வாழ்க்கை சூத்திரம்
மகன் அல்லது மகளுக்குத் திருமணம் முடித்த பிறகு அதாவது 50 வயதைத் தாண்டிய பிறகே பலருக்கும் வாழ்க்கையில் ஒரு நிதானம் வருகிறது. அந்த நிதானத்தை தொடர்ந்து கடைபிடிப்பவர்களுக்கே வாழ்க்கையின் சூத்திரம் புரிபடுகிறது. சூத்திரம் அறிந்துகொண்டவர்களுக்கு ஞானம் கிடைக்கிறது.
அப்படி வாழ்க்கையை புரிந்துகொண்டவர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பது தெரியுமா..?
* உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம் கொடுப்பார்கள். நாக்கு ருசிக்காக இதுவரை சாப்பிட்டுவந்த எண்ணெய் பலகாரம், ஃபாஸ்ட் ஃபுட், செயற்கை குளிர் பானம் போன்றவற்றை தவிர்க்கத் தொடங்குவார்கள்.
* முடிந்த வரையிலும் அதிக நேரம் தூங்குவதற்கு ஆசைப்படுவார்கள். ஏனென்றால், அதுவே உடலுக்கு ஆரோக்கியமும் மனசுக்கு புத்துணர்வும் கொடுக்கும்.
* வாகனம் ஓட்டுபவர்களாக இருந்தால் வேகமாக ஓட்டுவதை தவிர்த்து, நிதானமாக ஓட்டுவார்கள். சீட் பெல்ட் போடுவது, ஹெல்மட் போடுவது, சிக்னலில் நிற்பது போன்ற எல்லா சட்டதிட்டங்களையும் கடைபிடிப்பார்கள்.
* திருமணம், விழா போன்றவைகளுக்கு அழைப்பு கொடுத்தவர்களுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், சரியான நேரத்திற்கு ஆஜராவார்கள்.
* உடலில் தோன்றும் சின்னச்சின்ன வலி, வேதனை, பிரச்னைகளை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள்.
* புதிய ஆடை அல்லது புதிய வாட்ச் போன்று தேவையில்லாத பொருட்கள் வாங்குவதை முடிந்த வரையிலும் தள்ளிப் போடுவார்கள்.
* நான் இல்லாவிட்டாலும் வீடு, அலுவலகம் எல்லாமே நன்றாகவே இயங்கும் என்ற உண்மை புரிந்திருக்கும், எனவே தன்னை முன்னிலைப்படுத்த மாட்டார்கள்.
* கேட்காத ஒருவருக்கு ஆலோசனை, அறிவுரை சொல்லத் தேவை இல்லை என்பதை தீவிரமாக கடைபிடிப்பார்கள்.
* ரோட்டோர வியாபாரிகள், ஆட்டோ டிரைவர்கள், பூக்காரர்களிடம் பேரம் பேசுவதை நிறுத்திவிடுவார்கள். அவர்களுக்கு கூடுதலாக கொஞ்சம் பணம் தருவதன் மூலம் நாம் இழப்பதற்கு எதுவுமில்லை. ஆனால், அந்த குறைந்த பணம் அவர்களுக்கு நிறைய சந்தோஷம் தரும் என்ற எண்ணத்துடன் செயல்படுவார்கள்.
* யாரேனும் பிச்சை என்று கை நீட்டினால், அவர்கள் ஏமாற்றுகிறார்களா என்று ஆராய மாட்டார்கள். கையில் பணமோ, சில்லரையோ இருந்தால் எடுத்துக் கொடுத்துவிடுவார்கள். இல்லையென்றால், தன்மையாக இல்லை என்பதை சொல்வார்கள்.
* சின்ன வயதில் செய்த சாகசங்களை, சின்ன வயதில் பட்ட கஷ்டங்களை, வாழ்க்கையில் பெற்ற வெற்றிகளை யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று விரும்ப மாட்டார்கள்.
* யாராவது ஒருவர் சொல்வது தவறு என்று தெரிந்தாலும், அதை உடனே தடுத்து நிறுத்த மாட்டார்கள். அவராக அனுபவப்பட்டு திருந்தி வரட்டும் என்று அமைதி காப்பார்கள். ஒருவேளை, நான் நினைப்பது தவறாகவும், அவர் சொல்வது சரியாகவும் இருக்கலாம் என்ற எண்ணமும் வரும்.
* உணவு சுமாராக இருந்தாலும், நன்றாக இருக்கிறது என்று பாராட்டுவார்கள்.
* ஒருசிலர் பேசுவதை தவிர்க்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இதைவிட முக்கியமான ஏதேனும் வேலை இருக்கலாம் என்று அவர்கள் கோணத்தில், பார்ப்பார்களே தவிர, அவர்கள் மீது கோபம், ஆத்திரம் வராது.
* யாராவது அவமானப்படுத்தினால் அல்லது சண்டை போட்டால் எதிர்த்துப் பேசும் மனநிலை வராது. அமைதியாக கடக்கும் நிதானம் வந்துவிடும்.
* யாரும் தனக்கு துணையாக எங்கேயும் வருவதில்லை, யாரும் தன் மீது அக்கறை காட்டுவதில்லை என்ற எண்ணம் மறைந்துவிடும். தனக்கு, தான் மட்டுமே நிரந்தரம் என்ற உண்மை புரிந்துவிடும்.
* தன்னுடைய சந்தோஷத்துக்கும் துன்பத்திற்கும் நான் மட்டுமே காரணம். மகிழ்ச்சியாக இருப்பதற்கு யாரும் அல்லது எதுவும் தேவையில்லை என்ற உண்மைபுரிந்துவிடும்.
இந்த விஷயமெல்லாம் 40 வயதிலேயே புரிந்திருந்தால், வாழ்க்கையை இன்னும் சிறப்பாக வாழ்ந்திருக்கலாம் என்ற உண்மை புரியும். ஆனால், 40 வயதில் இதையெல்லாம் யாராவது வந்து சொல்லியிருந்தாலும், கேட்டிருக்க மாட்டோம் என்பதும் புரியும்.
இதுதான் வாழ்க்கை, இதுதான் மகிழ்ச்சி.