அழிந்துவரும் கலை
மனிதனின் கண்டுபிடிப்புகள் எல்லாம் மகத்தானவை. அந்தவகையில், வாசலில் கோலம் போடுதலும் ஒரு மிகச்சிறந்த கலையாகவே கருதப்படுகிறது. பழங்காலத்தில், கோடுகளும் குறியீடுகளுமே கோலத்தின் தொடக்கப் புள்ளியாக இருந்திருக்கிறது. பழங்காலத்தில் பச்சிலைச் சாற்றால் குகைகளிலும், சுவர்களிலும் தீட்டப்பட்ட சித்திரமே, இன்று வாசலுக்கு வருவோரை வரவேற்கும் கோலமாய் வளர்ந்திருக்கிறது; உருமாறியிருக்கிறது.
சங்ககால இலக்கியமான பெருங்கதையில், புள்ளி இனங்களின் பாதச்சுவடுகளைக் கண்டு மக்கள் ரசித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது, ஆறு மற்றும் கடற்கரையில் வாழ்ந்த மனிதர்கள் நண்டு, பூச்சியினங்கள் மண் தரையில் ஊர்ந்துசென்றபோது அது ஏற்படுத்திச் சென்ற சுவடுகளையும், ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் நடந்துசென்ற வழித்தடங்களையும் பார்த்து ரசித்ததாக பெருங்கதை கூறுகிறது. இதன் அடிப்படையிலும் கோலங்கள் (கோடுகள்) உருவாகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
சங்க இலக்கியங்களில் கோலம் என்ற சொல்லுக்கு அழகு, வேடம், சரீரம், தன்மை, நிறம் எனப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன. அதுபோல் கோலம் பற்றிய சொற்களும் நிறைய செய்யுள்களில் இடம்பெற்றிருக்கின்றன. உதாரணத்துக்கு கம்பராமாயணம், சீவக சிந்தாமணி, நாச்சியார் திருமொழி உள்ளிட்டவற்றில் கோலம் பற்றிய வரிகள் இடம்பெற்றுள்ளன. தமிழர்களின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக கவிஞர்கள் இதைச் செய்திருக்கலாம். என்றாலும், உலகுக்கு முதன்முதலாக வாசல் கோலம் பற்றிய செய்தியைப் பறைசாற்றுவது, பெரியாழ்வாரின் திருமொழியும், ஆண்டாளின் நாச்சியார் திருமொழியுமே ஆகும்.
கோலம் என்பது அரங்கம், மணல், புனல், அனல் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டிருக்கிறது. நடன அரங்கில் போடப்பட்டதே, அரங்கக் கோலம் (அரங்கம் + கோலம்). இது, ரங்கக் கோலம் என மருவி இன்று, வட இந்தியாவில் ரங்கோலியாகி நிற்கிறது. மேலும், கால மாற்றத்தினால் இன்று புள்ளிக்கோலம், மாக்கோலம், அரிசிக்கோலம், பூக்கோலம் என விரிவடைந்திருக்கும் கோல வகைகள், கொஞ்சும் இளம்குமரிகளைக்கூட, அதிலிருந்து கொஞ்சமும் விலகாமல் கட்டிவைத்திருக்கிறது.
தொடக்கத்தில், மாட்டுச் சாணத்தைக் கொண்டு வீடு, வாசல்களை மெழுகிய மக்கள், அதன்மீது அழகுசெய்ய ஏதாவது வரிவடிவங்களை வரைந்திருக்கலாம். பின்னர், காலப்போக்கில் அதுவே கோலமாய் மாறியிருக்கலாம் என மண்சார்ந்து சொல்லக்கூடிய மனிதர்களின் வாதங்கள்கூட ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது. மன்னர்கள் தங்கள் ஆட்சியுடனான எண்ணங்களைக்கூட, கோலங்களாகத் தொடர்புபடுத்தி இருந்திருக்கலாம் எனப் புலவர்கள் கூறும் விளக்கங்களும் நம்பக்கூடியதாகவே இருக்கிறது.
எது எப்படியோ, உண்மையில் தமிழன் கண்டுபிடித்த அனைத்தும் இன்று அறிவியலுடன் சார்ந்தே இருக்கிறது. அதை, பல ஆய்வாளர்கள் எடுத்துக்கூறுவது தமிழர்களுக்குக் கிடைத்த பெருமை. வாசலில், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக வரையப்பட்ட கோலம், மண்ணில் ஊறும் உயிரினங்களுக்கும் உணவாகவும் இருந்திருக்கிறது என்பது அறிவியல் ஆய்வாளர்கள் கூறும் செய்தி. எறும்புகளும், பறவைகளும் வீட்டுக்குள் நுழைந்து பொருட்களை தின்னாமல் இருப்பதற்காக, வாசலில் அரிசி மாவினால் கோலம் போட்டிருக்கலாம் என்று சொல்லப்படும் செய்தியில், எத்தனை உண்மையும் அன்பும் நிறைந்திருக்கிறது.
