வறுமை அதிகரித்தால் என்னாகும் தெரியுமா?

Image

அதிர்ச்சி தரும் உண்மை


‘ஏதாவது ஓர் இடத்தில் வறுமையில் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது’ என்கிறார் பிரான்ஸைச் சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர், தன்னுடைய இளவயது வறுமைப் போராட்டங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், ஏற்பட்ட விளைவுகளை இச்சமூகத்திற்கு உணர்த்திட 1987ம் ஆண்டு அக்டோபர் 17ல் பாரீஸ் நகரில் வறுமை ஒழிப்பு தினத்தைக் கடைப்பிடித்தார். தொடர்ந்து ஐ.நா. சபையும் 1992ல் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த தினம் உலகமெங்கும் ஆண்டுதோறும் அக்டோபர் 17ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.


முன்பெல்லாம் உண்ண உணவின்றி பசி, பட்டினியால் வாடுவதுதான் வறுமை எனப்பட்டது. தற்போதைய நவீன யுகத்தில் வளர்ச்சியின் பரிமாணங்களில் மாற்றங்கள் ஏற்பட்டதால் வறுமை பற்றிய புரிதலும் மாறியுள்ளது. எனவே, பசியின்மையை மட்டும் வைத்து வறுமையை அளவிட முடியாது. உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், போதிய சுகாதார வசதிகள், ஊட்டச்சத்துகள், வருமானம், கல்வி போன்ற தனிமனிதனின் வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்த நிலைதான் வறுமை எனப்படுகிறது. உலக வங்கி,  ‘குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை அடைய முடியாத திறனற்ற நிலைதான் வறுமை’ என்கிறது.


ஒரு நாட்டின் அல்லது இடத்தின் அடிப்படை வாழ்க்கைத்தரத்திற்குகீழ் வாழும் மக்களை, ஏழ்மை நிலையில் அல்லது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர் என்கின்றனர். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தைவைத்தே வறுமை நிலை அளவு சார்ந்து மதிப்பிடப்படுகிறது. இந்த வருமான அளவு நாட்டிற்கு நாடு மாறுபடும். உலக வங்கி தரவுகளின்படி, 14 பில்லியன் மக்கள் வறுமைக்கோட்டின் மிக அடிமட்டத்தில் வாழ்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் வறுமை என்பது இன்று நேற்று உருவானதல்ல. சங்க காலந்தொட்டு இவ்வறுமை நம் சமூகத்தைத் தொடர்ந்து துரத்தி வருகிறது. அறம் பாடிய அவ்வையார்கூட வறுமை கொடிது என்கிறார். இந்தியாவைப் பொறுத்தவரையில் தனிநபரின் நுகர்வு திறன் அடிப்படையில் வறுமைக்கோடு கணக்கிடப்படுகிறது. கிராமப்புறத்தில் நாளொன்றுக்கு 32 ரூபாயும், நகர்ப்புறத்தில் 47 ரூபாயும் செலவிடமுடியாத சூழலில் இருக்கும் நபர் வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ளவராக அடையாளப்படுத்தப்படுகிறார்.

2012ம் ஆண்டில் உருவாக்கபட்ட ரங்கராஜன் குழுவின் அளவீட்டின் படி ( 2011-12) இந்தியா முழுமைக்குமாக 29.5 சதவீதத்தினர் வறுமைக்கோட்டுக்குக்கீழ் உள்ளனர். இந்திய மக்களில் ஐந்து பேர்களில் ஒருவர், வறுமைக்கோட்டுக்குகீழ் வாழ்கிறார். தவிர, மக்களின் நுகர்வு திறனை 2011-12ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18ல் 3.7 சதவீதம் அளவில் சரிந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கிராமப்புறத்தில் நுகர்வு திறன் 10 சதவீதம் சரிந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் எஞ்சிய ஆண்டுகளில் வறுமைக்கோட்டுக்குகீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கூடுதலாக 3 கோடி பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே சென்றுள்ளனர்.

