ஞானகுரு தரிசனம்
கேள்வி : நிலா, சூரியன் போன்றவைகளை ஆராய்ச்சி செய்வதால் பூமிக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன… தீமைகள் என்ன..?
- என்.மதன்ராஜன், கள்ளிக்குடி.
ஞானகுரு :
கடலையும் காற்றையும் ஆய்வு செய்த காரணத்தாலே புயலுக்கு முன்னரே மனிதர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப முடிகிறது. விண்ணை ஆய்வு செய்த காரணத்தாலே செயற்கை கோள்களை அனுப்பி, ஒரே நொடியில் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் மனிதர்களைத் தொடர்புகொள்ள முடிகிறது. தோண்டத் தோண்ட ஏதேனும் புதையல் கிடைப்பது போல், எல்லா ஆய்வுகளுக்குப் பின்புலத்திலும் மனிதனுக்கு நன்மை இருக்கவே செய்யும்.
கேள்வி : குழந்தையும் தெய்வமும் ஒன்றாகுமா..?
- எஸ்.பழனிகுமார், மாடர்ன் நகர்.
ஞானகுரு :
கடவுள் அல்லது குழந்தை இரண்டில் ஒன்றுதான் கிடைக்கும் எனில் எது வேண்டும் என்று பெற்றோர்களிடம் கேட்டுப் பாருங்கள். அவர்களுடைய தேர்வு குழந்தையாகவே இருக்கும். எனவே, தெய்வத்தைவிட குழந்தையே உயர்வானது. அந்த குழந்தை பெரியவரானதும், அவர் பெற்றுக்கொள்ளும் குழந்தையை மட்டுமே விரும்புவதும், பெற்றோரை கண்டுகொள்ளாமல் விடுவதும்தான் காலத்தின் விசித்திரம்.