மூங்கில் மருத்துவம் தெரியுமா?

Image

இது ரொம்பவே புதுசு



மாறிவரும் காலச் சூழலில் பழைமைக்கும், பாரம்பரியத்திற்கும் மனித இனம் திரும்பிக்கொண்டிருக்கிறது. இயற்கை கொடுத்துள்ள கொடைகளின்மூலம் மக்கள் அவற்றின் பயனை அறிந்து மாற்றம் அடைவதுடன் முன்னேறியும் வருகின்றனர். ஏழைகளின் மரம் என அழைக்கப்படும் மூங்கிலும், இயற்கையின் கொடை ஆகும். . மூங்கிலின் பயன்பாடுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 18ம் தேதி உலக மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.

மூங்கில், புல் வகையைச் சேர்ந்த ஒரு மரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும். இதில், சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம்வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1,000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன. தமிழகத்தில் 9 வகை மூங்கில்கள் பயிரிடப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மற்ற தாவரங்கள்போல் இல்லாமல் மூங்கில் நடவு செய்த 3 வருடத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வந்துவிடும். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம்வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். ஒரே நாளில் 250 செண்டிமீட்டர்கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர்.

ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம்வரை வளரும் காலமே 59 நாட்கள்தான். கடல் மட்டத்திற்கு மேல் 4,000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். மற்ற மரங்களைக் காட்டிலும் மூங்கில் மரம் அதிக அளவு கரியமில வாயுவை எடுத்துக்கொண்டும், அதிக அளவிலான பிராணவாயுவை வெளியேற்றும் தன்மை கொண்டது. மூங்கில் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. சீனா, இந்தியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா,நேபாளம், பங்களாதேஷ், கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன. இந்தியாவில் 156 வகை மூங்கில் இனங்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா மாநிலங்கள் முதலிடம் பெற்று நிற்பவை.

வீடுகள் கட்டுவதற்கும், கைவினைப் பொருட்கள் செய்வதற்கும் மூங்கில்கள் பயன்படுகின்றன. சிறு தொழில் மற்றும் குடிசைத் தொழில்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்களிலும் மிக முக்கியப் பொருளாக மூங்கில் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும், கிட்டத்தட்ட 1,500 வகையான பயன்களை மூங்கில் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். இந்தியாவில் வளரும் மூங்கில்கள் தொழிற்சாலைகளுக்குத்தான் பெரும்பாலும் பயன்படுகின்றன. 40 சதவிகிதம் மூங்கில்கள் காகிதத் தொழிற்சாலைகளிலும், மரக்கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் மூங்கிலைக் கொண்டு கட்டப்படுகின்றன. ஸ்பெயின் நாட்டின், மார்டிரிட் நகர விமான நிலையத்தின் ஒரு பகுதி, மூங்கில் கூரையால் அமைக்கப்பட்டுள்ளது. தவிர, உலகளவில் மூங்கில் வீடுகள் பிரபலமாகி வருகின்றன. சமீபத்தில் சில நாடுகள் சாலை அமைக்க மூங்கிலைப் பயன்படுத்துகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத சாலைகளாக இவை இருக்கின்றன. இந்தச் சாலைகளில் 16 டன் எடைகொண்ட வாகனம் செல்ல முடியும் எனவும் கண்டுபிடித்துள்ளார்கள். சீனாவில் உள்ள மின் சியாங் மூங்கில் பாலம் உலகளவில் நீளமான பாலமாக இருக்கிறது. மூங்கில் மூலம் ஆடைகளும் தயாரிக்கப்படுகின்றன.

மூங்கிலால் ஆன  ஆடைகள் தற்போது நேரடியாக இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. ஆனால் சீனாவில் இருந்து மூங்கில் நூல் இறக்குமதி செய்யப்பட்டு நெசவு செய்யப்படுகிறது. இந்த ஆடைகள் கோடைக்காலங்களில் உடலுக்கு குளிர்ச்சி தருபவையாக இருக்கின்றன.  இளம் மூங்கில் குருத்துகள், இலைகள் ஆகியன பாண்டா, சிவப்பு பாண்டா, மூங்கில் லெமூர் விலங்குகளின் முதன்மையான உணவாகும். எலிகளும் இவற்றின் பழங்களை உண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மூங்கில் அரிசி, மூங்கில் குருத்து போன்றவை உணவாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது. சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேத மருத்துவத்திலும் இதன் பங்கு அளப்பரியது. பிணி தீர்க்கும் மருந்தாகவும் மூங்கில் செயல்படுகிறது. மூங்கில் இளங்குருத்துகளை  கசாயம் தயாரித்து தொடர்ந்து அருந்திவந்தால், முறையற்ற மாதவிடாய், வெள்ளைப்படுதல் போன்றவை விரைவில் நிவர்த்தியாகும்.

மூங்கில் மரத்தின் இலைகளைக் கஷாயம் போட்டு குடித்து வந்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்வு பெறும். வாயுக் கோளாறுகள், வயிற்று உப்புசம், வயிற்றுவலி, வயிற்றுப்பூச்சிகள் என அனைத்துக்கும் சிறந்த மருந்து. மூங்கில் இலைச் சாற்றை உள்மருந்தாகவும், வெளிமருந்தாகவும் மூட்டுவலிக்கு பயன்படுத்தலாம். மூட்டுவலி, இடுப்புவலி, நரம்பு வலி போன்றவற்றிற்கும் சிறந்த மருந்து. மூங்கிலின் இளந்தளிர்களை நசுக்கிப்பிழிந்து சாறெடுத்து, அதை அழுகல் புண்கள்மீது வைத்துக் கட்ட புண்களும் வெகு சீக்கிரம் ஆறும்.
பச்சைத் தங்கமான மூங்கில், பலருக்கும் வாழ்வாதாரம் தரக்கூடியது.

Leave a Comment