பொதுவாக, மக்களின் நுகர்வு திறன் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிந்துள்ளது என்பதே அதிர்ச்சியளிக்கக்கூடியதாகும். மக்கள் நுகர்வு திறன் குறைவது என்பது, அந்த நாட்டில் வறுமை அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறி. போதிய வருவாய் ஈட்ட முடியாத நிலையிலேயே மக்களின் நுகர்வு திறன் பாதிக்கப்படுகிறது.
இதற்குக் காரணம், ஒன்று தனிநபர் வருவாய்; மற்றொன்று விலைவாசி. தற்போதுள்ள முக்கிய பிரச்சினை என்னவென்றால் தனி நபர் வருவாய் 7 ஆண்டுகளுக்குமுன் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையில்தான் தற்போதும் இருக்கிறது. குறிப்பிடும்படியாக மேம்படவில்லை. ஆனால் விலைவாசியோ இருமடங்காகிவிட்டது. தவிர, பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு விலைவாசி மேலும் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

உலக வங்கி அறிக்கைப்படி இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமையின் அளவு 25 சதவீதமாகவும் நகர்ப்புறங்களில் 14 சதவீதமாகவும் உள்ளது. ஒட்டுமொத்தமாக 22 சதவீத மக்கள் இந்தியாவில் இன்றும் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் வறுமைக்கு வேலைவாய்ப்பு, வளர்ச்சியின்மை, ஊதியம், சாதி, சமூகம், விலைவாசி, பொருளாதாரம், ஊழல் மற்றும் லஞ்சம், சுயநல அரசியல் என எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனினும், பாரம்பரியத் தொழிலான விவசாயம் அழியும் சூழ்நிலையே வறுமைக்கு முக்கியமானதாக இருக்கிறது.


ஒரு மனிதனின் வாழ்க்கையில் இயல்பாகவே இருக்கும் வறுமை நிலை வேறு; பேராசையால் உண்டாகும் வறுமை என்பது வேறு. இந்தியா இந்த இரண்டிலும் சிக்கித் தவிக்கிறது. ஆகவேதான் ஆப்பிரிக்காவில் உள்ள 26 வறிய நாடுகளில் வசிக்கும் வறியவர்களின் எண்ணிக்கையைவிட பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய எட்டு வடஇந்திய மாநிலங்களில் இருக்கும் வறியவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. சுமார் 42 கோடியே 10 லட்சம் பேர் இம்மாநிலங்களில் வறுமை நிலையில் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கிறது. உலக நாடுகளில் பசியுடன் இருப்பவர் பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகையில், உயர் வர்க்கத்தில் உள்ள 10 சதவீத பிரிவினரிடமே 80 சதவீத சொத்துகள் இருக்கின்றன. இந்த விகிதாச்சாரமே இந்தியாவை மீள முடியாத சுழலுக்குள் தள்ளியுள்ளது. இவை தலைமுறை தலைமுறையாக மக்களை வறுமையில் ஆழ்த்தச் செய்கிறது.
உலக மக்கள்தொகையில் பாதிப்பேரின் ஒருநாள் வருமானம் ரூ.150க்கும் கீழ் உள்ளது. அதேபோல 14 சதவீதம் பேரின் ஒருநாள் வருமானம் ரூ.75க்கும் குறைவாக உள்ளது. இவர்களால் எப்படிக் குறைந்தபட்சத் தேவையைப் பூர்த்திசெய்ய முடியும். எனவேதான் உலகில் நிகழும் மரணங்களில் அதிகம் வறுமையால் ஏற்படுகிறது. உலகில் சுமார் 87 கோடிப் பேர் போதிய உணவின்றியும் 100 கோடிப் பேர் சுத்தமான குடிநீரின்றியும் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய புள்ளிவிபரங்களின்படி உலகில் ஏறத்தாழ 170 கோடிப் பேர் வறுமையிலிருப்பதாகவும் அதில் பாதிப் பேர் தெற்காசியாவிலும் கால்வாசிப் பேர் ஆப்பிரிக்காவிலும் இருப்பதாக ஐ.நா. சபை தெரிவிக்கிறது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வேலையில்லாமல் வறுமையில் வாழும் ஒருவர், சமூகத்துக்கு அச்சுறுத்தலாக மாறும் அபாயமும் உள்ளது. வாழ்வின் மீதும் எந்தப் பிடிப்புமற்று திரியும் இளைஞர்களை அரசியல் கட்சியினர்கள் தங்கள் அடியாட்களாக பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், வறுமை இல்லா இந்தியாவை உருவாக்குவோம்; வளங்களைப் பெருக்க உறுதி பூணுவோம்.

Leave a Comment