தமிழன், தமக்கான உணவுப் பொருட்களைப் பாதுகாத்ததுடன், தம்மை நம்பி வந்த ஜீவராசிகளுக்கும் படியளந்திருக்கிறான் என்பது இதன்மூலம் நிரூபணமாகிறது. அதுமட்டுமின்றி, அன்று பெண்கள், அதிகாலையிலேயே எழுந்து ஏன் கோலம் போட்டனர், என்ற செய்திதான் மருத்துவம் புதைந்த மகத்துவமாக இருக்கிறது. அதிகாலை வேளையில் வீசக்கூடிய காற்றானது தூய்மையாக இருக்கும். அந்த சமயத்தில் கிடைக்கும் சுத்தமான பிராண வாயுவை சுவாசிக்கும் பொருட்டே விடியற்காலையில் பெண்களை எழவைத்து கோலம்போட வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக, மார்கழி, தை மாதங்களில் மிக நல்ல தரமான பிராண வாயு கிடைக்குமாம். இதனால் பெண்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு வழி கிடைக்கும் என்கிறது மருத்துவ அறிவியல்.
ஆனால், இன்று பல வீடுகளில் கோலமே போடுவதில்லை. அப்படியே போட்டாலும் முதல் நாள் இரவே போட்டுவிடுகிறார்கள். இல்லையென்றால், கோலம் போடுவதற்கென்றே சம்பளம் கொடுத்து வேலையாளை நியமிக்கிறார்கள். ஆனால், கோலம் போடுவதே யோகா செய்வதற்குச் சமம் என்கின்றனர், அக்கலை பயிற்சியாளர்கள். அவர்கள் குனிந்து எழுந்து கோலம் போடுவதால் உடலை வில்லாக வளைக்க முடியும் என்பதுடன், ஆரோக்கியமாகவும் வாழ முடியும் என்று நம்பிக்கை தருகின்றனர், அவர்கள்.
புள்ளிகளையும் கோடுகளையும் கொண்டு போடப்பட்ட கோலங்கள் தமிழரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் பண்பாட்டின் அடையாளமாகவும் திகழ்ந்தன. அதன் வெளிப்பாடு, இன்று உலகம் எங்கிலும் பரவிக்கிடக்கிறது. கனடா நாட்டின் ரொரண்டோ நகரில், உலகிலேயே மிகப்பெரிய கோலத்தை தமிழர்கள் வரைந்து சாதனை படைத்தனர். அது, தமிழர்களின் புகழை மேலும் எடுத்துரைத்தது.
மதுரையில் அங்கையிற்கண்ணி கோயிலின் நுழைவாயிலின் உள்ளே 5,625 புள்ளிகளைக் கொண்டு அந்தாதி முறையில் வரையப்பட்ட பெரிய கோலத்தை கண்டு , அன்றே வெளிநாட்டினர் வாய் பிளந்து போயினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில், ஆதிவாசியினர் தங்கள் உடல்மீது பல கோலங்களை வரைந்து நடனம் ஆடுகின்றனர். ஆம், அந்தக் கலை இன்றும் உலக நாடுகள் அனைத்திலும் ‘டாட்டூ’வாய் வளர்ந்து நிற்கிறது. இதற்குக் காரணம், நம் தமிழன் வைத்த புள்ளிதான். உதாரணத்துக்கு நேர்புள்ளி வரிசையில், ஆயிரம் புள்ளிகள் அடங்கிய ஒரு கோலத்தை ஓரிடத்தில் தொடங்கி அத்தனை புள்ளிகளையும் சுற்றி வளைத்து வரும்போது, அது தொடங்கிய இடத்திலேயே வந்து முடியும். இதுதான் தமிழனின் கண்டுபிடிப்பு.
இதைக் கண்ட வெளிநாட்டினர் பெண்மணி ஒருவரிடம், ‘இப்படி வரைய யார் உங்களுக்குக் கற்றுக்கொடுத்தது’ என வினவியுள்ளனர். அதற்கு அவர், ‘என் அன்னையே எனக்கு குரு, என் அன்னைக்கு என் மூதாதையரே குரு’ என்று சொல்லியுள்ளார். அதைக் கேட்டு வியந்த அவர்கள் தமிழரின் திறமையை பெரிய அளவில் மதிப்பிட்டுச் சென்றனர்.
கோலத்தில் அந்தாதி கோல வகைகள், உலகில் எங்கும் காண முடியாத அரிய கலைச் செல்வமாகும். அவ்வகையான கோலங்களை, நான்கு புறத்திலும் இருந்து பார்த்தாலும் மாறுபடாது. கேரளாவில் ஓணம் பண்டிகையின்போது போடப்படும் அத்தப் பூ கோலமானது, காய்கறிகள், பழங்கள், வண்ண மலர்கள் கொண்டு போடப்படுகிறது. இதற்காக நிறைய இடங்களில் இருந்து மலர்கள் கொண்டுவரப்படுகின்றன. இது, கேரள மாநிலத்தின் சிறப்பாக இருக்கிறது. இப்படி, தமிழர்களின் வாழ்வோடு இரவுபகலும் இணைந்திருக்கும் கோலம், இன்றைய நகரப் பெண்களிடமிருந்து சற்று நகர்ந்தே இருக்கிறது.
கோலம் போடும் அளவுக்கு வீடுகள் இல்லை, மனம் இல்லை. அதோடு ஸ்டிக்கர் கோலமே போதும் என்ற நிலை வந்துவிட்டது. கால மாற்றத்தில் எல்லாம் ஏற்கத்தக்கத்தே.