மனமே மந்திரம்
பயம் இல்லாதவர் போன்று நடிப்பவர் உண்டே தவிர, பயப்படாதவர் யாரும் இல்லை என்பார்கள். இது உண்மைதான். பொதுவாக பயம் என்பது அறியாமை மற்றும் கற்பனையால் உருவாகிறது.
பாம்பு, பல்லி, கரப்பான், இருட்டு, உயரம் மட்டுமின்றி ஒருசிலருக்கு திடீரென மின்சாரம் கட் ஆவதும் பயத்தை உருவாக்கிவிடும். பொதுவாக, அடுத்தது என்ன என்ற எதிர்கால அச்சம்தான் பயத்துக்குக் காரணமாக இருக்கிறது. அதாவது, தொழில் நஷ்டம் அடைந்துவிடுமா, பரீட்சையில் ஃபெயில் ஆகிவிடுவேனா, எனக்கு வாழ்க்கை சரியாக அமையுமா… என்னுடைய வேலை போய்விடுமா… எனக்கு கொரோனா பாதிப்பு வருமா என்று எதிர்கால அச்சம் பயத்துக்கு அதிக காரணமாக இருக்கிறது.

இந்த பயம் கொஞ்சமாக இருப்பது நல்லதுதான். நஷ்டம் ஏற்பட்டுவிடும் என்ற பயம் இருந்தால்தான், தொழிலை அக்கறையுடன் செய்ய முடியும். எதிரே ஒரு லாரி காட்டுத்தனமாக வரும்போது பயம் இருந்தால்தான் தப்பித்து ஓடவோ, ஒளியவோ முடியும். பயம் இல்லை என்றால், தேவையற்ற விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
ஆனால், தேவையற்ற அதீத பயம் மனிதனை செயலற்றவனாக்கிவிடும். பொதுவாக பயப்படும்போது இதயம் அதிகமாகத் துடிக்கும்; உள்ளங்கையில் வியர்க்கும்; படபடப்பு அதிகரிக்கும், உடலில் நடுக்கம் வரும், அழுகை வரும். யாருடைய கண்ணிலும் படாமல் ஓடி ஒளிந்துகொள்ளத் தோன்றும். இப்படியொரு சூழல் ஏற்படும்போது, முன்னே நகரமுடியாத நிலை ஏற்பட்டுவிடும்.
ஆகவே, தேவையற்ற பயத்தை விட்டுத்தள்ள வேண்டும். பயம் ஏற்படும் நேரத்தில், இந்த பயத்தினால் என்ன நடந்துவிடப் போகிறது என நம்மைநாமே கேட்டுக்கொண்டால் போதும். உடலில் தோன்றும் அத்தனை சிக்கல்களும் விலகிவிடும். ஒரு பேய் படம் பார்க்கும்போது பயம் வருகிறதா..? சினிமா தியேட்டரில்தான் நம் இருக்கிறோம் அல்லது டி.வி.யில்தான் படம் பார்க்கிறோம் என்பதை உறுதி செய்துகொண்டாலே போதும், பயம் போய்விடும்.
ஆகவே, பயத்தைத் துணிவுடன் எதிர்கொள்வதே புத்திசாலித்தனம். இமயத்தை வெற்றிகண்ட டென்சிங் இளமைக் காலத்தில் உயரமான கட்டடங்களைப் பார்த்தாலே பயப்படுவாராம். ஆனால், அந்த பயத்தை அவர் போக்கியபின், இமயத்தையே வென்றார்.
கற்றுக்கொண்ட நடத்தை மூலமும் பயம் வருவதுண்டு. ஏதாவது ஒரு நாய் கடிக்க விரட்டிய அனுபவம் கொண்டு, அத்தனை நாய்களையும் கண்டு பயப்படுவது அர்த்தம் இல்லாதது. பயத்தை நீங்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் அது அதிகரித்துக்கொண்டே போகும். உறவினர் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் வந்தால் உடனே தடுத்து நிறுத்துங்கள், அப்படி வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற துணிச்சலை வரவழைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், அவர் இல்லாமல் எப்படி வாழ்வது, என்னென்ன பிரச்னைகள் உருவாகும் என்றெல்லாம் எண்ணங்கள் மேலும் மேலும் பயமுறுத்தும். அதாவது, தேவையற்ற கற்பனையே உங்களை அதிகம் பயமுறுத்தும்.
அதனால், பயம் ஏற்படும்போது சட்டென்று நில்லுங்கள். ஏன் பயம் வருகிறது என்று சிந்தியுங்கள். அந்த பார்வை போதும், பயத்தை வென்றுவிட முடியும்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்