருக்கும் எதிரிகளை விரட்ட வேண்டும். கெட்ட குணங்களில் இருந்து முழுமையாக விடுபடும்போது, நம்மை எதிர்த்து நிற்க எந்த எதிரிக்கும் சக்தி இருக்காது என்பதுதான் உண்மை.
ஆம், அதன்பிறகு உங்களுக்கு போட்டியாளர்கள் இருப்பார்களே தவிர, எதிரிகள் இருக்க மாட்டார்கள்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்.